“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..!

“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..!
“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..!

ஒரு நதி தடுக்கப்படும் போது, அதன் வேகம் தடை படும் போது. ஓங்கி சத்தம் எழுப்புகிறது. தடுக்க வரும் அனைத்தையும் முட்டி உடைக்க அது முயல்கிறது. அது போலவே காலத்தின் குறிப்புகளில் ஆங்கிலேயர்களால் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்கள் வெகுண்டு எழுந்தனர். இந்தியா விடுதலை பெற்றது. பிறகு உள்நாட்டுக்குள் சாதிய அடக்குமுறைகள் தொடர்ந்தன., தொடர்கின்றன. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது வெகுண்டு எழுகிற சிலர் ஒடுக்கப்படும் மக்களின் தலைவர்களாகின்றனர். அப்படியொருவர் தான் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். 1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சென்னை மாகாணத்தில் பட்டியல் இனத்தில் பிறந்தவர் ரெட்டைமலை சீனிவாசன்.

இந்திய அளவில் பட்டியலின மக்கள் தீவிரமாக ஒடுக்கப்பட்டு வந்த காலத்தில் விடுதலை விடிவெள்ளிகள் முளைத்தது தமிழ் மண்ணில் தான். அவர்களில் ரெட்டை மலை சீனிவாசன் முதன்மையானவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்கள் பத்திரிக்கைகள் நடத்துவதற்கு பெரும் தடைகள் இருந்தன. குரல்கள் இல்லாத காலம் அது. 1835-ம் ஆண்டு அந்தத் தடைகள் நீக்கப்பட்டன. அப்போது இந்திய மக்களின் குரலாக, தமிழ் மக்களின் குரலாக பல பத்திரிக்கைகள் உருவாகின. பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், திராவிட பாண்டியன் போன்ற இதழ்கள் இந்திய இதழியல் வரலாற்றில் முன்னத்தி ஏர்களாகும். அப்போது தான், எந்தப் பெயரால் ஒடுக்கப்படுகிறோமோ அந்தப் பெயரிலேயே ஒரு இதழை துவங்குவது என முடிவு செய்கிறார் ரெட்டை மலை சீனிவாசன். அதன்படி ‘பறையன்’ எனும் இதழை ரெட்டைமலை சீனிவாசன் 1893’ல் துவங்கினார், துவக்க காலத்தில் மாத இதழாகவும் பின் வார இதழாகவும் வெளியான அது 1900ஆம் ஆண்டுவரை தவறாமல் வெளியானது.

பட்டியலின மக்களுக்கான தனிப் பள்ளி துவங்கப்பட்டதில் இந்த இதழின் பங்கு முக்கியமானது. அவர் கல்வியே பட்டியலின மக்களுக்கான விடுதலையை கொடுக்கும் என தீர்க்கமாக நம்பினார். அதனால் தொடர்ந்து கல்வி குறித்த செய்திகளை அந்த இதழ் பதிவு செய்தது. அரசு வகுத்தளிக்கும் மக்களின் உரிமைகள் என்னென்ன என்பதே மக்களுக்கு தெரியாத காலம் அது, அச்சமயத்தில் ரெட்டை மலை சீனிவாசன் அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். அரசாங்கத்தின் செயல்பாடுகள் பலவற்றிலும் ரெட்டை மலை சீனிவாசனின் தலையீடு இருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கும் பிரச்னைகள் குறித்து அப்போது மக்கள் பலர் அந்த இதழுக்கு கடிதம் எழுதினர். அது செய்தியாக மட்டுமல்லாமல் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்வுகளும் கிடைத்தன.

பட்டியலின மக்களை அரசியல் படுத்துவதில் தீவிரமாக முனைப்பு காட்டினார் ரெட்டை மலை சீனிவாசன். அதே நேரம் இவரது சில முடிவுகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீண்டாமைக் கொடுமையில் இருந்து விடுபட பட்டியலின மக்கள் எல்லோரும் இந்துமதத்தை விட்டு வெளியேற வேண்டும் என அம்பேத்கர் சொன்ன போது காந்தி உள்ளிட்டோர் அதனை எதிர்த்தனர். காந்தி இதனை எதிர்த்ததில் ஆச்சர்யமில்லை., ஆனால் பட்டியலின மக்களுக்காக உழைத்த ரெட்டை மலை சீனிவாசனும் அதனை எதிர்த்தார். ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம் வேறு “நாம் தான் இந்துக்களே இல்லையே., பிறகு எப்படி மதம் மாறுவது” என கேள்வி எழுப்பினார். அயோத்தி தாஸர் புத்த மதத்தை தழுவிய போதும்., அம்பேத்கர் மதமாற்றத்தை ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான ஒரு தீர்வாக முன்வைத்த போதும் ரெட்டைமலை சீனிவாசன் அது தேவையற்ற வேலை என்றே ஒதுங்கினார். இதே போல் ஆலய நுழைவுப் போராட்டம் குறித்தும் ரெட்டை மலை சீனிவாசனின் பார்வை வேறாக இருந்தது. காங்கிரஸ் கட்சியானது ஆலய நுழைவு போராட்டங்களை முன்னெடுத்த போது “ஒரு காலத்தில் நமது கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயில்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன., அப்படி இருக்கும் போது, வெறும் ஆலய நுழைவு போராட்டம் எதற்கு” என அதிலும் மாறுபட்ட பார்வையினைக் கொண்டிருந்தார் ரெட்டை மலை சீனிவாசன்.

தீண்டாமை என்றால் என்ன என்றே ஆங்கிலேய மேலிடத்திற்கு தெரியாத காலமும் இருந்தது., ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தொட மறுக்கும் தீண்டாமை இங்கிருக்கிறது என ஜார்ஜ் மன்னரின் பார்வைக்கு கொண்டு சென்றார் ரெட்டை மலை சீனிவாசன். பட்டியலின மக்களின் பிரச்சனைகளை பேச லண்டன் சென்றார் அவர். அப்போது ஜார்ஜ் மன்னன் ரெட்டை மலை சீனிவாசனுக்கு கைகுலுக்க வரும் போது “எங்களை தொட்டால் தீட்டு” என்று ரெட்டை மலை சீனிவாசன் சொல்ல. அதற்கு விளக்கம் கேட்ட ஜார்ஜ் மன்னனுக்கு அதிர்ச்சி. இப்படி எல்லாம் இந்தியாவில் இருக்கிறதா என வருத்தப்பட்ட ஜார்ஜ் மன்னர் பிறகு அதனை சரி செய்வதற்கான உதவிகளை செய்தார். லண்டன் செல்வதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா சென்ற ரெட்டைமலை சீனிவாசன் காந்தியை சந்தித்தார். அப்போது தான் காந்திக்கு மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தார் ரெட்டை மலை சீனிவாசன்.

தற்போதைய திமுகவின் உதயசூரியன் சின்னத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு அவருடையது. 1929’ஆம் ஆண்டு முதல்முதலாக சுய உரிமை மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது. அம் மாநாட்டிற்கு சின்னங்களை உருவாக்கியவர்கள் சீனிவாசனின் இயக்கத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மலைகளுக்கு நடுவே சூரியன் உதிப்பது போன்ற சின்னத்தை அவர்கள் உருவாக்கினர்.

ஆங்கிலேயர்களுடன் போராடி பட்டியலின மக்களுக்கு தனித் தொகுதிகளை அவர் பெற்றுத் தந்தார். பட்டியலின மக்களுக்கான தனிப் பள்ளி, நலவாரியங்கள் என தற்போது கிடைக்கும் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத் தந்ததில் முதல் விதையை போட்டவர் ரெட்டைமலை சீனிவாசன். ரெட்டை மலை சீனிவாசனின் பிறந்த தினமான இன்று திமுக சார்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அதில் “பொது இடங்களில் பட்டியல் இன மக்கள் நடமாடுவதற்கு இருந்த சமூகத் தடைக்கு எதிராக சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரட்டைமலை சீனிவாசன் எழுப்பிய குரலும், அதன் விளைவாக நீதிக்கட்சி ஆட்சியில் பொதுக்குளம், கிணறு, தெரு என அனைத்தையும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட்டதையும், அதனைத் தடுப்போருக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.” என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வரலாற்றில் ரெட்டை மலை சீனிவாசன் பெயர் என்றும் இடம்பிடித்திருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com