இயற்கையின் நாயகன்... மண்ணின் அடையாளம்... நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று!

இயற்கையின் நாயகன்... மண்ணின் அடையாளம்... நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று!
இயற்கையின் நாயகன்... மண்ணின் அடையாளம்... நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று!

டிசம்பர் 30... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று. 

இயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் இயற்கையின் நாயகன் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் குரலும், கருத்தும், முயற்சியுமே இன்றைய, நாளைய தேவையாகவும் இருக்கிறது. விவசாயம் என்றால் உரச்சத்து, ஊட்டச்சத்து என்ற பெயரில் பயிரை நஞ்சாக்கியது போகாமல் நிலத்தையும் நாசமாக்கி கொண்டிருந்தார்கள் படித்த விஞ்ஞானிகள். இவர்தான் உரங்களை உதறித்தள்ளிவிட்டு இயற்கைக்குத் திரும்பச் சொல்லி அறைகூவல் விடுத்தார். இலைத்தழைகளை போட்டு இயற்கையை விளைவிக்க முடியும் என எடுத்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக்கத்தில் பி.எஸ்.சி., அக்ரி படித்தார். கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆறு ஆண்டுகள் பணியும் செய்தார். ஆனால் அவர் படித்த விவசாயம் நிலத்தை விஷமாக்க சொல்லிக் கொடுத்தது. இயற்கைக்கு எதிராக இருக்கிறோம் என அவர் மன உறுத்தியது. உடனே அவர் யோசிக்கவில்லை. அந்த வேலையை உடனே ராஜினாமா செய்தார். நோபல் பரிசுப் பெற்ற டோமினிக் ஃபியர் என்பவரிடம் பணிக்கு சேர்ந்தார். அங்கே கிடைத்தது இவருக்கு உலக அறிவு.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தார். நம் நாட்டு வேப்பிலைக்கு காப்புரிமை வாங்கி வைத்திருந்தது பன்னாட்டு நிறுவனம். அதை அறிந்த இவர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார். வெற்றி நம்மாழ்வார் வீட்டுக்கதவை தட்டியது. நமது வேம்பை மீட்டுக் கொண்டுவந்தார் இந்த மனிதர். இயற்கை விவசாயம் என்பதை உயிர் மூச்சு பிரியும் வரை இருக்க பிடித்துக் கொண்டிருந்தது இவரது நெஞ்சு.

ஒத்தநாடி உடம்பு, ஆயுள் முடிய போகும் காலம் என இந்த மனிதன் களப்பணியிலேயே கனவு கண்டு கொண்டிருந்தார். உறங்கவே இல்லை. 'உண்மை உங்களை உறங்க விடாது. அதற்கு பெயர்தான் உண்மை. நாளைய உலகம் நம்மை கட்டாயம் நம்பும்' என அவர் உறுதியோடு நின்றார். அதன் விளைவுதான் இன்று மக்கள் இயற்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். நிலம் பற்றிய கவலை உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நம்மாழ்வார் வாழ்கிறார்.

இன்று அவரின் நினைவுநாள். உடல் அளவில் அவர் இறந்திருக்கலாம். ஆனால் மண்ணை மலடாக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் அவர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார். இந்தப் பச்சை மனிதனை உலகம் உள்ளவரை யாரும் லேசில் மறந்துவிட முடியாது. மண்ணை மறப்பவன் தன் வரலாற்றை மறக்கிறான். வரலாற்றை மறப்பவன் தன் அடையாளத்தை இழக்கிறான். நம் அடையாளம் மண். இந்த மண்ணின் அடையாளம் நம்மாழ்வார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com