தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 2

தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 2
தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 2

உண்மையில் தக்கீக்கள் இருந்தார்களா?

சில வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆங்கில ஆட்சியில் இருந்தார்கள் என்ற ஒற்றை உண்மையை வைத்துக் கொண்டு, ‘தக்கீ’ என்ற மூகமூடி அணிவித்து பல இன மக்களையும் ஆங்கில அரசு கொன்று குவித்ததே வரலாற்று உண்மை. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. சில உங்களுக்காக…

1. கைதானவர்கள் மீது வரம்பில்லா சட்ட அதிகாரத்தை ஆங்கில அரசு பெற்று இருந்தது. மனித உரிமைகள் பற்றிய பேச்சே இல்லை. இன்றும் சட்டரீதியாக உள்ள அடிமையைக் குறிக்க XXX என்ற குறியீடு ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. இந்தக் குறியீடு ‘ தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட்’டின் சட்டத்தில் உள்ள முப்பதாவது (ரோமன் எழுத்தில் XXX) சட்டத்தைக் குறிக்கக் கூடியது. XXX என்ற பெயரில் சில ஆண்டுகள் முன்பு வெளிவந்த ஆங்கிலப் படவரிசையின் மூலக்கரு இந்தச் சட்டம்தான். ஒரு மனிதனை ஒரு அரசு சட்டபூர்வ அடிமையாக வைத்துக் கொள்வதை ஆதரிப்பதே இந்தச் சட்டத்தின் சாரம்).

2. ’தக்கீகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், பரம்பரைக் கொலைகாரர்கள், அவர்களது வீட்டில் உள்ள அனைவருமே குற்றத்திற்கு துணை செல்பவர்கள்’ - என்பது போன்ற தோற்றத்தை ஆங்கில அரசு உருவாக்கியது. அந்த அடிப்படையில்தான் பிற்காலத்தில் ‘குற்றப் பழங்குடி’ - என்ற சொல்லாடல் தோன்றியது. இது முற்றிலும் தவறு. தக்கீகள் என்று ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டவர்களில் இசுலாமியர்கள், இந்துக்கள் என்று இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்துக்களில் பிராமணர்கள் கூட தக்கீகள் என்று கைது செய்யப்பட்டனர். ’தக்கீகளின் மன்மதன்’ - என்று அழைக்கப்பட்ட பரீங்கா ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் ஆவார். பரீங்கா கைது செய்யப்படும்வரையில் அவரது குடும்பத்தினருக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று ஆங்கிலேயரின் ஆவணங்களே கூறுகின்றன. பரீங்கா வழக்கில் அவரோடு தொடர்புடைய குடும்பத்தினர் யாரும் கைது செய்யப்படவில்லை. பரீங்கா அப்ரூவராக மாறிவிட்டார் என்று பரீங்கா கைகாட்டியவர்களை எல்லாம் ஆங்கில அரசு கைது செய்தது.

3. தக்கீக்கள் பரம்பரை பரம்பரையாக வருபவர்கள் - என்று ஆங்கில அரசு சொன்னது. அந்த அடிப்படையில்தான் தக்கீ என்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குழந்தைகள் கூட ஆங்கிலேயக் காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தக்கீக்களின் வாக்குமூலங்களாகப் பதிவு செய்துள்ள சில தகவல்களில் பிடிபட்ட சிலர் ‘நான் இப்போதுதான் முதல்முறையாக கொள்ளைக்கு வந்தேன். வறுமை காரணமாக இவர்களுடன் சேர்ந்தேன். இதுவரை யாரையும் கொலை செய்யவில்லை. என் குடும்பத்தினருக்கு இது தெரியாது’ - என்று கூறி உள்ளதும் பதிவாகி உள்ளது. இது தக்கீக்கள் என்று ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பிம்பம் உண்மையில் போலியானது என்பதையும், அவர்கள் வறுமையால் பெருகிய கொள்ளைக்காரர்கள்தான் என்பதையுமே காட்டுகின்றது.

4. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு இந்தியாவில் தக்கீக்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால், உள்ளூர் பணக்காரர்களிடம் திருடப் புறப்பட்ட முதல் தலைமுறைக் குற்றவாளிகளாகவே இவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள். பஞ்சத்தை மறைக்கவே இவர்களுக்கு ‘காளி வழிபாடு’ என்ற புதிய காரணத்தை ஆங்கில அரசு உருவாக்கியது. 

5. இந்திய பெண் கடவுளான காளியை ஆங்கிலேயர்கள் கோரமான, அஞ்சத்தக்க கடவுளாகவே பொதுவாகப் பார்த்தனர். அந்த மனநிலையின் வெளிப்பாடுதான் இது.

6. தக்கீ – என்பதற்கு பொதுவான வரையறை எதுவும் இல்லை.
 
7. யார் தக்கி? யார் தக்கி இல்லை?- என்று தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட்டுக்கு மட்டுமே தெரியும். அதில் காவல் அதிகாரியும் ஸ்லீமன்தான், நீதிபதியும் ஸ்லீமன்தான். மேல்முறையீடோ, குறுக்குவிசாரணையோ கிடையாது. இதனால் அவர்கள் ஒருவனைக் கைது செய்து தக்கீ என்று முத்திரை குத்தினால் அவன் தக்கீதான். அவன் தனது மாற்று அடையாளத்தை எப்படியும் நிரூபிக்க முடியாது. 

8. ஆங்கிலேயரிடம் சிக்கிய தக்கீ(!)க்கு உயிர்பிழைக்க அளிக்கப்பட்ட ஒரே வாய்ப்பு பிற தக்கீக்களைக் காட்டி கொடுப்பதுதான். இப்படி சரணடைந்த ஒரு தக்கீ யாரை எல்லாம் சுட்டிக் காட்டுகிறாரோ அவர்கள் எல்லாமே தக்கீக்கள் என்று கருதப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தங்களை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

9. சரணடைந்து, பிற தக்கீக்களை காட்டிக் கொடுத்த ஒருவரை ‘தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட்’டைச் சாராத எவராலும் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. இதன் அர்த்தம் இந்த தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட் முடிவு செய்துவிட்டால் ஒருவரை சரண்டைந்த தக்கீயாக செட்டப் செய்து இந்தியர்கள் யாரை வேண்டுமானாலும் அவரது கூட்டாளியாகக் காட்டித் தூக்கில் போடமுடியும். 

10. தக்கீ என்று கைது செய்யப்பட்ட ஒருவர் அரசின் அப்ரூவராக மாறிவிட்டால், அவரது நண்பர்கள், உறவினர்கள் அனைவரின் வீடுகளைச் சுற்றியும் காவல் போடப்பட்டது. அவர்கள் பிற தக்கிகளுக்கு தகவல் தரலாம் என்பதற்காக இது செய்யப்பட்டது என ஆங்கில அரசு கூறியது. உண்மையில் ஆங்கில அரசு உருவாக்கிய ‘போலி அப்ரூவர்’ குறித்த உண்மைகள் வெளியே கசியாமல் இருக்கவே இப்படி செய்யப்பட்டது.

11. தக்கீக்கள் வலிமை மிக்க கொலைகார இயக்கத்தினர் என்றால், அவர்கள் ஏன் ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டு அவர்களைக் கொல்லாமல் நரிகளிடம் ஆட்டுமந்தைகள் சிக்கியதைப் போல மாட்டி இறந்தார்கள்?, ஏன் பழிவாங்க யாரும் புறப்படவில்லை? - என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. தக்கீக்கள் குறிவைத்து ஆங்கிலேய அதிகாரி ஒருவரைக்கூட கொல்லவில்லை - என்று ஆங்கிலேய ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன. 

12. தக்கீக்கள் என்று ஏற்கும்படி ஆங்கிலேயர்கள் வற்புறுத்தியதனால் பலர் அதனை ஏற்றனர் - என்று கருதத் தக்க பல புள்ளிவிவரங்கள் ஆங்கிலேய ஆவணங்களிலேயே உள்ளன. உதாரணமாக 1840ல் தக்கீ என்று குற்றம் சாட்டப்பட்டு கைதான 3689 பேரின் விவரங்களைக் கூறலாம். அவர்களில் 466 பேர் தூக்கிலிடப்பட்டனர், 1504 பேர் அந்தமான் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டனர், 933 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, 81 பேருக்கு சில ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது, 97 பேர் விடுதலை செய்யப்பட்டனர், 58 பேர் அப்ரூவர்களாக மாற்றப்பட்டார்கள், 12 பேர் சிறையில் இருந்து தப்பினர். இதெல்லாம் ஆங்கிலேய நீதி பரிபாலனத்தின் சாதனைகள் என்றே நாம் ஏற்றுக் கொண்டாலும், மீதமிருந்த 208 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்தனர் என்று இவர்கள் கூறுவதை என்னவென்று ஏற்பது?. இந்த மரணங்களை ‘இயற்கை மரணங்கள்’ என்று கூசாமல் பதிவு செய்திருக்கின்றன ஆங்கிலேய ஆவணங்கள். வலிமை மிக்க மனிதர்கள் கண்ணியமான விசாரணையைத் தாங்க முடியாமல் ஓராண்டுக்குள் இறந்ததன் பின்னாக உள்ள உண்மை, அவர்கள் சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதுதான்.

13. தக்கீக்கள் உண்மையில் இல்லவே இல்லை என்று பல ஆங்கில நீதிபதிகளுக்குத் தெரியும். ஒருவர் இதனை நீதிமன்றத்திலேயே சொன்னார். அவருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது.

14. இந்தியா முழுவதிலும் இந்த தக்கீ பிம்பத்தை ஆங்கிலேயர்களால் உருவாக்க முடியவில்லை. தமிழகம், ஆந்திரா, ஒரிசா, வங்காளம், கர்நாடகா - ஆகிய பகுதிகளில் எந்த ஒரு பெரிய கொள்ளையும் கண்டு பிடிக்கப்படவில்லை. ’சேலத்திற்குத் தெற்கே தக்கீக்கள் இல்லை’ - என்று ஸ்லீமனே குறிப்பிடுகிறார், தமிழகத்தில் தக்கீக்கள் இல்லை என்பதே இதன் அர்த்தம். தமிழகத்தில் சேலம் தவிர வேறு எங்கும் தக்கீ நடமாட்டம் கூட ஆங்கிலேயர்களால் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தக்கீ ஒழிப்பின் தொடர் விளைவான, குற்றப்பரம்பரைச் சட்டம் இங்கெல்லாம் பின்னாட்களில் கடுமையாக அமலானது.

15. 1856ல் ஸ்லீமன் இறந்தார். அவரது இறப்புக்குப் பின்னர் தக்கீ ஜோடனை வழக்குகள் குறைந்தன. 1904ல் பலனற்று இருந்த தக்கீ ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் இருந்து அகற்றப்பட்டது. 1932ஆம் ஆண்டில் ஜபல்பூர் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்லீமனின் பேரனுக்கு (அவர் பெயரும் ஸ்லீமன்தான்) எழுதிய கடிதத்தில், ”அனைத்து இடங்களிலும் இருந்து வரும் தகவல்களில் தக்கீ பற்றிய சிறு குறிப்பு கூட இல்லை” - என்று குறிப்பிடுகிறார். பிறகு இன்று வரை தக்கீக்களை வரலாற்றில் எங்கும் காணவில்லை. தக்கீக்கள் ஒழிப்புப் பிரிவை ஒழித்ததே உண்மையான தக்கீ ஒழிப்பு, ஏனெனில் அவர்கள்தான் தக்கீக்கள் என்ற அதீத கற்பனைக்கு உயிர்ரூட்டியவர்கள், அதற்காக பல்லாயிரம் மக்களின் உயிர்களை எடுத்தவர்கள்.

16. ஆங்கிலேயர்களின் இந்தக் கொலைகள் ஹிட்லரின் கொலைகளுக்குச் சளைத்தவை அல்ல!.

இப்படியாக தக்கீக்கள் பெயரால் செல்லுபடியான இந்த கோரமான நடவடிக்கைகள் நாடு முழுவதும் செல்லுபடியாகும், நாடு முழுவதும் போராடும் மக்களையும் வேண்டாத மக்களையும் ஒழிக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.  தக்கீக்கள் ஒழிப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக வந்ததுதான் குற்றபரம்பரைச் சட்டம்… அது பற்றி அடுத்த அத்தியாயத்தில்…

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com