இது சந்திரபாபு நாயுடுவின் தர்மயுத்தம்..!

இது சந்திரபாபு நாயுடுவின் தர்மயுத்தம்..!
இது சந்திரபாபு நாயுடுவின் தர்மயுத்தம்..!

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்காத விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அம்மாநில எம்.பி.க்கள் புயலை கிளப்பி வருகிறார்கள். மாநில நலனுக்காக மத்திய அரசுடனான போராட்டத்தை கைவிட்டுவிடாதீர்கள் என்று தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளது கூட்டணியில் இன்னும் விரிசல் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் உள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று பாஜக ஏற்கனவே உறுதி அளித்து இருந்தது. பாஜக அரசு இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தி வருவதாக தெலுங்கு தேசம் கட்சி கூறி வருகிறது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சிறப்பு நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால், பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் வெளிப்படையாக கூறினார். இதனால், பாஜக உடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக் கொள்ளும் என்று பேசப்பட்டது. ஆனால், பின்னர் நடந்த அக்கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் கூட்டணியை தொடர்வது என்றும், கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், இடதுசாரி, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இணைந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. முழு அடைப்பு குறித்து துபாய் சென்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய சந்திரபாபு நாயுடு, “மத்திய அரசின் இதுபோன்ற  நடவடிக்கையானது ஆந்திர பிரதேச மாநில மக்கள் நாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லை என உணரசெய்யும் வகையில் உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதி கிடைக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கடுமையான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். நாம் யாருக்காகவும் பயப்பட தேவையில்லை” என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக இருநாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று தெரிவித்து இருந்தார். இருப்பினும் ஆந்திர பிரதேச மாநில எம்.பி.க்கள் இன்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்காத விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் புயலை கிளப்பி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் இன்றும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் மனநிலையிலேயே அக்கட்சி உள்ளதாக தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் ஆந்திர மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ராவ், ‘தேவைப்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனால், ஒருபுறம் கூட்டணி தொடரும் என்று அறிவித்து இருந்தாலும், பாஜகவுக்கு எதிராக தனது யுத்தத்தை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது. மேலும், தனது நீண்ட கால கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்ட நிலையில், தற்போது தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com