”ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும்”- ஆர்பிஐ திடீர் அறிவிப்பு; பண மதிப்பிழப்பு கடந்துவந்த பாதை!

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய், ரிசர்வ் வங்கி
2,000 ரூபாய், ரிசர்வ் வங்கிtwitter page

’பணமதிப்பிழப்பு நடவடிக்கை’

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ’பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய வடிவிலான 2,000, 200 மற்றும் 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

குறைந்த அளவிலேயே 2000 ரூபாய் நோட்டுகள்

இதனையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 2000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாயை மட்டும் புழக்கத்தில் விடப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் காணவே முடியவில்லை. ஏடிஎம்களில் கூட 500, 200, 100 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வருகிறது.

வங்கிகளிலும் மிகக் குறைந்த அளவிலேயே 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
2,000 ரூபாய், ரிசர்வ் வங்கி
2,000 ரூபாய், ரிசர்வ் வங்கிtwitter page

அப்படி என்றால் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது தொடர்ச்சியாக நோட்டுகள் அச்சிடப்படுகிறதா இல்லையா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தது. 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்டதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் சந்தோஷ் குமார் போன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வியை எழுப்பியிருந்தனர்.

மத்திய அரசின் பதில்

அதற்கு பதிலளித்து இருந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என்பதால் 2019-20ம் நிதியாண்டு முதலே நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடக் கூடிய எந்த திட்டமும் இப்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளும் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது.
நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்Nirmala Sitharaman twitter page

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பண மதிப்பிழப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் 2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 9.512 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளும், 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளும் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது” தெரிவித்திருந்தார்.

2,000 ரூபாய்
2,000 ரூபாய்புதிய தலைமுறை

ரிசர்வ் வங்கி இன்று புதிய அறிவிப்பு

ஆனால், நாட்டில் சமீபகாலமாக 2,000 ரூபாய் நோட்டுகளை எங்கும் பார்க்க முடியவில்லை என்ற குரலும் மக்களிடமிருந்து எதிரொலிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், “புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும்” என ரிசர்வ் வங்கி இன்று (மே 19) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி, “புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். அதேநேரத்தில், புழக்கத்தில் உள்ள அத்தகைய நோட்டுகள் செல்லும். ’கிளீன் நோட் பாலிசி’ என்ற அடிப்படையில் இந்த ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது.

வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் பேங்க்
ரிசர்வ் பேங்க்புதிய தலைமுறை

செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள்!

வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். தினமும் ரூ.20,000 மதிப்பு அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, “வங்கிகளில் செலுத்தப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது” எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அது, ”2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டிருப்பதாகவும், 2017 மார்ச் மாதத்துக்கு முன்பு 89 சதவிகிதம் புழக்கத்தில் விடப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில்

2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு சம்பந்தமாக, ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த பாரதிய ரிசர்வ் வங்கி முத்ரன் தரப்பு, ”2019-20, 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ஒன்றுகூட அச்சிடப்படவில்லை. அத்துடன், 2016-17ஆம் நிதியாண்டில் 354.2991 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. அதன்பிறகு 2017-18ஆம் நிதியாண்டில் வெறும் 11.1507 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன. 2018-19 ஆம் நிதியாண்டில் அது மேலும் குறைந்து வெறும் 4.669 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன” என தெரிவித்திருந்தது.

நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டில் 2,272 போலி நோட்டுகள் சிக்கின.

மத்திய அரசு

2,000 ரூபாய்
2,000 ரூபாய்file image

சிக்கிய போலி 2,000 ரூபாய் நோட்டுகள்

அதேநேரத்தில், கடந்த ஆண்டு (2022) மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், நாட்டில் போலி 2000 ரூபாய் நோட்டிகளில் புழக்கம் அதிகமாகிவிட்டதாக தெரிவித்திருந்தது. அரசின் தகவலின்படி, “நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டில் 2,272 போலி நோட்டுகள் சிக்கியது. ஆனால், அதுவே 2017ஆம் ஆண்டில் 74,898 நோட்டுகளாக அதிகரித்தது. 2019ஆம் ஆண்டில் 90,566 போலி 2000 ரூபாய் நோட்டுகளும், 2020ஆம் ஆண்டில் 2,44,834 நோட்டுகளும் சிக்கின” என அது தெரிவித்திருந்தது.

புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்

2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என இன்று, ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அதுகுறித்து பல விஷயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 2000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் மக்களிடம் புழக்கத்தில் இல்லை. ஏன், ஏடிஎம் இயந்திரங்களில்கூட 2,000 ரூபாய் நோட்டுகளைக் காண முடியவில்லை. அத்தகைய நோட்டுகள் வங்கிகளிடமே இருக்க வேண்டும் அல்லது அதைப் பதுக்கியவர்களிடம் இருக்க வேண்டும்.

2,000 ரூபாய்
2,000 ரூபாய்file image

அவற்றைப் பதுக்கியவர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம்” என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆக, 2,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாகச் செல்லாது என மக்கள் நினைத்துப் பயப்பட வேண்டாம். ’செல்லும்’ என ரிசர்வ் வங்கியே அறிவித்திருப்பதால் செப்டம்பர் 30 வரை அத்தகைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதேநேரத்தில், ’செல்லாது’ என்ற அறிவிப்பு செப்டம்பர் 30க்கு மேல் வெளியாகலாம் அல்லது திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம்” என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com