அதிகரிக்கும் ஆபாச செயலிகள்... குறிவைக்கப்படும் இளைஞர்கள்! - ஓர் அலர்ட் பார்வை

அதிகரிக்கும் ஆபாச செயலிகள்... குறிவைக்கப்படும் இளைஞர்கள்! - ஓர் அலர்ட் பார்வை
அதிகரிக்கும் ஆபாச செயலிகள்... குறிவைக்கப்படும் இளைஞர்கள்! - ஓர் அலர்ட் பார்வை

தொழில்நுட்பம் வளர வளர செல்போன்களில் கையடக்கமாக நல்லதும் கெட்டதும் உலா வருகின்றன. ஆனால், இப்போதுள்ள இளைஞர்களோ கெட்டதையே அதிகம் தேர்ந்தெடுப்பதாகவும் ஒரு பார்வை இருக்கிறது. ஏனென்றால், இளைஞர்களை வைத்தே வகை வகையான மோசடிகள் நடைபெறுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.

அந்த வகையில், செல்போன்களில் ஆபாச ஆப்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில், ஏராளமான இளைஞர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாவது போல அந்த மாதிரியான ஆப்களுக்கும் அடிமையாக இருக்கின்றனர். அடிமையாக இருப்பது மட்டுமல்ல; பணத்தையும் இழந்து வருகின்றனர். இதில் ரூ.1000 முதல் லட்சக்கணக்கில் மோசடி நடப்பது தெரியவருகிறது.

இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு கடந்தாண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டினர். ஆனால், இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளும் கடும் கட்டுப்பாடுகளும் 'ஆப்'களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆம், ஆபாசங்கள் ஆப் வடிவில் செல்போன்களுக்கே நேரடியாக வந்துவிடுகின்றன.

பெரும்பாலும் இதுபோன்ற ஆபாச ஆப் வலைகளில் சிக்குவதற்கு, நடிகைகளின் சாதாரண கிளாமர் ஆப்களே என்றும் கூறப்படுகிறது. நடிகைகள் தங்களது பெயரில் ஆப்களை அதிகாரபூர்வமாக உருவாக்கி, அவற்றில் கிளாமரான படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுபோன்ற சாதாரண ஆப்களுக்குச் செல்பவர்களை விளம்பரங்கள் மூலம் மோசமான ஆபாச ஆப்களுக்கு திசைதிருப்பிவிடப்படுவதாகவும் தெரிகிறது.

அண்மையில்கூட தமிழில் 'தாஜ்மஹால்' படத்தில் அறிமுகமாகி பரிச்சயமான நடிகை ரியா சென் சொந்தமாக ஒரு செயலியைத் தொடங்கியுள்ளார். இதுபோன்ற ஆப்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இவர், பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இதன் காரணமாக தன் பெயரிலேயே ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதனால் நல்ல வருமானமும் வந்தது. இதற்கு அடுத்தகட்டமாக தன்னுடைய செக்ஸி வீடியோக்களையும் வெளியிட்டார்.

இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ.1000 வரை செலுத்த நேரிடும். ஏறக்குறைய 10 லட்சம் பேர் பூனம் பாண்டேவின் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இவர் தொடங்கி வைத்த புள்ளிதான், இப்போது ஏராளமான மாடல்களும், நடிகைகளும் தங்கள் பெயர்களில் செயலிகளை உருவாக்கி வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் வருமானம் பெற்று வருகின்றனர்.

இப்போது, தமிழிலும் இந்தியிலும் பல படங்களில் நடித்த தற்போது மார்க்கெட் இழந்த நடிகை ஒருவர்கூட தன்னுடைய பெயர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் குறிப்பிட்ட அளவிலான கட்டணம் கட்டினால் அந்த நடிகையுடன் வீடியோ சாட்டிங்கும் செய்யலாம்.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆபாசப் படங்கள் குறிப்பிட்ட சில திரையரங்குகளில்தான் வெளியாகும். அந்தப் படத்துக்கு 18 வயதுக்கு மேற்பட்டோரை மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் இணையத்தில் ஆபாச வலைதளங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவை இப்போது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், புதிய புதிய பாணியில், சாதாரண பொழுதுபோக்கு செயலிகள் என்ற போர்வையில் ஆபாச ஆப்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் மட்டும் ஆபாசப் படங்களுக்கென பிரத்யேக ஓடிடிக்கள் ஏராளமாக கடந்த ஓராண்டில் வந்துள்ளதாகவும், ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட ஆபாச ஓடிடிக்கள் கூகுள் பிளேவில் நிரம்பி இருக்கின்றன என்றும், இதுபோன்ற ஆபாசங்கள் மூலம் இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற செயலிகளை நாடுவதன் பின்னாலுள்ள உளவியல் குறித்தும், இதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்தும் உளவியல் ஆலோசகர் நப்பின்னை கூறும்போது, "இது ஒருவிதமான பாலியல் வக்கிரம்தான். பெண்களிடம் நேரடியாக பாலியல் தொடர்பில் இருக்க தயங்குபவர்கள், நம்முடைய பெயர் வெளியே தெரிந்துவிடுமோ என பயப்படுபவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற ஆபாச தளங்களை நாடுகிறார்கள். இதுபோன்ற ஆபாச செயலிகள் மூலம் பார்ப்பவர்கள் வெளியே பார்ப்பதற்கு நல்லவர்கள் போல் இருப்பார்கள் மிகவும் சாதாரணமாக நடந்துக்கொள்வார்கள். ஆனால் ஆழ்மனதில் பாலியல் வக்கிரங்கள் நிரம்பி இருக்கும். இதனை Cheap Thrill என்று உளவியல் ரீதியல் கூறுவோம்.

இதுபோன்ற ஆபாசங்களை பார்ப்பது அதிகரிக்க காரணம், தன்னுடைய அடையாளம் வெளியே தெரியாது என்பதுதான் பிரதானமாக இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிக்காமல் போவதே இப்போதுள்ள சூழ்நிலையின் காரணமாக இருக்கிறது.

இப்போது எல்லாவிதமான செயலும் நியாயப்படுத்துவதுதான் தவறுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இதுவும் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையானது போன மனநிலைதான் ஆபாசத் தளங்களுக்கும் அடிமையானவர்களும். நாளடைவில் ஆபாசத் தளங்களை பார்ப்பதற்கு அடிமையானவர்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தலாம், இதற்கும் உண்டுதான். ஆனாலும் இதிலிருந்து மீள்வதற்கு தனிமனித ஒழுக்கமே முக்கியம்" என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com