1996 டு 2020... 24 ஆண்டுகால 'அரசியல்' கேள்வியை முடித்து வைத்த ரஜினி - டைம்லைன்!

1996 டு 2020... 24 ஆண்டுகால 'அரசியல்' கேள்வியை முடித்து வைத்த ரஜினி - டைம்லைன்!
1996 டு 2020... 24 ஆண்டுகால 'அரசியல்' கேள்வியை முடித்து வைத்த ரஜினி - டைம்லைன்!

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிக்கை மூலம் அரசியல் குறித்த 24 ஆண்டுகால கேள்விக்கு முடிவு கூறியுள்ளார் ரஜினிகாந்த். சிறப்பு டைம்லைன் இதோ...

தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு முதன்முதலாக குரல் கொடுத்தார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக அந்தக் குரலை அவர் பதிவு செய்தார். இதனையடுத்து திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணிக்கு ரஜினிகாந்த் தன் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார். அப்போது திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அது ரஜினியின் குரலுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

அதன்பிறகு திமுகவிற்காக சிலமுறை ரஜினியின் குரல் கொடுத்தார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதன்பின்னர், நேரடியாக அரசியல் நிலைமை குறித்து கருத்துகளைக் கூறுவதை தவிர்த்தார் ரஜினி. அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தன்னை ஒரு சக்தியாக மாற்றிக்கொண்டார் அவர் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.

அவரது பல படங்களிலும் அரசியலுக்கு வருவது குறித்த மக்களிடம் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டே வந்தார் ரஜினிகாந்த். ஆனால், ஒரு நிலையான முடிவை அறிவிப்பதில் அவருக்கு தயக்கம் நிலவியது. ஆகவே, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருந்தது.

2017 டிசம்பர் 31 அறிவிப்பு...

இந்நிலையில், ஒரு வழியாக ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை 2017 டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். "எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை. ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம். அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குவோம்" என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்தன. அப்போது, ரஜினிகாந்த் மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் எவ்வித முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடவில்லை. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “கட்சி அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்தேன். நிறைய கேள்விகள் அவர்களிடம் இருந்தது. அதற்குப் பதில் அளித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு மிகத் திருப்திகரமாக இருந்தது. ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி கிடையாது. ஏமாற்றம்தான். அதை இப்போது வெளியே சொல்ல விரும்பவில்லை. உள்ளே பேசியதை வெளியே சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்”எனத் தெரிவித்தார்.

கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை...

மீண்டும் அரசியலில் அமைதியை கடைபிடித்த ரஜினி, கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “1996-ல் இருந்து நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு முன்பு அரசியலுக்கு வருவீர்களாக என்று கேட்டால் ஆண்டவன் கையில் உள்ளது என்றுதான் சொல்லி வந்தேன். முதல்வராக வேண்டும் என்பதை நினைத்து கூட பார்த்தது இல்லை. ரஜினிகாந்த் ஒரு பாலமாக இருக்க வேண்டும். கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது எனது முடிவு. நான் அரசியல் அறிவிப்பு வெளியிடும்போதே பதவி ஆசை இல்லை என்றுதான் சொன்னேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை ரஜினி அறிவித்தார். ''தேர்தலின்போது பல பதவிகள் கொண்டு வரப்படும். அவற்றில் பல கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தப்படுவர். பின்னாளில் தேவைப்படவில்லை என்றால் பதவிகள் தூக்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் பெரும்பாலான கட்சிகளில் முதியவர்களே பதவியில் இருக்கின்றனர். அதுபோன்று இல்லாமல் 60-லிருந்து 65 சதவீதம் வரை படித்தவர்கள், இளைஞர்கள், ஏரியாவில் பேர் வாங்கியவர்களுக்கு சீட் கொடுப்பேன். ஆட்சிக்கு ஒரு தலைமை. கட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு. முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. நான் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.


அதன் பின்னர் கொரோனா காலம் என்பதால் ரஜினியின் அரசியலில் மீண்டும் அமைதி நிலவியது. பின்னர் ரஜினி பெயரில் சமூக வலைதளங்களில் போலியான அறிக்கை ஒன்று வெளியானது. அதில் ரஜினியின் உடல்நலக் குறைவு குறித்தும், தற்போதைய கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அரசியல் கட்சி தொடங்கும் முன்பே ரஜினி அதனை கைவிட திட்டமிட்டுள்ளது போன்ற கருத்து பரவியது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

'வைரல் அறிக்கை' உண்மைதான்!

“என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்தார். இதற்கு அரசியல் விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

அரசியலுக்கு வருவதற்கு ரஜினிக்கு விருப்பம் இல்லை எனவும் அதிலிருந்து நழுவுவதற்கே முற்பட்டு வருகிறார் எனவும் தெரிவித்தனர். அதற்குபின் மீண்டும் அமைதி. கொரோனா சூழல் மாறி, அரசியல் புயல் வீசத் தொடங்கியது தமிழகத்தில். அப்போதுதான் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தார். குறிப்பாக ரஜினியை அவர் சந்திப்பார் என செய்தி பரவியது. ஆனால் சந்திப்பு நிகழ்த்தவில்லை. அதேவேளையில் ஆடிட்டர் குருமூர்த்தி அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பு ரஜினி தொடர்பாகவே பேசப்பட்டதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடங்கினால் சாதக - பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

டிசம்பர் 31

இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில், “ ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதியம் நிகழும்” எனத் தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்தக்கட்டத்தை எட்டுமா? அரசியல் கட்சி தொடங்கப்பட்டால் முதல்வர் வேட்பாளர், கட்சி கூட்டணி என பயணிக்கப்போகும் பாதை என்ன? 2021 தமிழகத் தேர்தலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? என்ற பல கேள்விகளை தாங்கிக் கொண்டு டிசம்பர் இறுதியை நெருங்கிக் கொண்டு இருந்தது.

ஹைதராபாத்

இதற்கிடையே ரஜினி அண்ணாத்த படப்பிடிப்புக்கு ஹைதராபாத் சென்றார். அங்கு 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கொரோனா சோதனையில் ரஜினிக்கு நெகட்டிவ் ஆனாலும் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கட்சி அறிவிப்பு தொடர்பான தேதி நெருங்கிய நேரத்தில் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. கூறியது போலவே கட்சி தொடங்கப்படுமா? அல்லது மீண்டும் தேதி தள்ளிப்போகுமா என கேள்வி எழுந்தது.

டிசம்பர் 29 2020

இந்நிலையில் திடீரென இன்று அறிக்கை மூலம் அரசியல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாப்பூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார். இதன் மூலம் ரஜினி அரசியல் குறித்த 24 ஆண்டுகால கேள்வி முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com