ஸ்டார்ட் அப் இளவரசிகள் 1: ஜோனா ஹாஃப்மன் - ஸ்டீவ் ஜாப்ஸின் வலது கரம்!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 1: ஜோனா ஹாஃப்மன் - ஸ்டீவ் ஜாப்ஸின் வலது கரம்!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 1: ஜோனா ஹாஃப்மன் - ஸ்டீவ் ஜாப்ஸின் வலது கரம்!

'ஸ்டார்ட் அப்' புரட்சியில் பெண் தொழில்முனைவோரின் பங்களிப்பை அடையாளம் காட்டும் தொடர்தான் 'ஸ்டார்ட் அப் இளவரிசிகள்'. ஸ்டார்ட அப் எனப்படும் புத்திளம் நிறுவனங்களின் வளர்ச்சிக் கதை பற்றி பேசப்படும்போதெல்லாம் அதன் வெற்றிக்கு வழிவகுத்த நாயகர்கள் பேசப்படும் அளவுக்கு நாயகிகள் பேசப்படுவதில்லை. எனினும், பெண் தொழில்முனைவோர்களை மறந்துவிட்டு ஸ்டார்ட் அப் உலகின் வெற்றிக்கதையை முழுவதுமாக எழுத முடியாது. கம்ப்யூட்டர்களின் துவக்க காலத்தில் இருந்தே அதன் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியமாக இருந்துள்ளது எனும் பின்னணியில் பார்த்தால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்று புரியும். தொழில்நுட்பம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் எனும் கருத்து இணைய உலகில் வலுப்பெற்று வரும் நிலையில், ஸ்டார்ட் அப் பயணத்தில் தனித்திறமையோடு சாதித்த பெண்களின் வெற்றிக்கதையை இந்தத் தொடரில் அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்தத் தொடரில் சர்வதேச சாதனை பெண்களையும் பார்க்கலாம், அவர்களுக்கு சற்றும் சளைக்காத இந்திய ஸ்டார்ட் அப் இளவரிசிகளையும் தெரிந்துகொள்ளலாம்.

ஜோனா ஹாஃப்மன்: கம்ப்யூட்டர் அபிமானிகளைப் பொறுத்தவரை 'ஆப்பிள்' என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். கூடவே, சமகாலத்தவர்கள் என்றால் ஐஃபோனும், முந்தைய தலைமுறையினர் என்றால் ஆப்பிளின் அடையாளமான மேகிண்டாஷ் (Macintosh) கம்ப்யூட்டரும் நினைவுக்கு வரும். தொழில்நுட்ப உலகில், 'மேக்'கின் அறிமுகம் ஒரு மைல்கல் மட்டும் அல்ல, நாமறிந்த வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் யுகத்தின் துவக்கப்புள்ளிகளில் ஒன்றாகவும் அமைகிறது. மேக் புராணம் பற்றி பேசும்போது, ஜாப்ஸ் மற்றும் அவரது சகா வாஸ்னியோக் பற்றி எல்லாம் பேசுவது போலவே, தவறாமல் நினைவுகொள்ள வேண்டிய இன்னொரு ஆளுமையும் இருக்கிறார். அவர்தான் ஜோனா ஹாஃப்மன் (Joanna Hoffman).

தனித்துவமான ஆளுமை: 'மேக்' எனும் நவீன கம்ப்யூட்டரின் முன்மாதிரியை உருவாக்கிய மூலக்குழுவில் ஜோனாவும் இடம்பெற்றிருந்தது மட்டும் அல்ல, இந்த படைப்பிற்காக ஆப்பிள் அபிமானிகளால் ஆதர்ச நாயகனாக கொண்டாடப்படும் ஸ்டீவ் ஜாப்ஸுடன் அச்சமின்றி வாதம் செய்து தனது கருத்துக்களை முன்வைத்தவராகவும் ஜோனா போற்றப்படுகிறார்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் வரலாற்றில், குறிப்பாக அந்நிறுவனத்தை வரையறுத்த மேகிண்டாஷ் மாய கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் துணைப் பாத்திரங்களில் ஒருவராக அமைந்தாலும், ஜோனா இல்லாமல் ஜாப்ஸ் கதையையும் பேச முடியாது, மேகிண்டாஷ் கதையையும் விவரிக்க முடியாது. இந்தக் காரணங்களுக்காக ஸ்டீவ் ஜாப்ஸின் வலது கரம் என வர்ணிக்கப்படும் ஜோனா, தன்னளவில் தனித்துவமான ஆளுமையாக விளங்குகிறார்.

மேகிண்டாஷ் உருவாக்கத்தின்போது ஜாப்ஸுடன் தோளோடு தோள் நின்றதோடு, ஆப்பிளில் இருந்து ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டபோதும், அடுத்து அவர் துவக்கி 'நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்திலும் துணை நின்ற ஜோனா, தொழில்நுட்ப உலகில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்குகிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸை எதிர்த்துப் பேசத் தயங்காதவர் என புகழப்படும் ஜோனா, இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஃபேஸ்புக்கின் தீங்கான அம்சங்களையும் கடுமையாக விமர்சிக்க தயங்கவில்லை. ஜோனாவின் பார்வையில் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கதையை திரும்பி பார்ப்பதன் மூலம் தொழில்நுட்ப உலகில் அவரது இடத்தையும் பங்களிப்பையும் சரியாக புரிந்துகொள்ளலாம்.

கற்றலில் பேரார்வம்: வர்த்தக அமெரிக்காவை வளர்த்தெடுத்த பல முன்னோடிகளைப் போலவே ஜோனா ஹாஃப்மனும், அந்நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தவர்தான். ஐரோப்பிய நாடான போலந்தில் பிறந்து, சோவியத் ஆர்மீனியாவில் வளர்ந்த ஜோனா, 15-வது வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். ஜோனாவின் தந்தை போலந்தில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். அவரது அம்மாவும் திரையுலகைச் சேர்ந்தவர்தான்.

அமெரிக்காவில் வந்திறங்கிய நாட்களில் ஜோனா எதிர்கொண்ட சோதனைகள் அதிகம் என்றாலும், இன்னல்களுக்கு நடுவே விதியின் கரம் அவருக்கு வழியாட்டியது. ஐரோப்பியாவில் இருந்து வந்திருந்தால் ஜோனாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. 'நன்றி' எனும் ஒற்றை வார்த்தையை மட்டும் ஆங்கிலத்தில் அறிந்த நிலையில், பள்ளியில் அவர் ஏழாவது வகுப்பில் சேர்ந்தார். ஒரு மாதத்தில் அவர் எட்டாவது வகுப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

எட்டாவது வகுப்பில் ஒரு மாதம் ஆன நிலையில், அங்கிருந்த ஆலோசகர், "நீ இங்கு படிப்பதைவிட தனியார் பள்ளியில் படிக்க தகுந்த மாணவி" என சொல்லி அனுப்பி வைத்துவிடுகிறார். இதற்காக அவருக்கு என்றென்னும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஜோனா நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். மோசமான சூழலில் அமைந்திருந்த பள்ளியில் இருந்து வெளியேறியவர், தனியார் பள்ளிக்கான தேர்வெழுதி ஊக்கத்தொகையும் பெற்றார். ஆங்கிலம் தெரியாத நிலையில், ரஷ்ய மொழி மற்றும் ஆங்கில மொழி அகராதிகளை வைத்துக்கொண்டு தேர்வெழுதிய கதையை அவர் உற்சாகமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அதன்பிறகு ஜோனாவுக்கு எல்லாமே சரியாக அமைந்தது. உயர் கல்விக்காக அவர் அகில உலகமும் அறிந்த எம்.ஐ.டி பல்கலை.க்கு வந்து சேர்ந்தார். எம்.ஐ.டி-யில் பயின்ற அனுபவம் பற்றி ஜோனா விவரிப்பதை படித்தால் உற்சாகமாக இருக்கும். கற்றலிலும் லயித்த மனதின் கட்டற்ற சுதந்திரத்தின் வேட்கையை அதில் உணரலாம்.

"எம்.ஐ.டி. பற்றி எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது. மற்ற மாணவர்கள் எல்லோரையும் பிடித்திருந்தது. ஹாஸ்டல் அறையை நேசித்தேன். போஸ்டன் நகரை நேசித்தேன். கேம்ப்ரிட்ஜ் பிடித்திருந்தது. எல்லாவற்றையும் நேசித்தேன்" என்று கூறியிருக்கிறார் ஜோனா.

எம்.ஐ.டி-யில் படித்தவர், எந்த வகுப்பை வேண்டுமானாலும் கவனிக்கலாம் எனும் வாய்ப்பை பயன்படுத்தி, தினமும் வெவ்வேறு பாடங்களிலான ஏழு வகுப்புகளை ஆர்வமுடன் கவனித்திருக்கிறார். அப்படியே அருகாமையில் இருந்த ஹார்வர்டு பல்கலை.யிலும் சேர்ந்து படித்திருக்கிறார்.

'ஹார்வர்டில் இருந்த அருமையான நூலகத்தில் நுழையும் வாய்ப்பை பெறுவதற்காக எந்த வகுப்பிலும் சேர்ந்து படிக்கத் தயாராக இருந்தேன்' என்றும் கூறியிருக்கிறார். இதுதான் வாழ்க்கை, இங்குதான் இருக்க வேண்டும் என உணர்ந்ததாகவும் அவர் இந்தக் காலம் பற்றி பரவசத்துடன் விவரித்திருக்கிறார். அதுமட்டும் அல்ல, எம்.ஐ.டி-யில், மார்வின் மின்ஸ்கியின் (செயற்கை நுண்ணறிவு முன்னோடி) மாணவர்களுடன் சேர்ந்து பயில முடிந்ததாக கூறியுள்ளார்.

அதன் பிறகு, சிகாகோ பல்கலை.யில் சென்று மேற்படிப்பு படித்தார். ஜோனாவின் கல்லூரிக் காலம் கற்றலில் ஆர்வம் கொண்ட எவருக்கும், குறிப்பாக சிறகடித்து பறக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஜோனா அகழ்வராய்ச்சியாளராகத் தயாராகிக் கொண்டிருந்தார் என்பதுதான். ஆம், அவருக்கு இயற்பியல், மொழியியல், மானுடவியலில் பின்புலம் இருந்த நிலையில், மனிதவியல் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று, அகழ்வராய்ச்சி ஆய்வு மாணவராக சேர்ந்திருந்தார். இதனிடையே, ஈரானில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளவும் வாய்ப்பு வந்தது.

கேள்வியின் நாயகர்: ஈரான் அரசியல் சூழல் காரணமாக அமெரிக்க திரும்பியவர், எம்.ஐ.டி-யில் தனக்கிருந்த தொடர்புகள் மூலம் 'சிலிக்கான் வேலி' என அழைக்கப்படும் கலிபோர்னியாவில் அமைந்திருந்த ஜெராக்ஸ் பார்க் ஆய்வு மையத்தில் தன்னார்வலராக சேர்ந்தார். காலம் அவரை சரியான இடத்தில் கொண்டு சேர்த்ததாக கொள்ளலாம். ஏனெனில், இங்கிருந்துதான் அவரது தொழில்நுட்ப வாழ்க்கை துவங்குகிறது.

இங்குதான் அவர் ஜெப் ராஸ்கினை (Jef Raskin) சந்தித்தார். இதன் பயனாகதான் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ராஸ்கின் முன்வைத்திருந்த புதிய கம்ப்யூட்டர் உருவாக்க குழுவில் இணைந்தார். பின்னாளில் அந்தக் குழுவை வழிநடத்திய ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை சந்தித்தார்.

இந்த இடத்தில், அந்தக் காலகட்டத்தை (1980கள்) கொஞ்சம் நினைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள், மைக்ரோ கம்ப்யூட்டர்கள் என சுருங்கி பி.சி எனப்படும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் யுகம் துவங்கியிருந்தது. அப்போது பெரிய நிறுவனமான ஐ.பி.எம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது என்றாலும், கம்ப்யூட்டரில் விளையாடிப்பார்க்கும் ஆர்வம் கொண்டிருந்த திறமையும், கனவுகளும் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் புதியன படைக்க முயன்றுக்கொண்டிருந்தனர்.

இத்தகைய இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு குழுதான் ஆப்பிள் கம்ப்யூட்டரை நிறுவியிருந்தது. ஆப்பிள் ஏற்கெனவே 'ஆப்பிள் 1' கம்ப்யூட்டர் மற்றும் 'லிசா' கம்ப்யூட்டரை அறிமுகம் செய்திருந்தது. ஆனால், இவை எல்லாம் முன்னோட்டம்தான்; ஆப்பிளின் மிகப்பெரிய சாதனையாக அமையவிருந்த மேகிண்டோஷுக்கான ஆயுத்தப்பணிகள் அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இந்தப் பின்னணியில்தான், ஜெராக்ஸ் பார்க் ஆய்வு மையத்தில் ராஸ்கினை ஜோனா சந்தித்தார். ராஸ்கின் ஒன்றும் சாதாரணமான மனிதர் இல்லை. கம்ப்யூட்டர்களுக்கான முக்கிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் பேசிக்கிற்கான (BASIC) வழிகாட்டி புத்தகத்தை எழுதியவர். தூக்கத்தில் எழுந்து கேட்டால் கூட, கம்ப்யூட்டர் பற்றியும், புரோகிராமிங் பற்றியும் பேசக்கூடியவர். அப்படிப்பட்ட ராஸ்கினையே ஜோனா தனது கேள்விகளால் துளைத்தெடுப்பவராக இருந்தார்.

ஜெராக்ஸ் நிறுவனம் நகலெடுக்கும் இயந்திரங்களுக்காக அறியப்பட்டாலும், கம்ப்யூட்டர் வரலாற்றிலும் மைல்கல்லாக விளங்கும் நிறுவனம். எல்லா துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு தலைதூக்கத் துவங்கிய காலத்தில், எதிர்காலத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் நுட்பங்களை உருவாக்கும் ஆய்வுக் களமாக, ஜெராக்ஸின் பாலே ஆல்டோ ஆய்வு மையம் (பார்க்-PARC) அமைந்திருந்தது.

கம்ப்யூட்டர் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்திய ஜெராக்ஸ் பார்க், அவ்வப்போது பலவித தலைப்புகளில் உரைகளுக்கும் ஏற்பாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. தேடலும், அறிவு தாகமும் உள்ள மாணவர்கள் இந்த உரைகளை கேட்க ஆர்வத்துடன் திரள்வதுண்டு. இத்தகைய உரை நிகழ்வுகளில், ராஸ்கினுக்கு அறிமுகமான ஜோனா, குறிப்பிட்ட ஓர் உரையின்போது, பல்வேறு கேள்விகளை கேட்டதோடு, அதன் பிறகு, ராஸ்கினுடன் காரசாரமான விவாதத்திலும் ஈடுபட்டார்.

ஜோனா எழுப்பிய கேள்விகளின் சாரம்சம், 'கம்ப்யூட்டர்கள் எப்படி தோற்றம் அளிக்க வேண்டும், அவை எப்படி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்?' என்பதாக அமைந்தன. ஜோனாவின் கேள்விகளால் ஈர்க்கப்பட்ட ராஸ்கின், அவரை ஆப்பிள் நிறுவனப் பணிக்காக விண்ணப்பிக்குமாறு கூறினார். ஜோனாவும் இதை ஏற்கவே, ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைத்து, மேக் குழுவின் ஆரம்பக் குழுவில் இணைந்தார்.

ஜாப்ஸ் உடன் முதல் சந்திப்பு: மேக் குழுவில் இணைந்த பிறகு, ஜோனா முதல்முறையாக ஸ்டீவ் ஜாப்ஸை சந்தித்தது பற்றி விவரித்துள்ளது மிகவும் சுவாரஸ்யமானது மட்டும் அல்ல, அவரது ஆளுமையின் அடையாளமாகவும் அமைகிறது. அதற்கு முன்னர், மேக் குழுவில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை தெரிந்துகொள்வது, அவரது தொழில்நுட்ப பங்களிப்பையும் புரிந்துகொள்ள உதவும்.

புதிய கம்ப்யூட்டரின் விசைப் பலகை எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மாக்கும் பொறுப்பை முதல் வேலையாக ஜோனாவிடம் ராஸ்கின் ஒப்படைத்திருந்தார். கம்ப்யூட்டர் எல்லா இடங்களிலும் எடுத்துச்செல்லும் வகையிலும் இருக்க வேண்டும்; அதேநேரத்தில் பயன்படுத்தவும் எளிதாக இருக்க வேண்டும் என்பது ராஸ்கினின் எண்ணமாக இருந்தது. இதற்காக ஜோனா பல்வேறு வகையான விசைப் பலகைகளை உருவாக்கி ஆய்வில் ஈடுபட்டார். அதேநேரத்தில் கம்ப்யூட்டரின் அமைப்பு, அதன் புரோகிராமிங் மொழி உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், குழுவினருடன் ஆர்வத்துடன் விவாதங்களில் ஈடுபட்டிருந்தார். கம்ப்யூட்டரின் பயனர் இடைமுகம் போன்ற அம்சங்களிலும் தனி கவனம் செலுத்தினர். பயனர் இடைமுகத்திற்கான எண்ணங்களையும் ஜோனா எழுதிக் கொடுத்தார்.

ஜோனா கம்ப்யூட்டர் பின்புலம் கொண்டவர் இல்லை என்றாலும், அகழ்வாய்வுக்காக கம்ப்யூட்டரை பயன்படுத்திய ஆர்வமும், அனுபவமும் அவருக்கு கைகொடுத்தது. முக்கியமாக, ஒரு புதிய கம்ப்யூட்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழுவினருக்கு இந்த வேட்கையும், தொலைநோக்கும் அவருக்கும் இருந்தது.

ஜோனா 'மேக்' குழுவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், இரண்டு மாதங்கள் கழித்துதான் முதல்முறையாக ஸ்டீவ் ஜாப்ஸை சந்தித்தார். ஆனால் ஜோனாவோ, வந்திருப்பது ஜாப்ஸ்தான் எனத் தெரியாமல் யாரோ வந்திருக்கிறார் என அமர்ந்து வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜாப்ஸும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், 'ஜோனா யார்? அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்?' என கேட்டிருக்கிறார். 'இதைக் கேட்க இவர் யார்?' எனும் எண்ணத்துடன் ஜோனாவும் பதில் அளித்திருக்கிறார்.

ஜாப்ஸ் சென்ற பிறகுதான், சக உறுப்பினர்கள், 'அவர்தான் ஜாப்ஸ். நிறுவனர்களில் ஒருவர்' என கூறியிருக்கின்றனர். 'ஜாப்ஸ் வந்ததுமே இதை யூகித்திருக்க வேண்டும், தவற விட்டுவிட்டோமே' என்பதுபோல ஜோனா நினைத்தாலும், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏற்கெனவே பார்த்தவர்களை மறந்து விடுவதும், புதியவர்களை அறிமுகமாவர்கள் போல நினைப்பதும் தனக்கு வாடிக்கையானது என்பதால்,ஜாப்ஸை நிறுவனர் என முன்னரே அறிந்திருந்தாலும், அவர் வந்ததும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதுபோல பேசாமல் இருந்துவிட்டார்.

ஜாப்ஸும் இந்தச் சம்பவம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, மேக் குழுவின் மார்க்கெட்டிங் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்களுக்கு மென்பொருள் சார்ந்த பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மார்கெட்டிங்கிற்கு என்று யாரும் இல்லாத நிலையில், ஜோனாவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜோனாவும் அடுத்த நாளே மார்க்கெட்டிங் பற்றிய புத்தகத்தை படித்துப் பார்த்து அதற்கு தயாரானார். அடுத்த ஒராண்டுக்கு அவர்தான் மேக் குழுவின் மொத்த மார்க்கெட்டிங் பிரிவாக சுறுசுறுப்பாக செயல்பட்டார் என்பது மட்டும் அல்ல, புதிய கம்ப்யூட்டருக்கான வர்த்தக திட்டத்தையும் அவர்தான் எழுதினார்.

இதனிடையே, ஜாப்ஸ் 'மேக்' திட்டத்தை தானே நேரடியாக ஏற்றுக்கொண்டார். ஜாப்ஸின் செய்நேர்த்தியும், பிடிவாதம் கலந்த கறாரான எதிர்பார்ப்பும் பிரசித்தமானது. 'மேக்' திட்டத்தை ஜாப்ஸ் தனது எதிர்பார்ப்பின்படி நடத்த ஆரம்பித்ததால் ராஸ்கின் மெல்ல விலகிக்கொண்டார். ஜோனா உள்ளிட்ட உறுப்பினர்கள் ராஸ்கின் மீது பற்று கொண்டிருந்தாலும், ஜாப்ஸ் முன்வைத்த எதிர்பார்ப்பும், வழிகாட்டலும் தட்ட முடியாதவையாக இருந்தன.

இப்படித்தான் ஜோனா 'மேக்' குழுவின் முக்கிய அங்கமானார். அதன்பிறகு, ஜாப்ஸுடன் துணிந்து விவாதிக்கும் நபராகவும் விளங்கினார். ஜாப்ஸ் கருத்துக்கு எதிர் கருத்து சொல்வது சாத்தியம் என்று பலரும் நினைக்கக் கூட தயாராக இல்லாத நிலையில், 'உங்கள் கருத்து தவறு' என எடுத்துச் சொல்லும் திறன் பெற்ற அதிசய ஆளுமையாக ஜோனா திகழந்தார்.

அந்தக் காரணத்தினாலேயே ஜாப்ஸ் அவரை ஏற்றுக்கொண்டார் என்றும் கூட வைத்துக்கொள்ளலாம். ஜோனவே இதுபற்றி அழகாக கூறியிருக்கிறார். ஜாப்ஸுடன் தான் விவாதிக்கும் போதெல்லாம் அவர் கேட்டுக்கொண்டதற்கான காரணம், தேவை எனில் இவற்றை எல்லாம் நிராகரிக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என நினைத்து இருக்கலாம் என்று ஜோனா கூறியிருக்கிறார். ஆனால், தன் பார்வையை பட்டைத்தீட்ட உதவும் என்றும் அவர் ஜோனாவின் எதிர் கருத்துகளுக்கு செவிசாய்த்திருக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும், ஜாப்ஸ் சொன்னதை மட்டும் செய்யாமல், 'இதை ஏன் இப்படி செய்ய வேண்டும்?' என கேட்கக் கூடிய திறனை பெற்றிருந்தார். அதேநேரத்தில் ஜோனா எழுப்பிய கேள்விகள் ஆழமானவை, அர்த்தமுள்ளவை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். மேக் கம்ப்யூட்டரில் சேமிப்புத்திறன் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் ஜாப்ஸ் உறுதியாக இருந்தபோது, ஜோனா அவரிடம், 'பயனருக்கு நட்பான தன்மை பற்றி அடிக்கடி சொல்கிறீர்களே, எல்லையில்லா சேமிப்புத்திறன்தானே அதிகபட்ச பயனர் தன்மை" என ஜாப்ஸிடம் கேட்டிருக்கிறார்.

இந்த எதிர் கருத்தை கேட்டு ஜாப்ஸ் கோபம் கொள்ளாமல், ஜெராக்ஸ் ஆதிக்கவாதிகள் எல்லாமே இப்படித்தான் என அலுத்துக் கொண்டிருக்கிறார். விஷயம் அதுதான், ஜாப்சிடம் எதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஜோனா அறிந்திருந்தார். ஆளுமையை விட, அவர்கள் செய்யும் வேலையில் கவனம் செலுத்தியதன் பயனாக வந்த தன்மை இது எனக் கருதலாம்.

ஆனால் ஒன்று, ஜாப்ஸ் மீதும், மற்றவர்களை விரட்டி விரட்டி அவர்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை கொண்டு வரும் அவரது திறமை மீதும் ஜோனாவுக்கு புரிதலும், மதிப்பும் இருந்தது. ஜாப்ஸ் ஒரு படைப்பூக்கம் மிக்க கலைஞர், தான் உறுதியாக இருந்ததோடு மற்றவர்களுக்கும் அவ்விதமே இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என ஜாப்ஸின் ஆளுமை பற்றி ஜோனா கூறியிருக்கிறார்.

இந்த மதிப்பின் காரணமாகத்தான், ஆப்பிளில் இருந்து ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டு, தனியே வேறொரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை துவக்கியபோதும் அவருக்கு பக்கபலமாக ஜோனா இருந்தார். ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்ததும், பின்னர் ஐ-பாட் முதல் ஐஃபோன் வரை அறிமுகம் செய்ததும் தனிக்கதை.

ஜாப்ஸுடன் ஜோனாவும் ஆப்பிளுக்கு திரும்பவில்லை. சிலிக்கான் வேலியின் அதிகம் அறியப்படாத, ஆனால் முக்கிய நிறுவனமான 'ஜெனரல் மேஜிக்'-கில் அவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஆலோசகராக தொழில்நுட்ப உலகில் ஆர்வம் காட்டி வரும் ஜோனா, சமூக வலைப்பின்னல் ஜாம்பவனான ஃபேஸ்புக்கின் ஆதிக்கத்தை வெளிப்படையாக விமர்சிப்பவராகவும் இருக்கிறார்.

"ஃபேஸ்புக் ஜனநாயகத்தின் அடிப்படை இழையை, மனித உறவுகளை அடிப்படை இழையை அழிக்கிறது. கோபம் எனும் போதை மருந்தை ஊட்டுகிறது" என ஃபேஸ்புக் பற்றி அவர் கூறியிருக்கிறார். இந்தத் தெளிவும், துணிச்சலும்தான் ஜோனா ஹாஃப்மன்.

ஜோனாவும் கேத் வின்ஸ்லெட்டும்: ஜோனாவின் கதையில் சுவாரஸ்யமான கிளைக்கதை ஒன்று இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு, புத்தகங்களாக வந்திருக்கின்றன; திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. பலரும் பாராட்டும் டேனி பாயில் இயக்கிய 'ஸ்டீவ் ஜாப்ஸ்' திரைப்படத்தில் ஜோனா கதாபாத்திரத்தில் 'டைட்டானிக்' நாயகி கேத் வின்ஸ்லெட் நடித்திருப்பார். கேத் வின்ஸ்லெட் இந்தப் பாத்திரத்தில் நடித்ததும், அதற்காக பாராட்டப்பட்டதும் பலரும் அறிந்ததுதான் என்றாலும், 'ஸ்டீவ் ஜாப்ஸ்' படத்தில் ஜோனாவாக நடிக்க வேண்டும் என கேத் வின்ஸ்லெட் விரும்பி, அதற்காக பெரும் முயற்சி செய்து, அந்த வாய்ப்பைப் பெற்றார் என்பது பலரும் அறியாதது.

'ஸ்டீவ் ஜாப்ஸ்' திரைப்பட ஆக்கம் பற்றி கேள்விபட்டபோது, தனது மேக்கப் பெண்மணி மூலம் ஜோனா பாத்திரம் பற்றி அறிந்து, அதில் எப்படியாவது நடிக்க வேண்டும் என விரும்பினார் கேத் வின்ஸ்லெட். 'ஸ்டீவ் ஜாப்ஸ்' பட முயற்சி தொடர்பான செய்திகளில் இருந்து இந்தப் படம் பற்றியும், ஜோனா பாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் அறிந்திருந்தார். தனது தோற்றப் பொருத்தம் தடையாக இருக்கும் என அஞ்சியவர், ஜோனா போல விக் அணிந்த புகைப்படத்தை எடுத்து, படக்குழுவினருக்கு இ-மெயிலில் அனுப்பிவைத்தார். அதன் பிறகு படக்குழு பேச்சு நடத்தி அவரை நடிக்க வைத்தது.

இப்படி தானாக விரும்பி கேட்டுப் பெற்று, ஜோனாவாக நடித்த கேத் வின்ஸ்லெட், அவரது ஆளுமையை உணர்ந்து நடித்திருப்பார். அதற்காக அவருக்கு சிறந்த உறுதுணை நடிகைக்கான ஆஸ்கர் விருது கிடைத்ததுதான் எத்தனைப் பொருத்தமானது!

(இளவரசிகள் இன்னும் வலம் வருவர்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com