ஆஸ்கர் பரிந்துரையில் முதல் பெண் ஒளிப்பதிவாளர்!
மார்ச் 4-ம் தேதி நடக்கிறது, இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா. விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஹாலிவுட்டில். அந்தப் பட்டியலில் கவனம் ஈர்த்திருக்கிறார் ராச்சல் மோரிசன் (Rachel morrison). ஏனென்றால், ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக பரிந்துரைக்கு வந்திருக்கும் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான். டீ ரீஸ் இயக்கிய ‘மட்பவுண்ட்’ (mudbound) படத்துக்காகத்தான் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் இவர்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கும் கதையைக் கொண்ட இந்தப் படம், சிறந்த ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்ட ஒன்று.
‘பெண்கள் தகுதியானவர்கள். அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும். எனது கனவு நனவாகி இருக்கிறது. ஒளிப்பதிவுக்காக அல்ல. எதுவும் நடக்கும் என்ற என் நம்பிக்கைக்கான பரிந்துரை இது. என்னை பெண் ஒளிப்பதிவாளர் என்று குறிப்பிடுவதை விரும்பவில்லை. ஒளிப்பதிவாளர், அவ்வளவுதான். ஹாலிவுட்டில் குறைந்த அளவு பெண்களே ஒளிப்பதிவு துறையில் இருப்பதால் அதிகமான பெண்கள், பரிந்துரை பட்டியலில் இல்லை. இனி அதிகம் வருவார்கள் என்று நினைக்கிறேன்’ என்கிற ராச்சலின் ஒளிப்பதிவை, புரூட்வேல் ஸ்டேஷன், கேக், டோப், சவுண்ட் ஆப்ந் மை வாய்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்க முடியும். அடுத்து வர இருக்கிறது ’பிளாக் பாந்தர்’. அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சொசைட்டியின் விருதை இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெற்றிருக்கிற ராச்சல், ஓரின சேர்க்கையாளர் என்பது கூடுதல் தகவல்!
இந்த வருடம் இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ’இந்த வருட அகாடமி விருதுகள், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது’ என்று தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார்.
’ராச்சல் முதல் முறையாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிற பெண் ஒளிப்பதிவாளர் என்றாலும் ஹாலிவுட்டின் ஒளிப்பதிவு ஜாம்பவான் என்று கூறப்படும் ரோஜர் ஏ.டீக்கின்ஸும் இந்த வருட போட்டியில் இருக்கிறார். ’பிளேட் ரன்னர் 2049’ (Blade runner 2049) என்ற படத்துக்காக ஆஸ்கர் பரிந்துரையில் இருக்கும் ரோஜர், வாங்காத விருதில்லை. பெறாத பாராட்டில்லை. ஆனால், ஆஸ்கர் மட்டும் அவரிடமிருந்து தப்பிக்கொண்டே இருக்கிறது. பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் அவர் விருதை கைப்பற்றவில்லை என்பதால் இந்த வருடம் அவருக்கும் கிடைக்கலாம்’ என்கிறார் அவர்.
’டார்க்கஸ்ட் ஹவர்’ படத்துக்காக புரூனோ டெல்போனல், கிறிஸ்டோபர் நோலனின் ’டன்கிர்க்’ படத்துக்காக ஹோய்டேமா, ’தி ஷேப் ஆஃப் வாட்டர்’ படத்துக்காக டான் லாஸ்டன் ஆகியோரும் பரிந்துரையில் இருக்கிறார்கள். இந்தப் படங்களின் ஒளிப்பதிவும் சிறப்பானது என்பதால் கவனிக்கப்பட வேண்டிய விருதாக இருக்கும் என்கிறது ஹாலிவுட்!