பேட்டில் காந்தம் உள்ளதா? - இந்திய ஹாக்கியின் "மந்திரக்காரர்" தயான் சந்த்

பேட்டில் காந்தம் உள்ளதா? - இந்திய ஹாக்கியின் "மந்திரக்காரர்" தயான் சந்த்
பேட்டில் காந்தம் உள்ளதா? - இந்திய ஹாக்கியின் "மந்திரக்காரர்" தயான் சந்த்

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு இது ஓர் அற்புதமான ஆண்டு. டோக்கியோ ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகள் கழித்து ஹாக்கி அணி பதக்கம் வென்றது. இதை நினைவு கூறும்விதமாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி 'தயான் சந்த் கேல் ரத்னா விருது' என்ற பெயரில் வழங்கப்படும் என அறிவித்தது மத்திய அரசு. தன்னுடைய அசாத்தியமான திறமையால் ஹாக்கி வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த தயான் சந்தின் 116 ஆவது பிறந்தநாள் இன்று. மேலும் அவரின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தின‌மாக கொண்டாடி வருகிறோம்.

யார் இந்த தயான் சந்த்?

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிறந்த தயான் சந்த், தமது 16-வது வயதில் தந்தையைப் போன்று ராணுவப் பணியில் சேர்ந்தார். அதுவரை ஹாக்கி மட்டையைத் தொடாத அவர், பின்னாளில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டு சாதிக்கத் தொடங்கினார். 1926 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக தமது சர்வதேச ஹாக்கி பயணத்தை தொடக்கினார். 1928-ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 3 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்தார்.

பந்தை கட்டுக்கோப்பாக கடத்திச் செல்வதிலும், கோல் அடிப்பதிலும் வல்லவரான தயான் சந்த், 1934 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக செயல்பட்டார். சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கு மேல் அடித்துள்ள தயான் சந்த், ஓலிம்பிக்கில் மட்டும் 101 கோல்களைப் பதிவு செய்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் விளையாடிய அவர், 1949 ஆம் ஆண்டில் தமது ஹாக்கி மட்டைக்கு ஓய்வு கொடுத்தார். அவரின் சாதனைகளைக் கண்டு உலகமே வியந்தது என்பதற்கு ஆஸ்திரியாவின் வியன்னாவில் தயான் சந்தின் உருவச்சிலை அமைக்கப்பட்டிருப்பதே சான்று.

உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த தயான் சந்த்துக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷன் விருது, 1956ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு, 74-வது வயதில் மண்ணை விட்டு அவர் மறைந்தார். தயான்சந்தின் சாதனைகளை போற்றும் வகையில், விளையாட்டுத்துறையில் வாழ்நாள் சாதனை படைப்போருக்கு அவரது பெயரில் 2002 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விளையாட்டு துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991 - 1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதன் முறையாக இந்த விருது வழங்கப்பட்டது. லியாண்டர் பயஸ், சச்சின் டெண்டுல்கர், தன்ராஜ் பிள்ளை, மேரி கோம் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த விருது உடன் 25 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும். இப்போது இந்த விருதும் ஹாக்கி ஜாம்பவனான தயான் சந்த் பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தயான் சந்தை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. ஆனால் உலகின் பல்வேறு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் தயான் சந்தை வெகுவாக புகழ்ந்துள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவனான ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் "கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வேகத்தில் தியான் சந்த் கோல்களை அடிக்கிறார்" என்று புகழ்ந்தார். 1928 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் பெற முக்கிய காரணமாக இருந்தவர் தயான் சந்த். இத்தொடரில் மட்டும் அவர் 14 கோல்களை அடித்தார்.

பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆற்றலைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவர் ஜெர்மனிக்கு வந்தால் அந்நாட்டு குடியுரிமை வழங்கி, ஜெர்மன் ராணுவத்தில் மரியாதைக்குரிய பதவியையும் வழங்குவதாக அறிவித்தார். ஆனால் தயான் சந்த் அதை ஏற்காமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். தயான் சந்த் அதிக கோல்களை அடிப்பதால், அவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருக்கிறதா என நெதர்லாந்து அணியினர் ஒருமுறை சோதனை நடத்திய சம்பவமும் வரலாற்றில் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com