தனியார் மயமாகிறதா பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்? - சிறப்புப் பார்வை

தனியார் மயமாகிறதா பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்? - சிறப்புப் பார்வை
தனியார் மயமாகிறதா பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்? - சிறப்புப் பார்வை

பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும், பொதுக்காப்பீட்டு நிறுவன ஊழியர்களிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம்

யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷ்யூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ் ஆகிய 4 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 51 சதவிகிதத்தை அதாவது பெரும்பான்மை பங்குகளை மத்திய அரசு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தற்போதைய விதியில் திருத்தம் செய்யும் அம்சம் மசோதாவில் இடம் பெற்றுள்ளது. மேலும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் இயக்குனர்களின் பொறுப்புகள் தொடர்பானவிதிகளிலும் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த மாற்றங்கள் தனியார்மயமாக்கலுக்கான முதல் படி என கருதப்படுகிறது. ஆனால் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும் சந்தை போட்டியை சமாளிக்க நிதி ஆதாரத்தை திரட்டுவதே தங்கள் நோக்கம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை முதலில் தனியாருக்கு விற்கலாம் என மத்திய அரசுக்கு, திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஏற்கனவே பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் தங்கள் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு முழு மூச்சில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது பொதுக்காப்பீட்டு நிறுவன பங்குகளை விற்க மசோதா கொண்டு வந்துள்ளது அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கும் என கருதப்படுகிறது

எதிர்ப்பு ஏன்?

இது தொடர்பாக காப்பீட்டு ஆலோசகர் ஆனந்த் பேசுகையில், “ 1971ம் ஆண்டு 106 தனியார் இன்ஸூரன்ஸ் நிறுவனங்களை அன்றைய பிரதமர் இந்திரகாந்தி தேசியமையமாக்கினார். முறைகேடுகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் விளக்கமளித்தார். 1971 முதல் 2021 கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் பொதுத்துறை இன்ஸூரன்ஸ் கம்பெனிகளால் கிராம புற, ஏழை எளிய மக்களுக்கான காப்பீடு திட்டங்கள் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.

ஆனால், 2016ம் ஆண்டு, பொதுக்காப்பீடு தேசிய மையமாக்கப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த மத்திய பாஜக அரசு, அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 49 சதவீத பங்குகளை விற்கலாம் என விதியை திருத்தியது. அதன்படி, அடுத்த ஆண்டே 2017ல் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பங்குகள் 14 சதவீதம் விற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்த மசோதாவை பார்க்க வேண்டியிருக்கிறது. காரணம், அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் 100சதவீத பங்குகளையும் தனியாருக்கு கொடுக்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்வது தான் கண்டனத்திற்கு காரணம்.

தனியார்மயமாக்கவில்லை என்று நிதியமைச்சர் சொல்கிறார். அது தான் எப்படி என புரியவில்லை. காரணம், 51 சதவீத பங்குகள் அரசிடம் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், நேற்றைய சட்டத்திருத்தத்தின் படி, அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது தனியார் மயமாக்கவில்லை என எப்படி நிதியமைச்சர் கூற முடியும். அதேபோல 24B என்ற புதிய பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அரசு கட்டுப்பாட்டை முழுவதுமாக விலக்கும் ஒரு சட்டப்பிரிவாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. நிதி திரட்டும் முயற்சி என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com