பந்துவீச்சில் மிரட்டிய ஆப்கன்; நிலைத்துநின்று ஆடி தென்னாப்பிரிக்கவை கரை சேர்த்த ரஸி வேன் டெர் டுசன்!

தென்னாப்பிரிக்க அணி ரன் மழையாகப் பொழிந்தாலும், அவர்களின் பெரும்பாலான வெற்றிகள் சேஸிங்கில் தான் வந்தது.
 van der Dusen
van der Dusenpt desk

போட்டி 42: ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா

முடிவு: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

ஆப்கானிஸ்தான்: 244 ஆல் அவுட்

தென்னாப்பிரிக்கா: 247/5 (47.3 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: ரஸி வேன் டெர் டுசன் - 95 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் (6 ஃபோர்கள், 1 சிக்ஸர்)

SA  AFG
SA AFGpt desk

தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தத் தொடரில் பல பிரமாதமான இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார்கள். முந்தைய 8 போட்டிகளில் மொத்தம் 8 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. வேன் டெர் டுசனே இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். இருந்தாலும் இந்த இன்னிங்ஸ் அதைவிடவெல்லாம் முக்கியம். காரணம், இந்த இன்னிங்ஸ் அவர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அந்த அணியின் நம்பிக்கையை, ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. காரணம் இந்த இன்னிங்ஸ் சேஸிங்கில் வந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி ரன் மழையாகப் பொழிந்தாலும், அவர்களின் பெரும்பாலான வெற்றிகள் சேஸிங்கில் தான் வந்தது. நெதர்லாந்துக்கு எதிராக முதல் முறையாக சேஸ் செய்தபோது அந்த அணி தோல்வியைத் தழுவியது. ஒரு வீரர் கூட அப்போது அரைசதத்தைக் கடக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக சேஸ் செய்தபோது, கஷ்டப்பட்டு கடைசி விக்கெட்டால் வென்றது அந்த அணி. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்படி தடுமாறித் தடுமாறி சேஸ் செய்த அணிக்கு வேன் டெர் டுசனின் இந்த இன்னிங்ஸ் பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கும்.

SA
SApt desk

வேன் டெர் டுசன் உள்ளே வரும்போது தென்னாப்பிரிக்க அணி நல்ல நிலையில் தான் இருந்தது. 11 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் போகப் போக அணியின் நிலை கொஞ்சம் சிக்கலானது. அடுத்த இரு ஓவர்களில் டி காக் வெளியேற, மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை தடுமாற வைத்தனர் ஆப்கானிஸ்தான் பௌலர்கள். களமிறங்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வழக்கமாக சேஸிங்கில் செய்வதுபோல் நல்ல தொடக்கம் கிடைத்ததும் அவுட்டாகி வெளியேறினார்கள்.

ஆனால் வேன் டெர் டுசன் அசராமல் களத்தில் நின்றார். மிகவும் கவனமாக ஆடிய அவர், ஒவ்வொரு பந்திலும் ரன் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அணுகாமல், சரியான பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஆடினார். அதிக டாட் பால்கள் ஆடினாலும், மோசமான பந்துகளில் அதிகபட்ச ரன்களை சேர்த்தார். சீரான இடைவெளியில் ஃபோர்களும், சிக்ஸர்களும் அடித்ததால் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். அதேசமயம் ரஷீத் கான் போன்ற ஒரு பௌலரை அட்டாக் செய்ததன் மூலம் ஆப்கானிஸ்தான் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்காமலும் பார்த்துக்கொண்டார்.

SA  AFG
SA AFGpt desk

66 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அதன்பிறகும் தன் கவனத்தை சிதற விடாமல் ஆடினார். 38வது ஓவரில் மில்லர் வெளியேறியபோது மீண்டும் சிறு பயம் தொற்றிக்கொண்டது. இந்தப் போட்டியில் யான்சன் இல்லாததால் இன்னொரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையுமேர என்ற அச்சம் தோன்றியது. ஆனால் ஃபெஹுக்வாயோவை வைத்துக்கொண்டு நல்லதொரு ஆட்டம் ஆடினார் வேன் டெர் டுசன். ஃபெஹுக்வாயோ நிதானமாக ஆட, அவர் செட்டில் ஆகும் வரை வேன் டெர் டுசன் தன் பங்கைச் செய்தார். ஓரளவு செட்டில் ஆனதும் அவரே அதிரடியாக ஆட்டத்தை முடித்தும் வைத்தார். இப்படி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஒரு சேஸை தென்னாப்பிரிக்க அணிக்காக நல்லபடியாக முடித்துக்கொடுத்திருக்கிறார் வேன் டெர் டுசன்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இந்தப் போட்டியில் முதலில் பந்துவீசியது எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்களே சேஸ் செய்யவேண்டும் என்று தான் நினைத்திருந்தோம். ஆப்கானிஸ்தான் அணியிடம் மிகச் சிறந்த பௌலிங் அட்டாக் இருக்கிறது. அதனால் சவாலான சூழ்நிலையை சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்தோம். ஒருவேளை ஒருசில விஷயங்களை நாங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும். இருந்தாலும் இந்த சேஸிங் சென்ற விதம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. என்ன மாதிரியான சூழ்நிலை இருந்தாலும், யாரேனும் ஒருவர் ஆங்கர் ரோலை விளையாடவேண்டியிருந்திருக்கும். ஓப்பனர்கள் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்திருந்தார்கள். மிடில் ஓவர்களில் சில நல்ல பார்ட்னர்ஷிப்களும் அமைந்தன. அதனால் நல்லவழியாக கடைசியில் கோட்டைக் கடந்துவிட்டோம்.

van der Dusen
van der Dusenpt desk

சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயத்தை மிகவும் சிறப்பாக செய்யும்போது, மற்றொன்றை ஓரளவு சுமாராக செய்தாலும், நீங்கள் மோசமாக செயல்படுவதாக மக்கள் கூறிவிடுவார்கள். சொல்லப்போனால் நாங்கள் சேஸிங்கில் 50-50 என்று நினைக்கிறேன். நாங்கள் நிச்சயம் அந்த விஷயத்தில் முன்னேற விரும்புகிறோம். அரையிறுதிக்கு முன்னாள் இதைத் தான் நாங்கள் செய்யவேண்டும் என்று நினைத்தோம். அது நல்லபடியாகவே நடந்திருக்கிறது. கொல்கத்தா ஆடுகளத்தில் நாங்கள் ஏற்கெனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆடுகளத்தில் என்ன எதிர்பார்க்க முடியும் என்று எங்களுக்கு தெரியும். மீண்டும் அங்கு செல்லும்போது, ஆடுகளம் அதுபோலவே இருக்கும் என்று நம்புகிறேன்" - ரஸி வேன் டெர் டுசன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com