விதியை வெல்லுமா காதல்? - கலர்ஃபுல் ஜோசியம் சொல்லும் #RadheShyam

விதியை வெல்லுமா காதல்? - கலர்ஃபுல் ஜோசியம் சொல்லும் #RadheShyam
விதியை வெல்லுமா காதல்? - கலர்ஃபுல் ஜோசியம் சொல்லும் #RadheShyam

விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பார்கள். அதுபோல ராதே ஷ்யாமில் விதியை காதல் வெல்லுமா? என முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். 1970களில் இத்தாலியில் நடக்கிறது கதை. கைரேகை மூலம் ஜோதிடம் சொல்லும் கதாபாத்திரத்தில் விக்ரமாதித்யாவாக வருகிறார் பிரபாஸ். அவருடைய கணிப்புகள் எதுவும் அதுவரை பொய்யானதே இல்லை. ஒரு மார்டன் ஜோதிடராக கதையின் நாயகனை வடிவமைத்திருப்பது இதுவே முதல் முறை எனலாம். அவர் கூறும் ஜோதிடம் குறித்து கதையின் பயணத்தில் வரும் பலருக்கும் வெவ்வேறு அபிப்ராயங்கள் இருக்கின்றன. அவர் தன்னுடைய எதிர்காலம் குறித்தும் கணித்து அதனை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அந்த டைரியில் நாயகனின் எதிர்காலம் குறித்த ரகசியக் குறிப்பொன்றும் உள்ளது. இதற்கிடையில் பூஜா ஹெட்டேவுடனான காதல் மலர பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் கலர்புல்லாக காதலிக்கத் துவங்குகிறார்கள். தனது காதல் குறித்த ஜோதிட நாயகனின் கணிப்பும், அவரது எதிர்காலம் குறித்த ரகசியமும் இறுதியில் என்னவானது என்பதே திரைக்கதை.

கதையாகப் பார்த்தால் ‘என்னபாஸ் இதெல்லாம் ஒரு கதையா’ என நினைக்கத்தோன்றும். ஆனால் இந்தக் கதையை விஷ்வலாக அதிலும் மிகப் பிரம்மாண்டமாக வழங்கியதில் தனித்துவம் பெறுகிறது ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸும், பூஜாவும் இருவேறு பேருந்துகளுக்குள் இருந்து பேசிக் கொள்ளும் காட்சி புதுமை., ரசிக்கும் படியாகவும் உள்ளது. அது போல ரயிலில் பயணிக்கும் பூஜா ஹெக்டே ‘என் பாரத்த தாங்குவியா’ எனக் கேட்கும் காட்சியும் அசல் தெலுங்கு சினிமா ஐடியா. ரசிக்கும்படி அமைந்துள்ளது.

ஒளிப்பதிவைப் பொறுத்தவரை மனோஜ் பரமஹம்சா அட்டகாசமான அவுட் புட் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு ப்ரேமையும் ரசித்து ரசித்து லைட் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் கிராபிக்ஸ் குழுவும் இணைந்து மிகச் சரியாக பயணித்தால் மட்டுமே இந்த அவுட்புட் சாத்தியம். அவ்வகையில் கமலக் கண்ணனுக்கும் அவரது விஷ்வல் எபக்ட்ஸ் குழுவிற்கும் சிறப்பு பாராட்டுகள். காதல் சினிமாக்களுக்கு கூடுதல் பலமே இசைதான் ஜஸ்டின் பிரபாகரன் இன்னுமே சிறப்பாக இசைத்திருக்கலாம். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. தமனின் பின்னனி இசை கொஞ்சம் ஆறுதல் தருகிறது.

சத்யராஜ், ஜெயராம் ஆகியோரின் கதாபாத்திரங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த உலகத்தில் எதிர்காலம் குறித்த கணிப்புகளை நம்பாமல் தன்னுடைய தலை எழுத்தை தானே எழுதிக்கொள்ளும் ஒரு சதவிகிதம் பேர்தான் உலகை இயக்குகின்றனர். என்ற வசனம் அருமை. மதன் கார்க்கி பல இடங்களில் சூப்பர் சொல்ல வைக்கிறார்.

என்னதான் தொழில்நுட்பம் பெரிய நடிகர்களின் பட்டியல் மெகா பட்ஜட் என எல்லாம் இருந்தாலும் கதை திரைக்கதை அழுத்தமாக இல்லாவிட்டால் அது பின்னடைவே. இது ராதே ஷ்யாமுக்கும் நடந்திருக்கிறது. முதல் பாதிகூட கொஞ்சம் சமாளித்து நகர்த்திவிடலாம். ஆனால் இரண்டாம் பாதியின் முதல் 60 சதவிகித காட்சிகள் ரொம்பவே சுமார். க்ளைமேக்ஸில் பிரம்மாண்ட கப்பல் காட்சி முந்தைய குறைகளை போக்கி நிறைவாக நம்மை அனுப்பி வைக்கிறது. அதுபோல க்ளைமேக்ஸ் காட்சிவரை கதையின் முடிவு எப்படி அமையும் என்பதை நம்மாள் கணிக்க முடியவில்லை என்பதும் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.

ராதே ஷ்யாம் சுமாரான திரைக்கதையால் தடுமாறிய பிரம்மாண்ட காதல் கதை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com