தொடரும் கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்து தட்டுப்பாடு: பின்னணியும், தீர்வும்

தொடரும் கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்து தட்டுப்பாடு: பின்னணியும், தீர்வும்
தொடரும் கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்து தட்டுப்பாடு:  பின்னணியும், தீர்வும்

கருப்பு பூஞ்சை தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் சூழலில், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து பற்றாக்குறையும் நீடித்தபடியே இருக்கிறது. இந்தப் பற்றாக்குறைக்கு காரணம் என்ன, அதை சரி செய்ய மத்திய அரசு வைத்துள்ள திட்டம் என்ன என்பதை இங்கே விரிவாக காணலாம்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்தியாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் நோய், கருப்பு பூஞ்சை. இந்தியாவில் இதுவரை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் இந்த கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து வகை பற்றாக்குறையாக இருப்பது மக்களை கலக்கமடைய செய்திருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி பல்வேறு மாநிலங்களும் இதனை வெளிப்படையாக மத்திய அரசுக்கு கூறியிருக்கிறது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இம்மருந்து பற்றாக்குறை தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, பற்றாக்குறையை மத்திய அரசு நீதிமன்றத்தில்ப்புக்கொண்டது. மேலும் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைகளில் இந்த மருந்து விற்பனை செய்யப்படுவது தான் பற்றாக்குறைக்கு காரணம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. அதேபோல மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதுவும் பற்றாக்குறைக்கான காரணங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது

கருப்பு பூஞ்சை தொற்று, ஏற்கெனவே இருக்கக் கூடிய ஒரு நோய் தான் என்றாலும் கொரோனா பரவல் காரணமாகவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் கடுமையான நோய் எதிர்ப்பு திறன் குறைவு காரணமாகவும் இது மிக வேகமாக பரவுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நோய்க்கான சிகிச்சைக்கு ஆம்போடெரிசின்-பி மருந்தினை முதன்மையாக பயன்படுத்தலாம் என்றும், ஒருவேளை இந்த மருந்து கிடைக்காத பட்சத்தில் Deoxycholate ஊசி பயன்படுத்தலாம் என்றும், அதுவும் கிடைக்காத பட்சத்தில் பைசர் நிறுவனத்தின் isavuconazole அல்லது posaconazole ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் பிற மருந்துகளில் பக்க விளைவுகள் சற்று அதிகமாக இருக்கலாம் என்பதால் மருத்துவர்கள் பெரும்பாலும் ஆம்போடெரிசின்-பி மருந்தை மட்டுமே பரிந்துரைப்பதாலும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தற்பொழுது இந்த நோய் பரவி வரும் வேகத்தைப் பார்க்கும்போது, 9 முதல் 10 லட்சம் ஆம்போடெரிசின்-பி ஊசிகள் தேவைப்படலாம் என்ற கணக்கீடு சொல்லப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 1.63 லட்சம் ஊசிகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் 3.63 லட்சம் ஊசிகள் இறக்குமதி செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 67, 930 ஊசிகள் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு மூன்று லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படக் கூடிய நிலையில் எங்களுக்கு வெறும் 21,590 ஊசிகள் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது என மகாராஷ்டிர அரசு வெளிப்படையாகவே கூறியதை வைத்து எந்த அளவிற்கு பற்றாக்குறை நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஜூன் மாதத்தில் உள்ளூர் தயாரிப்பு இரண்டரை லட்சம் வரை உயர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய ஊசிகளையும் சேர்த்து ஜூன் மாதம் மாநிலங்களுக்கு 5.70 லட்சம் ஊசிகள் வழங்கப்படும் என கூறியுள்ளது.

தற்போது இந்தியாவில் ஆம்போடெரிசின்-பி மருந்தினை பாரத் சிரம், சன் பார்மா லைஃப் கேர் இன்னவேசன் என வெகு சில நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வரும் நிலையில் புதிதாக ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய நிறுவனங்கள் ஜூலை மாதம்தான் மருந்து தயாரிப்பதை மேற்கொள்ள முடியும் என்றும் அதுவும் ஆரம்ப கட்டத்தில் மொத்தமாக வெறும் 1.11 லட்சம் மருந்துகளை மட்டுமே தயாரிக்க முடியும் என்றும் தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து மருந்தை இறக்குமதி செய்வது மட்டும் தான் ஒரே வழி எனவும் மத்திய சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இப்படியாக, தேவைக்கான அளவும் கையிருப்பும் மலைக்கும் மடுவுக்குமாய் அதிக வித்தியாசம் கொண்ட நிலையில் நோயின் தாக்கம் எதிர்பாராத வகையில் மேலும் அதிகரித்தால் நிலைமை சற்று சிக்கலாக மாறி விடும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com