'டெல்டா பிளஸ்' கொரோனா திரிபு, கவலை தரக்கூடியதாக அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
டெல்டா பிளஸ் கொரோனா வகை, இந்தியா முழுவதும் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகிறது. முன்னராக டெல்டா கொரோனா வகை இரண்டாவது அலை கொரோனாவை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த புதிய வகை டெல்டா பிளஸ், 3வது அலைக்கான வழியை வகுக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த அச்சத்தின் பின்னணி என்ன, இது இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இதுவரை இதுதொடர்பாக வந்திருக்கும் நிபுணர் கருத்துகள் என்னென்ன என்பதுபற்றி இங்கு விரிவாக காணலாம்.
தற்போதுவரை மகாராஷ்ட்ரா, கேரளா, மத்திய பிரதேச மாநிலங்களில்தான் இது அதிகமாக தெரியவந்திருப்பதால், அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்திருத்திருந்தது. இம்மாநிலங்கள் யாவும், எந்த மாவட்டத்தில் டெல்டா பிளஸ் உறுதிசெய்யப்பட்டு வருகிறதோ, அங்கு தீவிர கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமென்றும், ஒருவேளை அலட்சியம் செய்தால், பேரழிவு ஏற்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
“இப்போதிருந்தே டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த அறிவியலாளர்களும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு, கவலைத்தரக்கூடிய திரிபு (Variant of Concern) என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. உடன், மத்திய சுகாதார அமைச்சகம் "இதன் ஆபத்தை இப்போதே யூகிப்பது கடினம். இந்த திரிபு, எளிதாக பரவக்கூடியது. மேலும் நுரையீரலில் எளிதாக கலந்து பாதிப்பை ஏற்படுத்துவது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருப்பது, வைரஸை அழிக்க உதவும் எதிர்ப்பணுக்களை மீறியும் வைரஸ் செயலாற்றுவது போன்ற தன்மைகளுடன் இது உள்ளது. ஆனால் இதன் தீவிரம் இப்போதுவரை தெரியவில்லை" என தெரிவித்திருக்கிறது.
எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டால், அடுத்த 3,4 மாதங்களில் இரண்டாவது அலை கொரோனாவில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட கூடுதல் பாதிப்பை விடவும் மிகவும் கடுமையான பாதிப்பை நாம் சந்திக்க நேரிடும். அப்படியான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது, இந்த டெல்டா பிளஸ் திரிபு. ஆகவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்தளவுக்கு ஆபத்தான இந்த திரிபு இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், போர்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், ரஷ்யா, சீனா போன்ற 9 நாடுகளிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே டெல்டா திரிபு உலகம் முழுவதும் ‘மிகவும் கவலை தரக்கூடியதாக’ வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் இது மேலும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. அது, இதற்கு முன்பு இந்தியாவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா திரிபுகள் யாவும், கவலை தரக்கூடியது என வகைப்படுத்தும் முன்னரே, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இந்த திரிபோ இப்போதுதான் பரவத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தியாவில் இத்தொற்று 40 - 50 பேருக்குத்தான் கண்டறியப்பட்டுள்ளது. அதற்குள் இதை மத்திய அரசு கவலை தரக்கூடியது என அறிவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துவருகிறது. ஒருவேளை அரசு அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டதா, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதால் உடனடி கவனம் தேவை என நினைத்து இந்த முடிவை எடுத்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
“கவலைத்தரக்கூடிய கொரோனா திரிபு என்பதை அறிய, உயிரியல் மற்றும் மருத்துவ ரீதியல் அதிகப்படியான தகவல் தேவை. இதனால் பாதிக்கப்பட்ட சில நூறு நோயாளிகளையாவது பரிசோதனைக்கு உட்படுத்தி, பாதிப்பின் தீவிரத்தை அரசு அறிய வேண்டும். அதன்பின்னரே, முடிவுக்கு வரவேண்டும்” என்கின்றனர் அறிவியலாளர்கள். அதேபோல, தற்போது இந்தியாவில் விநியோகிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு, இதன் தாக்கம் இருக்குமா என்பதும் கேள்வியாகவே உள்ளது.
இந்த கேள்வியின் அடிப்படையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் அனுராக், ‘மக்கள் இப்போதைக்கு அச்சமடைய வேண்டாம். இதற்கான பிரத்யேக அறிகுறிகள்கூட இன்னும் கண்டறியப்படவில்லை. இப்போதுதான் இதன் தாக்கம் கவனிக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில், இதை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட அறிவுறுத்திவருகிறோம். மக்கள், தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமின்றி இருந்தால் போதும்’ எனக்கூறியுள்ளார்.
முன்னராக இந்தியாவில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்திய முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில், முதலில் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தவை மகாராஷ்ட்ரா – கேரளா போன்றவைதான். இப்போது இந்த டெல்டா பிளஸ் கொரோனா, இங்குதான் பரவத்தொடங்கியுள்ளது. ஆகவே, இப்போதிருந்தே அரசு விழிப்புடன் செயல்படுவது, காலத்தின் கட்டாயம்.