ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் !

ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் !
ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் !

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்போதுள்ள இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் ரஜினியின் திரையுலக வாழ்வை ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்பார்கள். இப்போது சமூக வலைத்தளங்களில் இளம் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் அந்தளவுக்கு ரசிகர்கள் இல்லை என கூறப்படுகிறது. அண்மையில் சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல், அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் விமர்சனமும் எழுந்தது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால்தான் நடிகர்கள் இப்போது அரசியல் பேசுகிறார்கள் என விமர்சனம் எழுந்தது.

ஆனால், ரஜினியை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இருக்கும்போதே தனது அரசியல் கருத்துகளை பேசியுள்ளார். அது பெரும் மாற்றத்தையே தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போதைய சமூக வலைத்தள இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ரஜினியின் பிறந்தநாளான இன்று சற்றே பின்னோக்கி அவரின் அரசியல் கருத்துகளை பார்க்கலாம். தமிழக அரசியல் களங்களில் ரஜினிகாந்த் 1996 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வருகிறார். முதன்முதலாக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் அரசியல் தலைவராக ஜெயலலிதாவாகத்தான் இருந்தார்.

1991- 1996 ஆம் ஆண்டு முதல்வராக  இருந்த ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படட்து. மேலும் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா கொண்டாடிய ஆடம்பர திருமணம் ஆகியவை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு பாட்ஷா பட விழாவில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் முதல் அரசியல் பேச்சு இதுதான். இதையடுத்து ரஜினிகாந்தை மையமாக வைத்து அரசியல் பேச்சுகள் கிளம்பின. 

அப்போதைய தேர்தலில் தமிழகத்தின் களநிலவரத்தை உணராமல் டெல்லி காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. இதற்கு எதிராக தமிழக காங்கிரஸில் மூப்பனார் தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக தமிழ்  மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. திமுக - தமாக கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து ரஜினி சொன்ன ஒரு கருத்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என பகிரங்கமாக விமர்சித்தார். 

இதன்பின்னர் 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றிப் பெற்றது. அதன் பின் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினி இப்போது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் வேலையை தொடங்கியுள்ளார். ஆனால், ரஜினியின் ரசிகர்களால் இப்போதும் அவரின் முதல் பகிரங்க அரசியல் பேச்சை எப்போது சிலாகித்து பேசுவார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com