தங்க நகைகள் மீதான மத்திய அரசின் ஹால்மார்க் விதிமுறைக்கு எதிர்ப்பு ஏன்? - ஒரு பார்வை

தங்க நகைகள் மீதான மத்திய அரசின் ஹால்மார்க் விதிமுறைக்கு எதிர்ப்பு ஏன்? - ஒரு பார்வை
தங்க நகைகள் மீதான மத்திய அரசின் ஹால்மார்க் விதிமுறைக்கு எதிர்ப்பு ஏன்? - ஒரு பார்வை

தங்க நகைகளுக்கான ஹால்மார்க் விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை விற்பனையாளர்கள் இன்று நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

தங்க நகைகளுக்கு அளிக்கப்படும் தரக்குறியீட்டு சான்றிதழ் ஹால்மார்க் எனப்படுகிறது. இதுவரையில் ஹால்மார்க் முத்திரை இடுவதென்பது நகை வியாபாரிகளின் தனிப்பட்ட முடிவாகவே இருந்து வந்த சூழலில், தற்போது நாடெங்கும் விற்கப்படும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இடப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நாடெங்கும் உள்ள 256 மாவட்டங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தங்க நகைகளை வாடிக்கையாளர்களிடம் தரமானதாகவும் எவ்வித முறைகேடின்றியும் கொண்டு சேர்ப்பதற்காக இத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.ஆனால், நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக நகை வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடும் போது, பிரத்யேக அடையாள எண் தரும் விதி டிராக்கிங் செய்ய பயன்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் நாட்டில் ஓராண்டில் 10 முதல் 12 கோடி தங்க நகைகள் செய்யப்படுவதாகவும், ஏற்கனவே கிடப்பில் ஹால்மார்க் செய்யப்பட வேண்டிய 6 முதல் 7 கோடி நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முத்திரையிடும்போது நகைகள் வீணடிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். வெறும் 83 ஹால்மார்க் தரச்சான்றிதழ் அளிக்கும் மையங்களை நாட்டில் பயன்பாட்டில் வைத்து, தற்போதிருக்கும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடவே 3லிருந்து 4 வருடங்கள் ஆகும் என்றும், எனவே இது நடைமுறை சாத்தியமற்றது என்றும் தெரிவிக்கின்றனர்.

இத்துடன் ஹால்மார்க் குறித்து நித்தி ஆயோக் அளித்திருக்கும் அறிக்கையை கருத்தில் கொள்ளவும், நகை வணிகர்கள் வலியுறுத்துகின்றனர். இவற்றை குறிப்பிட்டு புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் உள்ள 350 நகை வணிகர்களின் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களிலும் நகை வணிகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையிடுவது ஏன்?

தங்க நகைகள் வாங்கும் அனைவருக்கும் பரிட்சயமான சொல் ஹால்மார்க். தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை தான் ஹால்மார்க். இது இந்திய தர நிர்ணய அமைப்பால் 2000 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தரக்குறைவான தங்க நகைகள் வாங்கி நுகர்வோர்கள் ஏமாற்றம் அடைவதை தவிர்த்து பாதுகாப்பதற்காக ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. ஹால்மார்க் என்பது மொத்தம் 4 முத்திரைகளை உள்ளடக்கியது ஆகும். பி.ஐ.எஸ் முத்திரை, நேர்த்திதன்மை முத்திரை, அஸேயிங் மற்றும் ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகை விற்பனையாளர் முத்திரை, என்பது தான் அந்த நான்கு முத்திரைகள் ஆகும்.

ஒவ்வொரு நகையிலும் இந்த நான்கு முத்திரைகளும் இருந்தால், அது ஹால்மார்க் தங்க நகை எனப்படும். ஹால்மார்க் நகை என்று கூறி நகைக்கடையில் ஒரு நகையை விற்றால் அதில் இந்த நான்கு முத்திரைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். நான்கில் ஒரு முத்திரை இல்லாவிட்டாலும், அதை ஹால்மார்க் நகை என்று கூற முடியாது. நாம் வாங்கும் நகை சிறிய மோதிரமாக இருந்தாலும் சரி, பெரிய ஆபரணமாக இருந்தாலும் சரி அந்த நகையின் அளவை பொறுத்து சிறியதாகவும் பெரியதாகவும், இந்த நான்கு முத்திரைகளும் இடம் பெற்றிருக்கும். பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குவது என்பது, தாம் வாங்கும் தங்கத்தின் சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் நடைமுறையாகும்.

ஹால்மார்க் முத்திரை திட்டம் கட்டாயமாக்கப்படாத காலங்களில் தாமாக முன்வந்து கேட்கும் நகை வியாபாரிகளுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு வந்தது. தற்போது சர்வதேச வர்த்தக அமைப்பான WTO, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. அந்த வகையில் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக நகைகடை உரிமையாளர் லோகநாதன் பேசுகையில், ''பொதுமக்கள் நகைகளை வாங்குவதற்கு ஹால்மார்க் முத்திரையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட பிறகு, அதற்கான தனித்துவமான எண், HUID எண்ணை பதிவு செய்து அதைத்தான் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பதை தான் நாங்கள் எதிர்கிறோம். அதிலுள்ள சிக்கல்களால் தான் இந்த எதிர்ப்பு. இந்தியாவில் எத்தனையோ மாவட்டங்கள் இருக்கும்போது 256 மாவட்டங்களில் மட்டும் இந்த கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இந்த நடைமுறை உள்ளது. மற்றவற்றில் இல்லை. வணிக்கத்தில் ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. HUID நடைமுறையை பொறுத்தவரை விற்பனையாளர் தன்னுடைய கடை சீலை பதிவுசெய்து, ஹால்மார்க் மையத்தில் கொடுத்து அனைத்தையும் அவரே செய்துவிடுவார். யார் ஒருவர் முதல் விற்பனையாளராக இருக்கிறாரோ அவரே HUID முத்திரையிட்டு கொடுக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

வாடிக்கையாளர்கள் HUID கொண்டுபோய் பார்த்தால், இந்த நகை எங்கிருந்து வந்தது என்பதை பார்த்தால் தொழில் நடக்கும்?
இதன்மூலம் எங்களுடைய ரகசிய குறியீட்டு எண்ணை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படுகிறது. அதை வைத்து தான் HUID எண்ணை அவர்கள் பதிவு செய்ய முடியும். பெரும்பாலான மாவட்டங்களில் ஹால்மார்க் மையங்கள் இல்லை. மையங்கள் இருக்கும் மாவட்டங்களுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும்போது, அதற்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. மேலும் காலதாமதமும் ஏற்படும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் வாங்கும் நகைகளில் நம்பகத்தன்மை இல்லை. இந்த முறை வருவதால் மக்களுக்கு நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். வெளிப்படைத்தன்மை ஏற்படும். நகைக்கடைக்காரர்கள் தாங்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களை எடுத்து கூறி தீர்வு காணலாம். மற்றபடி ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தை நாம் எதிர்க்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com