நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ‘உங்கள் விருப்பம்’- வானொலியின் நினைவுகள்!

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ‘உங்கள் விருப்பம்’- வானொலியின் நினைவுகள்!

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ‘உங்கள் விருப்பம்’- வானொலியின் நினைவுகள்!
Published on

வானொலி அடுத்தடுத்த கட்டங்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில் வானொலியின் நினைவுகளை  பொன்.விமலா என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

''அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல் `மௌனம் சம்மதம்’ திரைப்படத்திலிருந்து `கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா’. இளையராஜாவின் இசையில், ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கவிருக்கும் இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள்... திருநெல்வேலி வனிதா, செய்யாறு லதா, திருத்துறைப் பூண்டி ராமசாமி, ராணிப்பேட்டை விமலா. இது சென்னை வானொலி நிலையத்தின் மண்டல ஒலிபரப்பு. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ‘உங்கள் விருப்பம்’. நேரம்.. இரவு 7 மணி 31 நிமிடங்கள்''

ரேடியோ பெட்டியில் என் பெயரைக் கேட்டதும் கொஞ்ச நேரத்துக்கு கால்களைத் தரையில் வைக்காமல் துள்ளி குதித்துக் கொண்டிருப்பேன். அது பாவாடைச் சட்டைக்காலம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நம் பெயரை உச்சரிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னதாகவே சென்னை வானொலி நிலையத்துக்கு கடிதம் எழுதிப் போட்டிருக்க வேண்டும். அப்படி கடிதம் எழுதுவதற்குக் கூட பெரிய சாமர்த்தியம் தேவை. முதலில் தபால் நிலையத்தில் இருந்து 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி வந்து வீட்டில் இருக்கும் ஆயாவிடம் கொடுத்தால் அவர் அந்த போஸ்ட் கார்டின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்.

ஆயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு தெருவில் இருக்கும் தோழிகளோடு சேர்ந்து கடிதம் எழுத ஆரம்பிப்பேன். அது ‘ கண்மணி அன்போடு காதலன்’ என்கிற குணா திரைப்படப் பாடலைப் போலவே ‘மானே தேனே.. பொன்மானே ‘ எல்லாம் போட்டுக் கொண்டு வித்தியாசமாய் உருமாறி இருக்கும். எனக்கு `இந்த’ திரைப்படத்தில் `இந்த’ பாடல் வேண்டும் என்று கேட்டால் போதும். ஆனால் அப்படி நேரடியாக கேட்டுவிட்டால் ஒலிபரப்பமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு ரேடியோவைப் பற்றி வரிவரியாய்க் கவிதை எழுதி அதன் முடிவில் அடடே ஆச்சர்யக் குறியெல்லாம் இட்டு... ’போய் வா கடிதமே வெற்றியோடு வா’ என்று வீர வசனமெல்லாம் பேசி தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டு வருவேன்.

அப்படி எழுதி அனுப்பும் ஒவ்வொரு கடிதத்துக்குப் பின்னாலும் மறக்க முடியாத நினைவுகள் உண்டு. ரேடியோக்களில் பல வகைகள் உண்டு. ப்ளைவுட்டால் செய்யப்பட்ட பெரிய ரேடியோ, ஃபைபரால் உருவாக்கப்பட்ட சிறிய வகை ரேடியோ, டிரான்ஸிஸ்டர் என இவற்றில் பலவகைகள் உண்டு. மின்சாரத்தாலும் பேட்டரிகளாலும் இயங்கக்கூடிய ரேடியோக்களுக்கு ஊருக்குள் மவுசு அதிகம். அப்போதெல்லாம் மர்ஃபி(murphy) ரேடியோக்களுக்கு தனித்த அடையாளம் இருக்கும்.

தரமான ப்ளைவுட்டால் செய்யப்பட்ட அந்த ரேடியோக்களில் இருந்து வெளியாகும் ஒலி துல்லியமாக இருக்கும். வட்டமாக இருக்கும் அந்த ரேடியோவின் ஸ்விட்சைத் திருப்பினால்,ரேடியோவில் பொருத்தியிருக்கும் அலைவரிசையைக் காட்டும் அளவீட்டுக் கருவியில் உள்ள முள்ளொன்று அங்குமிங்குமாய் நகர்ந்து நாம் விரும்பும் அலைவரிசையைத் தேர்வு செய்ய உதவும். மர்ஃபி ரேடியோக்களில் இருக்கும் குழந்தை லோகோவை ரேடியோ காலத்துக்கு மனிதர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. 

தன் சிவந்த உதடுகளுக்குப் பக்கத்தில் ஒற்றைவிரலை வைத்துக்கொண்டு கொஞ்சும் மொழியில் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தை லோகோ பொறித்த ரேடியோக்கள் இன்னமும் பலர் வீடுகளில் பொக்கிஷமாகவே இருந்து வருகின்றன. ரேடியோக்களை சைக்கிள் பார்களில் கட்டிக்கொண்டு பலமைல்கள் தூரம்கூட பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணித்த அனுபவம் நம் முன்னோர்களுக்கு உண்டு. வீடுகளில், தேநீர் கடைகளில், வயல்காட்டில்... என செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் களைப்பைப் போக்கிக் கொள்ளவும் ரேடியோ பெரிய அளவில் பயன்பட்டிருக்கிறது.

1991 ஆம் ஆண்டு. ராஜீவ்காந்தி படுகொலை நடந்த சமயம் அது. ’மனிதவெடிகுண்டு வெடித்ததில் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்’ என்கிற செய்தியை செய்தியாளர் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். என் நினைவு சரியென்றால் அந்த செய்தியாளரின் பெயர் சரோஜ் நாராயணசாமி. கனீரென ஒலிக்கும் அவர் குரலில் ஒலிபரப்பாகும் செய்திகள் அனைத்தும் அன்றைய நாள் முழுக்க மனனமாய் மனதில் நிற்கும்.

காலை 6.30 மணிக்கெல்லாம் தவறாமல் ரேடியோ பெட்டியை ஒலிக்க வைக்கும் காந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரரான அவர், அன்று அப்படியொரு செய்தியை வாசித்ததும், ஊரில் இருந்தவர்கள் ஒரே இடத்தில் கூடி நடந்த சம்பவத்தைப் பற்றி கூடுதலாய் விவாதித்துவிட்டு அதன் தொடர்ச்சி ஒலிபரப்பாகும்வரை ரேடியோ பெட்டியை வைத்துக் கொண்டு காத்துக் கிடந்ததை இப்போதும் மறக்க முடியாது.

ரேடியோவுக்குப் பல வரலாறுகள் இருக்கலாம். ரேடியோவுக்குள்ளும் இப்படியான பல வரலாறுகள் புதைந்துக் கிடக்கின்றன. ஒளியின் வழியாக ஒரு நிகழ்ச்சியை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தொலைகாட்சியில் பார்ப்பதைவிட ஒலியின் மூலமாக நம் வேலைகளைச் செய்துகொண்டே நிகழ்ச்சியைக் கேட்கும்போது நாம் பன்முக திறமையாளர்களாகிறோம்.

பள்ளிக்குப் புறப்படுவதற்காக சரியாக 6.30 மணிக்கு ரேடியோவை ஆன் செய்தால் செய்திகள், ஆன்மிகப்பகுதிகள், மனை மங்கலம், கல்விநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். சரியாக 7.40 க்கு `இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி’யை தென்கச்சி கோ.சுவாமிநாதன் வழங்கிக் கொண்டிருப்பார். அதை கேட்டுவிட்டு உடனடியாக கிளம்பினால் தான் பள்ளி செல்லவேண்டிய பேருந்தைப் பிடிக்க முடியும்.

பெரும்பாலும் வீடுகளில் சுவர் கடிகாரங்களைப் பார்த்து வேலைகளை திட்டமிடுவதில்லை. ரேடியோ நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொண்டேதான் அன்றைய காலையையும் மாலையும் திட்டமிட்டுக் கொள்வார்கள். ரேடியோக்கள் குடும்ப உறுப்பினர்கள் போல. அதிலிருந்து துல்லியமாகச் சத்தம் வெளிவரவில்லையென்றால் நடுமண்டையில் தட்டுவதைப்போலவே பலரும் ரேடியோவைத் தட்டுவார்கள். அதுவும் சிலநேரங்களில் அடிவாங்கிக்கொண்டு பாட ஆரம்பித்துவிடும். சிறுவயதுகளில் நிலாச்சோறு சாப்பிட்ட தாழ்வாரங்கள் எப்படி காணாமல் போயினவோ அதேபோலவே ரேடியோக்களும் எஃப் எம்-களாக அடுத்தத் தலைமுறையினரின் செல்போன் திரைக்குள் கனக்கச்சிதமாக நுழைந்துவிட்டன.

என்னதான் டெக்னாலஜியின் வளர்ச்சியில் நினைத்த நொடிக்குள் பாடல்களைக் கேட்கும் வசதி நமக்கு வந்துவிட்டாலும், `மூக்குத்திப் பூ மேல காத்து உட்கார்ந்து பேசுதம்மா’ என்ற பாடல் ஒலிபரப்பாகும் போது மூக்கின் நுனியில் ஒற்றைவிரலை குறும்பாய் வைத்துக் கொண்டு குண்டு மல்லிகைத் தோட்டத்தில் பூப்பறித்த வாசமிக்க நாள்களை மறந்துவிட முடியாது.

வானொலி - அது நம் வாழ்வின் ஒலி!

- பொன்.விமலா” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com