தவறான முடிவுகளை தரும் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’? - மருத்துவர்களின் அறிவுரை என்ன?

தவறான முடிவுகளை தரும் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’? - மருத்துவர்களின் அறிவுரை என்ன?
தவறான முடிவுகளை தரும் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’? - மருத்துவர்களின் அறிவுரை என்ன?

‘ரேபிட் ஆன்டிஜென்ட் டெஸ்ட்டில் ‘நெகட்டிவ்’ என வந்து, இன்னொரு பக்கம் கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அப்போது ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் செய்து அதை உறுதிப்படுத்தலாம்’ என்கின்றனர் மருத்துவர்கள். 

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு செல்லாமல், வீட்டில் சுயமாகவே பரிசோதித்துக் கொள்ளும் கொரோனா டெஸ்ட் கிட்களை வாங்கி பரிசோதிப்பது அதிகரித்துள்ளது. ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட் உள்ளிட்ட பல்வேறு கொரோனா சுய பரிசோதனை கருவிகள் மருந்துக் கடைகளிலும் ஆன்லைனிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இந்த கருவிகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதியும் உள்ளதால், மக்கள் எளிதாக வீட்டிலேயே இன்ஸ்டன்ட் கொரோனா சோதனைகளை செய்து கொள்கின்றனர். 

ரூ.250-க்கு விற்கப்படும் இந்தக் கருவிகளின் விற்பனை கடந்த 2 வாரங்களில் விற்பனை 100 முதல் 500 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை விட இதற்காகும் செலவு குறைவு என்பதாலும், வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள முடியும் என்பதாலும் பலரும் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கொரோனா டெஸ்ட் கிட்களை பயன்படுத்துவதில் விதிமுறைகள் உள்ளன. இதை வாங்குபவர்கள், தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ‘க்யூஆர்’ கோடை ஸ்கேன் செய்து அந்தக் கருவியை பதிவு செய்து கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை செய்த பிறகு அதன் முடிவை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆனால், இதை வாங்குபவர்களில் சிலர், தங்களுக்கு கொரோனா உறுதியானாலும் அதன் முடிவை பதிவேற்றம் செய்வதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உண்மையிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டறிய முடிவது இல்லை. சிலருக்கு செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்வதிலேயே சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. 

மேலும் சில சோதனை கருவிகள் தவறான முடிவை காட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. ‘பாசிட்டிவ்’ என்ற முடிவுகள் வரும்போது பிரச்சனை இல்லை. ஆனால் சிலருக்கு தவறுதலாக ‘நெகட்டிவ்’ ரிசல்ட் வருகிறது. அதாவது கொரோனா இருந்தாலும் தவறுதலாக நெகட்டிவ் என்ற ரிசல்ட் வருகிறது. இதனால் தனக்கு கொரோனா இல்லை என்று கருதி அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

சில சமயங்களில் லேசான, மிதமான பாதிப்பை கொண்டிருப்பவர்களை இதில் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. வீட்டில் டெஸ்ட் கிட்டில் நெகட்டிவ் என்று வந்து பின்னர் மருத்துவமனைக்கு சென்று சோதித்தால் பாசிட்டிவ் என முடிவு வருவதாக சிலர் கூறுகின்றனர். இந்த காலதாமதத்தால் பாதிக்கப்பட்டவர் நோயின் தீவிர நிலையை அடையும் அபாயமும் இருக்கிறது. 

இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரிசோதனை கருவிகளைக் கொண்டு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என்றும் அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில்தான் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்வது தவறு எனவும் கூறியிருந்தார். 

மேலும் இதுதொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘’தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா சிகிச்சைக்காக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’ முடிவை எங்கும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, வீட்டிலேயே பொதுமக்கள் சுயமாக பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.

தொற்று அறிகுறிகள் இருந்தால், முறையாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரேபிட் ஆன்டிஜன் டெஸ்டை அனுமதித்த மாநிலங்களில், தொற்று அறிகுறிகள் இருந்து, சுய பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என்று வந்தால், மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்தே தொற்றை உறுதிப்படுத்துகின்றனர். எனவே, மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் தமிழகத்தில் சுய பரிசோதனை கிட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர் கூறுகையில், ‘’ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்றால் நிச்சயம் உங்களுக்கு பாசிட்டிவ் ஆகத்தான் இருக்கும். அதே நேரம் ரேபிட் ஆன்டிஜென்ட் டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்து, இன்னொரு பக்கம் உங்களுக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அப்போது நீங்கள் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் செய்து அதை உறுதிப்படுத்தலாம்’’ என்கிறார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com