“5 வருடங்களாக காகத்தோடு நட்பு”- நண்பர்களாக மாறிய கதையை சொல்லும் ரிக்ஷா ஓட்டுநர்..!

“5 வருடங்களாக காகத்தோடு நட்பு”- நண்பர்களாக மாறிய கதையை சொல்லும் ரிக்ஷா ஓட்டுநர்..!
“5 வருடங்களாக காகத்தோடு நட்பு”- நண்பர்களாக மாறிய கதையை சொல்லும் ரிக்ஷா ஓட்டுநர்..!

புதுச்சேரி - அரவிந்தர் ஆசிரமம் சந்திப்பில் உள்ள ரிக்ஷா ஸ்டேண்டில் கடந்த சில ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் காகத்தோடு நட்பாக பழகி வருகிறார்.

காகமும் அந்த ரிக்ஷா ஓட்டுநரும் எப்படி நண்பர்களானார்கள் என அவரிடமே கேட்டோம்... 

“என் பேர் செல்வராஜ். 56 வயசாகுது. புதுச்சேரி டவுன்தான் என் பூர்வீகம். டீன் ஏஜ்ல இருந்தே சைக்கிள் ரிக்ஷா ஓட்டுறேன். 

அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு காத்து மழை நேரத்துல ஸ்டேண்டிலிருந்துது குடிக்க தண்ணீர் புடிக்க நான் போனப்போ வாய்க்காலில் காக்கா ஒண்ணு அடிபட்டுக் கிடந்தது. தண்ணீர் பிடிச்சுகிட்டு திரும்பி வரும்போதும் அது எந்த அசைவும் இல்லாம அதே இடத்துல கிடந்தது. 

பக்கத்துல போய் பாத்தப்பதான் அதோட றெக்கையில அடிபட்டு இருக்குறது தெரிஞ்சது. அதுக்கு தெம்பா இருக்கும்னு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன். மத்த பிராணிங்க அதை சீண்டக் கூடாதுன்னு ஒரு ஜன்னல் மேல பத்திரமா எடுத்து வெச்சேன். அதோட நானும் சவாரிக்கு போய்ட்டேன். 

ரெண்டு நாளுக்கு பிறகு எப்பவும் போல ஸ்டேண்டுல கால சாப்பாடு சாப்பிட்டப்போ ஒரு காக்கா என் வண்டியில வந்து உட்கார்ந்துச்சு. 

எங்க ஸ்டேண்டு இருக்குற இடத்துல நிறைய மரம் இருக்கும். அதுல காக்கா கூட்டம் தான் அதிகம். இங்க யார் சாப்பிட்டாலும் காக்காங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு தான் சாப்பிடுவாங்க. அந்த மாதிரி இந்த காக்காவும் எங்கிட்ட சாப்பாடு எதிர்பார்குதுனு நினச்சு, சாப்பாட்ட வீசினேன். ஆனா அந்த காக்கா அதை சாப்பிடல. நான் ஊட்டி விட்டதும் சாப்டுச்சு. அந்த நாள் முழுக்க அது என்ன விடாம துரத்துச்சு. 

அப்புறம் தான் அது நான் காப்பாத்தின காக்கான்னு புரிய வந்துச்சு. அந்த நாள்ல இருந்து இன்னைக்கு வர நிதமும் காலை, மதியம்னு நான் சாப்பாடு எடுக்குற நேரமெல்லாம் அதுக்கு சாப்பாடு கொடுத்து வர்றேன். என் கையால ஊட்டினா தான் சாப்புடும். ஸ்டேண்டுல நான் இருந்தா அது என் வண்டிக்கு உரிமையா வந்துடும்.

மீன், முட்டை, கருவாடு, சிக்கன், இட்லி, பூரி, பிஸ்கட்ட விரும்பி சாப்பிடும். 

ஏதோ ஒரு வகையில எனக்கும் இந்த காக்காவுக்கும் சிநேகம் ஏற்பட்டிருக்கு. அதுக்கூட இருக்குறது திருப்தியா இருக்கு” என்றார்.

ஊரடங்கு நாட்களில் காகத்தைப் பார்க்க முடியாமல் இருந்த அவர் இப்போது மீண்டும் அதோடு பழையபடி பழகி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com