மேற்கு வங்கத்தில் இதுவரை பிரசாரம் செய்யாத ராகுல், பிரியங்கா... உண்மைக் காரணம் என்ன?

மேற்கு வங்கத்தில் இதுவரை பிரசாரம் செய்யாத ராகுல், பிரியங்கா... உண்மைக் காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் இதுவரை பிரசாரம் செய்யாத ராகுல், பிரியங்கா... உண்மைக் காரணம் என்ன?

மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் கட்சிகள் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் இன்னும் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவில்லை. இதற்குப் பின்னால் பல உள்ளரசியல் இருப்பது தெரியவருகிறது.

மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை செவ்வாய்கிழமையுடன் நிறைவடைந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை அந்த மாநிலத்தில் நடந்த பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால் அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல் பரப்புரைகளில் ராகுல் காந்தி ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் ராகுல் காந்தி கேரளாவுக்கு செல்லவுள்ளார். பிரியங்கா காந்தி கேரளாவில் தனது முதல் பேரணியில் உரையாற்றியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இது தொடர்பான திட்டம் வரையறுக்கப்பட்ட பின் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்" என்று 'தி பிரின்ட்' செய்தித் தளத்திடம் கூறியிருந்தார். ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் வேண்டுமென்றே மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யவில்லை என்கின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர். மேலும், நான்காவது கட்ட தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் இவ்விருவரும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், அப்போதுதான் கேரளா மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.

மம்தாவை விமர்சிக்க விரும்பவில்லையா?

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், "இன்றுவரை மாநிலத் தலைமை, முதல்வர் மம்தா பானர்ஜியை வெளிப்படையாக விமர்சித்து வருகிறது. ஆனால், மத்திய தலைமையோ முதல்வருடன் நல்லுறவைக் கொண்டுள்ளது, இதுவரை அவரை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை, எனவே அவர்கள் முதல்வரை நேரடியாகத் தாக்க வேண்டிய சூழ்நிலையை மத்திய தலைமை தவிர்க்கிறது" என்றார்.

ராகுல் காந்தி ஏற்கெனவே மம்தாவுக்கு எதிராக இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் "பாஜக எதிர்ப்பு கூட்டணியில் ஒரு அழுத்தத்தை" உருவாக்கியுள்ளார் என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் குறிப்பிடுகிறார். ஆர்ஜேடி, சிவசேனா, எஸ்பி, என்சிபி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே மம்தா பானர்ஜியை ஆதரித்து, எதிர்க்கட்சி முகாமில் காங்கிரஸை அந்நியப்படுத்தியதும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது.

"அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பிரதமரை உருவாக்கும் அளவுக்கு கூட சக்தி பெற்றவராக மம்தா உருவெடுக்கலாம். அப்படியிருக்கும்போது காங்கிரஸால் மம்தாவை முழுவதுமாக புறந்தள்ள முடியுமா?" என்று காங்கிரஸிலிருக்கும் மூத்த ஜி-23 தலைவர் கேள்வி எழுப்புகிறார். ஜி-23 தலைவர்கள் என்போர் காங்கிரஸ் மீது அதிருப்தியுள்ள தலைவர்கள் குழுவைக் குறிக்கும்.

இவர்களுக்கிடையே, மூன்றாவதாக பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத அந்த காங்கிரஸ் தலைவரோ, "ராகுல் காந்தி கேரளாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது" என்று விவரிக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, "அசாமில் கூட எங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதனால்தான் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் அங்கு பிரசாரம் செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, எங்களுக்கான முக்கியமான கட்ட வாக்குப்பதிவு என்பது நான்காவது கட்டத்திற்குப் பிறகுதான் நடைபெறுகிறது. எனவே, இந்த நேரத்தில் அங்கு பிரசாரம் செய்வதில் அர்த்தமல்ல" என்று கூறினார்.

சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும் 'வேண்டுமென்றே மேற்கு வங்க பிரசாரத்தை புறக்கணிக்கவில்லை. ஊடகங்கள்தான் இதனை பெரிதாக்குகின்றன' என்கிறார்கள். "இது வேண்டுமென்றே அல்ல. எங்கள் தலைவர்கள், ராகுல் காந்தி ஜி, பிரியங்கா காந்தி ஜி நிச்சயமாக நான்காம் கட்டத்திற்குப் பிறகு பிரசாரம் செய்வார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஏனெனில் அவை எங்களுக்கு முக்கியமான இடங்கள். நமது தலைவர்கள் மேற்கு வங்கத்தைத் தவிர்க்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல. நாங்கள் ஒரு வழியைப் பின்பற்றி வருகிறோம். அனைத்தும் திட்டங்களின்படி செய்யப்படுகின்றன" என்று காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் வங்க காங்கிரஸ் தலைவருமான பிரதீப் பட்டாச்சார்யா கூறினார்.

மேற்கு வங்கத்துக்கான பெரும்பான்மையான நட்சத்திர பிரசாரகர்களும் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார் பட்டாச்சார்யா.

"ஜிதின் பிரசாதா, நட்சத்திர பிரசாரகர்களில் ஒருவர். அவர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். ஹரி பிரசாத் மற்றும் பி.பி. சிங்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பிரசாரம் செய்ய மாநில தலைமை அழைத்துள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்" என்று சமாதானம் தெரிவிக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், நட்சத்திர பிரசாரகருமான சல்மான் குர்ஷித் கூறுகையில், "நான் தற்போது கேரளாவில் பிரசாரம் செய்கிறேன். பின்னர் அசாமுக்குச் செல்வேன். கட்சியின் மூத்த தலைவர்களும் எனது சகாக்கள் பலரும் மற்ற மாநிலங்களுக்குச் செல்வார்கள். மேற்கு வங்கத்தை தவிரக்க மாட்டோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நான் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் ஒருநாள் இருந்தேன். மீதமுள்ள கட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்" என்கிறார் அவர்.

உண்மையில் என்ன காரணம்?

ஆனால், இவற்றையெல்லாம் விட மூத்த தலைவர் ஒருவரின் கருத்துதான் இதற்கு மேற்கு வங்க பிரசாரத்தை தவிர்க்க காரணமாக கருதப்படுகிறது. "நாங்கள் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், கேரளாவில் அதே இடதுசாரிகளுக்கு எதிராக களம் காண்கிறோம். எனவே, இதுபோன்ற கூட்டணியை எப்படி நியாயப்படுத்த முடியும்? மக்களிடம் என்ன சொல்லி சமாதானம் செய்ய முடியும்? ஆகவேதான் சொல்கிறேன்... மேற்கு வங்கத்தில் ராகுல், பிரியங்கா இருவரும் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்குள் கேரளாவில் தேர்தல்கள் முடிந்துவிடும்" என்று உண்மையை பட்டவர்த்தனமாக உடைக்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், கேரளாவில் காங்கிரஸை நம்ப முடியாது என்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி, அதே காங்கிரஸுடன் மேற்கு வங்கத்தில் பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கட்சி எவ்வாறு கூட்டணி வைத்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- தகவல் உறுதுணை: The Print

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com