”வேலைவாய்ப்பின்மை முதல் மனஅழுத்தம் வரை” சென்னையில் அதிகரிக்கும் தற்கொலைகள் - காரணம் என்ன?

”வேலைவாய்ப்பின்மை முதல் மனஅழுத்தம் வரை” சென்னையில் அதிகரிக்கும் தற்கொலைகள் - காரணம் என்ன?
”வேலைவாய்ப்பின்மை முதல் மனஅழுத்தம் வரை” சென்னையில் அதிகரிக்கும் தற்கொலைகள் - காரணம் என்ன?

பல விஷயங்களில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்த தமிழகம் இன்று தற்கொலை பட்டியலில் இராண்டாம் இடம் பிடித்துள்ளது. அதில் சிறப்பு என்னவென்றால் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இந்திய நாட்டின் பெரும் பலமே மக்கள் தொகைதான். அந்த பெரும் பலமே இவ்வாறான படுகுழியில் விழுவதற்கு காரணம் என்ன என்பதை அலசமுற்பட்டோம்.

டெக்னாலாஜியின் பங்கு இதில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் அவர்களிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது “ இங்கு வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் மட்டுமல்லாது பிற வயதினரும் தற்கொலைக்கு ஆட்படுகின்றனர். ஆன்லைனில் வேலைவாய்ப்பிற்காக ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அதில் வேலைவாய்ப்பிற்காக பிரபலமாக பார்க்கப்படும் இணையதளங்கள் போன்றே போல போலியான இணையதளங்களும் உலா வருகின்றன.

வேலைவாய்ப்பிற்காக அதனை அணுகும் நபர்கள், இறுதியில் ஏமாற்றமடைந்து பெருந்தொகையை இழக்கின்றனர். இவ்வளவு ஏன் எனக்குத் தெரிந்த பிரபல நிறுவனத்தில் நல்ல நிலையில் இருந்த ஒருவர், தனது பதவிக்காக 80 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இந்த ஏமாற்றங்கள் தற்கொலைகளில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மற்றொரு காரணம் ஆன்லைன் மிரட்டல். ஆன்லைன் மூலம் நமது அந்தரங்கப் படங்களைத் திருடும் கும்பல் அதனை வைத்து சம்பந்தப்பட்டவரிடம் பேசி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இது போன்ற சம்பவங்களிலும் ஏராளாமான தற்கொலைகள் நிகழ்கின்றன.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மிரட்டல் விடுக்கும் பெரும்பாலானோருக்கு உங்கள் பயமே ஆதாரம். அதனை வைத்தே அவர்கள் உங்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்க முடியும். ஆகவே பணத்தை முன் வைத்து மிரட்டும் பெரும்பான்மையான நபர்கள் உங்களது அந்தரங்கங்களை ஆன்லைனில் வெளியிட மாட்டார்கள். ஆகவே பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு தைரியத்துடன், பிரச்னையை தீர்ப்பதற்கு முன் வர வேண்டும். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், உங்களை குறித்த பதிவுகள் எதுவானாலும், அதனை 20 நிமிடத்தில் இணையத்தில் இருந்து தூக்கி விட முடியும். ஆகவே அது குறித்தான அச்சத்தை பற்றி கவலை கொள்வது அவசியமற்றது.

இன்னொரு காரணம் அதிகப்படியான தகவல்கள் - இணையத்தில் கிடைக்கும் அதிகப்படியான தகவல்கள் மூலம் மாணவர்கள் அதிகப்படியாக முதிர்ச்சி அடைகின்றனர். அந்த முதிர்ச்சியின் போக்கில் செல்லும் மாணவர்கள் எதிர்பார்க்கும் விளைவு வேறு ஒன்றாக இருக்கிறது. அந்த விளைவு பெளதிக உலகில் கிடைக்காத போது அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனாலும் தற்கொலைகள் அரங்கேறுகின்றன.

ஆதலால் டெக்னாலாஜியால் நீங்கள் ஏதேனும் பாதிப்பைச் சந்திக்கும் போது செய்ய வேண்டியவை:

1. முதலில் அமைதியாக அமர்ந்து பாதிப்பு குறித்து யோசியுங்கள். 

2. அதன் பிறகு அது குறித்து உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களிடம் பேசுங்கள்.

3. நீங்கள் தற்கொலை செய்து கொண்டால் அந்தப் பாதிப்பு அத்தோடு முடியப்போவதில்லை என்பதையும், உங்களது இறப்பு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை புரிந்து கொண்டு முன்னேறுங்கள்.

இந்தியாவின் பெரும் பலமே மக்கள் தொகைதான். அது தான் பிற நாடுகளின் டார்க்கெட். அதற்காக பப்ஜி போன்ற ஆப்களை இந்தியாவில் வெளியிட்டு இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கின்றனர். ஆகவே மாணவர்களிடம் அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். நமது இளைஞர்களில் 50 சதவீத இளைஞர்கள் சுயத்தொழில் செய்தாலே இந்தியாவின் பொருளாதாரம் எங்கேயோ போய் விடும்.” என்றார்

இது குறித்து பாலியல் உணர்வு சார்ந்த மற்றும் உடல் மனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ரேகா பத்ம நாபனை தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர் கூறும் போது “ நீங்கள் மனம் குறித்த விழிப்புணர்வை அடையாமல், பெளதிக உலகில் கிடைக்கும் பொய்யான விடயங்கள் மீது கவனம் செலுத்துவதால் ஏற்படும் பிரச்னை இது. தொடர்ந்து மனதில் தேங்கும் குப்பைகள் அதன் எல்லைகளை உடைக்கும் போது ஏற்படுவதுதான் தற்கொலை எண்ணம்.

நமது பூமி அதற்கான ஆன்மீகத்தில் உச்சம் கண்ட பூமி. ஆனால் அதைப் பற்றி பேசினாலே மக்கள் நம்மை வேறு விதமாக பார்க்கின்றனர். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் தீர்வு இங்குதான் இருக்கிறது. ஆகவே நல்ல குருவை கண்டடைந்து ஆன்மாவை மிகைப்படுத்தும் ஞானத்தை அடையும் கண்டடையுங்கள் என்றார்.

தற்கொலை தூண்டலில் உணவின் பங்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

 - கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com