வரலாற்றில் கம்பீரமாக நிற்கும் ரஞ்சன்குடி கோட்டை.. இது யாரால், எப்படி கட்டப்பட்டது? சுவாரஸ்ய பின்னணி!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'ரஞ்சன்குடி கோட்டை' பல நூற்றாண்டை கடந்து பல வேதனைகளையும் சாதனைகளையும் நம்மிடம் தெரிவித்து வரும் ஒரு வரலாற்று இடம்
ரஞ்சன் கோட்டை
ரஞ்சன் கோட்டைதமிழ்நாடு டூரிசம்

தமிழக வரலாற்றில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ரஞ்சன்குடி கோட்டை கடந்து வந்த பாதை என்ன என்பதைப் பார்க்கலாம்.

இரஞ்சன்குடி அல்லது நஞ்சன் குடி என்று அழைக்கப்படும் இக் கோட்டையானது சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனின் வம்சத்தில் வந்த தூங்கானை மறவன் என்ற அரசர் கட்டியதாகவும் அதற்கு சான்றாக இக்கோட்டையின் கட்டுமானத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தூங்கானை அரசர் தான் ஆசைப்பட்ட இக்கோட்டையை கட்டிமுடிப்பதற்குள்ளாக இறந்து விடவே... அவரது சமாதியானது இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தூங்கானை அரசருக்கு பின் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் தங்களின் ராஜ்ஜியத்தில் கோயில்களை கட்டுவதில் மட்டும் ஆர்வமிக்கவராக இருந்ததால் இக்கோட்டையை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை ஆகையால் இக்கோட்டையானது முடிவு பெறாமல் பலகாலம் இருந்து வந்திருக்கிறது.

அதன் பிறகு, அந்நிய ஆட்சியாளர்கள் இந்தியாவில் கால் பதித்த பின், 1680 முகலாய மன்னரான ஆற்காடு நவாப் இக் கோட்டையை கைப்பற்றி அதை புனரமைப்பு செய்திருக்கிறார்.

எழுபது வருடங்களுக்குப் பிறகு, 1751ம் ஆண்டு உள்நாட்டு போரில் அதாவது முகமது அலிக்கும், சந்தா சாகிப்பிற்கும் நடந்த போரில், முகமது அலிக்கு ஆங்கிலேய அரசும், சந்தாசாகிப்பிற்கு ப்ரஞ்சு படைகளும் உதவி செய்துள்ளது. இப்போரானது ”வால்கண்டா போர்” என்ற பெயரில் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

கோட்டைக்குள் இருக்கும் மசூதி
கோட்டைக்குள் இருக்கும் மசூதி

இப்போரில் இறந்தவர்கள் அனைவரையும் இக்கோட்டைக்கு உள்ளேயே புதைக்கப்பட்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்போரில் இக்கோட்டையானது அதிக சேதமடைந்துள்ளது. இருப்பினும் முகமது அலி இப்போரில் வெற்றி பெற்றுள்ளார். முகமது அலிக்கு பிறகு ஆங்கிலேய அரசானது இக்கோட்டையை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இப்பொழுது இக் கோட்டையானது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கோட்டையின் அமைப்பு

இக்கோட்டை வலுவான 3 அடுக்கு அரண்களை, வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு நீள்வட்ட, அரைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள் மற்றும் பேட்டை, மேல்பகுதி, கோட்டைய மேடு கீழ் பகுதியை இணைக்கும் ஒரு பாதை உள்ளது. கோட்டையைச்சுற்றி அகழி ஒன்றும் காணப்படுகிறது.

கோட்டையின் முதல் தளத்தில் உள்ள தூணில் இந்து கடவுள்களின் சிற்பங்கள் காணப்பட்டாலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசல் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர, தற்காப்பு வழியும், சுரங்கபாதையும் உள்ளது. எதிரிகளிடமிருந்து தப்பி செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையானது ஊரின் எல்லையில் சென்றடைவதாக ஆய்வாளார்கள் கூறுகின்றனர். ஆனாலும், தொல்லியல் துறையானது இப்பாதையை பாதுகாப்பு கருதி மூடிவைத்துள்ளனர்.

இக்கோட்டையை பற்றிய கல்வெட்டு ஒன்று ”வாலிகண்டாபுரத்தில்” உள்ள வாலிஸ்வரன் ஆலயத்தில் உள்ளது என்கிறார்கள். இப்படி பலரின் படையெடுப்புக்கு ஆளான இக்கோட்டையானது இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com