வெங்கையா நாயுடுவைத் தேர்வு செய்ததற்குக் காரணங்கள் என்ன?

வெங்கையா நாயுடுவைத் தேர்வு செய்ததற்குக் காரணங்கள் என்ன?
வெங்கையா நாயுடுவைத் தேர்வு செய்ததற்குக் காரணங்கள் என்ன?

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வெங்கய்யா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக அவரைத் தேர்வு செய்ததற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன:

1. தென்மாநில வேட்பாளர்

வெங்கய்யா நாயுடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக வட இந்தியர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது. அவர் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். வெங்கய்யா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளித்ததுபோல் இருக்கும்.

2. மாநிலங்களவை அனுபவம்

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலவையில் அவருக்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. வெங்கய்யா நாயுடு 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2004, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் எம்.பி.யாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல், அவர் பலமுறை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பிடித்தவர். தற்போது அவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் மாநிலங்களவையில் பலவீனமாக உள்ள பாஜக ஒருவகையில் பலமாக அமையலாம்.

3. பாஜகவின் தீவிர தொண்டர்

வெங்கய்யா நாயுடு தனது இளம்வயதிலிருந்தே பாஜகவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். பாஜக, ஜனதாக்கட்சியாக இருந்தபோது 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் ஆந்திர மாநிலத் தலைவராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு ஜனதாக் கட்சியில் இருந்து ஆந்திர சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ. வெங்கய்யாநாயுடுதான். 1980 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பாஜக இளைஞர் அமைப்பின் தேசியத் தலைவராகவும் இருந்துள்ளார். 1980 முதல் 1985 ஆம் ஆண்டு வரை பாஜகவின் ஆந்திர சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றியுள்ளார். 1988 முதல் 1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராக இருந்தார். 1993 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஜூலை 2002 - டிசம்பர் 2002, ஜனவரி 2004 மற்றும் அக்டோபர் 2004ல் கட்சித் தலைவராகவும், ஏப்ரல் 2005லிருந்து ஜனவரி 2006வரை துணைத்தலைவராகவும் வெங்கையா நாயுடு பதவி வகித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலும், மத்திய தேர்வுக் குழுவிலும் அவர் இடம் பிடித்துள்ளார். 1996 முதல் 2000ஆம் ஆண்டு வரை பாஜகவின் செய்தித்தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

4. மூத்த அமைச்சர்

மத்திய அமைச்சர்களில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு பிறகு மூத்த அமைச்சர் வெங்கய்யா நாயுடுதான். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் செப்டம்பர் 30, 2000 முதல் ஜூன் 30, 2002 வரை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது மோடி அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார். பல நேரங்களில் அரசுக்கு எதிராக எழும் கருத்துக்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு மத்திய அமைச்சரவையில் மோடிக்கு பக்கபலமாக இருப்பவர் வெங்கய்யாநாயுடு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com