தெலுங்கு திரையுலகில் களைகட்டும் 'மலையாள ரீமேக்' ட்ரெண்ட் - ஒரு பின்புலப் பார்வை

தெலுங்கு திரையுலகில் களைகட்டும் 'மலையாள ரீமேக்' ட்ரெண்ட் - ஒரு பின்புலப் பார்வை
தெலுங்கு திரையுலகில் களைகட்டும் 'மலையாள ரீமேக்' ட்ரெண்ட் - ஒரு பின்புலப் பார்வை

மலையாள சினிமாவின் சமீபத்திய வளர்ச்சியும் வெற்றியும் கேரள திரையுலகத்தை தாண்டி தெலுங்கு திரையுலகினருக்கும் ரீமேக் வடிவில் பெரிதும் கைகொடுத்து வருகிறது. தெலுங்குத் திரையுலகில் மலையாளப் படங்களை ரீமேக் செய்வது ஒன்றும் புதிய ட்ரெண்ட் இல்லை. 'பிரேமம்', 'ஏபிசிடி', 'பாடிகார்டு', 'திரிஷ்யம்' என எண்ணற்றப் படங்கள் இதற்கு முன் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ட்ரெண்ட் இப்போது முன்பை விட அதிகமாகி இருக்கிறது. இதனால் மலையாளத்தில் வெற்றிபெறும் படங்களின் உரிமையை கைப்பற்றுவதில் தெலுங்கில் அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சிறந்த உதாரணம், தெலுங்கில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள மலையாள படங்களின் ரீமேக் திரைப்படங்கள்.

லூசிபர்: கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாக, மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதான ரோலில் நடித்த திரைப்படம் தான் 'லூசிபர்'. அரசியல்வாதி மறைவுக்குப் பிறகு மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதலை சுவாரசியமான திரைக்கதை மூலம் பல ட்விஸ்டுகளால் காட்சிப்படுத்தி ரசிக்கவைத்திருந்தார் பிரித்வி. படம் முழுக்க இருந்த மாஸ் காட்சிகள் மோகன்லாலின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு கைகொடுக்க, கூடவே விவேக் ஒபாராயின் வில்லத்தனம், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் போன்ற ஜாம்பவான்கள் நடிப்பில் மிளிர, இந்தப் படத்தை கேரள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன்காரணமாக மலையாள சினிமாவில் ரூ.200 கோடி வசூலை எட்டிய திரைப்படமாக 'லூசிபர்' அமைந்தது.

இந்த வெற்றி பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழில் பிரித்விராஜிடம் ரஜினி தனக்கும் இதுபோன்று ஒரு படம் இயக்க சொல்ல, தெலுங்கில் சிரஞ்சீவி ஒருபடி மேலே சென்று 'லூசிபர்' தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றி பிரித்விராஜை இயக்க அழைப்பு விடுத்தார். என்றாலும் பிரித்விராஜ் படங்களில் நடிப்பதில் பிசியாக இறுதியாக தமிழ் இயக்குநர் மோகன்ராஜாவை வைத்து படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார் சிரஞ்சீவி. விறுவிறுப்பாக படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இசையமைப்பை தமன் மேற்கொண்டு வருகிறார்.

அய்யப்பனும் கோஷியும்: கடந்த வருடம் மலையாள சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது என்றால், மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் அவரின் ஆஸ்தான ஹீரோக்களான பிஜு மேனன், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படம்தான். அய்யப்பன் நாயர் என்ற போலீஸும் - கோஷி குரியன் என்னும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொள்ளும் போது நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும், அதனால் இருவருக்குள்ளும் ஏற்படும் ஈகோ மோதலே இந்தப் படத்தின் கதை. அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் பிஜு மேனனும், கோஷி குரியன் கதாபாத்திரத்தில் பிரித்விராஜும் நடிப்பில் வெளுத்துக்கட்ட முதல் லாக்டவுன் சமயத்தில் வெளியாகி பல்வேறு தரப்பிலான ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. 

இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணும், கோஷி கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும் நடித்து வருகிறார்கள். இந்தப் படப்பிடிப்பில் இருந்து சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் தெலுங்கு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவியது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடியவிருக்கும் இந்தப் படமானது வரவுள்ள சங்கராந்திக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ்: 'அய்யப்பனும் கோஷியும்' இயக்குநர் சச்சியின் எழுத்தில் உருவான மற்றொரு 'ஈகோ' கதைதான் 'டிரைவிங் லைசென்ஸ்'. ஒரு பெரிய சினிமா சூப்பர் ஸ்டாருக்கும், அவரின் தீவிர ரசிகராக இருக்கும் போக்குவரத்து ஆய்வாளருக்கும் ஏற்படும் மோதல் ஈகோவாக வெடிக்க இருவரில் யார் வெல்கிறார் என்பதுதான் கதை. சூப்பர் ஸ்டார் ஹரிந்திரனாக ப்ரித்விராஜும், போக்குவரத்து ஆய்வாளராகக் குருவில்லாவாக சூரஜ் வெஞ்சரமூடுவும் நடிக்க நடிகர் லாலின் மகன் ஜீன்பால் லால் இயக்கி இருந்தார். கிட்டத்தட்ட 'அய்யப்பனும் கோஷியும்' கதையின் ஒன்லைன் போலதான் இதுவும். என்றாலும் இதன் திரைக்கதை, காட்சியமைப்பு போன்றவை படத்தை வேறுபடுத்தி காட்டின. 

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம்சரண் வாங்கி வைத்துள்ளார். இதில் ராம்சரண் - வெங்கடேஷ் இணைந்து நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்', ஷங்கர் படம் என பிஸியாக இருக்கும் ராம்சரண் இந்தப் படங்களை முடித்துவிட்டு டிரைவிங் லைசென்ஸ் ரீமேக்கை எடுக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஹெலன்: மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'ஹெலன்'. வினித் ஸ்ரீநிவாசன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் அன்னா பென், அஜு வர்கீஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் நாயகி ஒருநாள் இரவு காணாமல் போவதும், அவரை தேடிக் கண்டுபிடிப்பதும் என சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான 'ஹெலன்' திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம், திரைக்கதையின் யதார்த்தம். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இது ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் உரிமையாளர் பிரசாத் வி பொட்லூரி கைப்பற்றி இருக்கிறார். அன்னா பென், கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. கொரோனா காரணமாக தாமதமான இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பேலா: அதே அன்னா பென், ரோஷன் மேத்யூ, ஶ்ரீநாத் பாஸி என இளம் நட்சத்திரங்கள் கொண்ட இந்தப் படத்தை முகமது முஸ்தஃபா என்பவர் இயக்கி இருந்தார். கொரோனா முதல் லாக்டவுன் அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பெண் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் சந்திக்கும் இரண்டு ஆண்கள். நல்லவன், கெட்டவன் தெரியாத அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் அந்தப் பெண் சந்திக்கும் பிரச்னைதான் கதை. இதன் தெலுங்கு ரீமேக் உரிமையையும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜசேகர் மகள் நடிக்க, ஶ்ரீநாத் பாஸி கேரக்டரில் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நாயகனான விஷ்வாக் சென் நடிக்க இருக்கிறார். 

இஷ்க்: மலையாளத்தில் வெற்றியடைந்த மற்றொரு திரைப்படம் 'இஷ்க்'. ஓர் இளம் காதல் ஜோடிக்கும், அவர்களுக்கு இடையான காதல், காதலுக்கான ப்ரைவசி, காதலியின் சுயமரியாதை என நுணுக்கமான விஷயங்களை ஒரு லைன் கதையுடன் கடந்து போகும் இத்திரைப்படம். ஆனால் அடுத்து என்ன என்ற விறுவிறுப்புடன் சாலை, இரண்டு வீடுகள், ஒரு கார் என மிகச்சிறிய அளவிலான லொகேஷன்கள், குறைவான நடிகர்கள், மிக மிக குறைவான பட்ஜெட் என அழகான சினிமாவாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படத்தில் வளர்ந்து வரும் ஹீரோ ஷேன் நிகம் நடித்திருந்தார்.

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் 'இஷ்க்' பெயரில் கடந்த வாரம் வெளியானது. சஜ்ஜா தேஜா மற்றும் ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்க மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் எஸ்எஸ் ராஜு என்பவர் இயக்கி இருந்தார். படம் தெலுங்கிலும் நல்ல விமர்சனத்தை எதிர்கொண்டது. கொரோனா சூழல் காரணமாக தியேட்டர் வசூல் கிடைக்கவில்லை என்றாலும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிஷ்யம் 2: ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியானது 'திரிஷ்யம்'. ஒரு குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தற்காப்புக்காக கொலை செய்துவிட்டு அதனை காவல்துறையிடமிருந்து சிக்காமல் தப்பிப்பதே 'திரிஷ்யம்' படத்தின் முக்கியமான கதையம்சம். சினிமாவின் 'கிரைம் த்ரில்லர்' கதையாக்கத்தில் உருவான இத்திரைப்படம் 2013-இல் மலையாள திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின்பு இத்திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் மோகன்லால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி 'த்ரிஷ்யம் 2' பெயரில் ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்தையும் கொண்டாடினர் ரசிகர்கள். இரண்டாம் பாகமும் வெற்றியடைந்ததால், உடனடியாக தெலுங்கு 'த்ரிஷ்யம் 2' அறிவிப்பு வெளியானது. முதல் பாகமான 'த்ரிஷ்யம்' படத்தை தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். அங்கும் வெற்றி கண்டது. இப்போது தெலுங்கு ரீமேக்கை ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார். வெங்கடேஷ் - மீனா நடித்துள்ளனர். இந்தப் படமும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாயட்டு: இந்த வருடம் வெளியான மலையாள திரைப்படங்களில் மிகப் பெரிய வெற்றிப்படமாகவும், பேசுபொருளாகவும் அமைந்தப் படம் 'நாயட்டு'. குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகும் முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அதன் இயக்குநர் மார்டின் பிரகாட். முதல் படைப்பான 'சார்லி' படத்துக்கு பிறகு நீண்ட வருடங்களுக்குப் பிறகு மார்டின் பிரகாட் இந்தப் படத்தை எடுத்திருந்தார். அதன்படி ஏப்ரல் 8-ம் தேதி வெளியானது இந்தப் படம். 

காவல் துறைக்குள் நடக்கும் சம்பவங்கள், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், பட்டியலின மக்களின் வாக்குகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளும் விதம், என்று சமகால லாப அரசியலை அழுத்தமாக பதிவு செய்தது இந்தப் படம். ஓடிடியில் வெளியான இந்தப் படம் அரசியல் சர்ச்சைகளைத் தாண்டி பல்வேறு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இதனால் தற்போது இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட இருக்கிறது. 

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கு ரீமேக் உரிமையை தெலுங்கு சினிமாவின் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் கைப்பற்றி இருக்கிறார். அவரது குடும்ப நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் மூலம் அல்லு அர்ஜுன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய அல்லு அர்ஜுன் தரப்பு ஏற்கெனவே இரண்டு இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் எனக் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர 'ஜோசப்' உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கின்றன. மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக தரமான படைப்புகளாக மலையாள திரைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. இதன் காரணமாக சமீபகாலமாக மலையாள திரைப்படங்களுக்கு தெலுங்கு திரையுலகில் அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளன. தெலுங்கில் இந்தப் படங்களின் வெற்றியும் முக்கியமான காரணமாக அமைகிறது. இதனால் மலையாள திரைப்படங்களில் ரீமேக் உரிமைகளை கைப்பற்றும் போட்டி தெலுங்கு திரையுலகில் அதிகரித்து காணப்படுகிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com