"ஜோக்கர்கள்தான் அநீதிக்கு எதிராகப் போர் செய்து கொண்டே இருக்கின்றனர்"

"ஜோக்கர்கள்தான் அநீதிக்கு எதிராகப் போர் செய்து கொண்டே இருக்கின்றனர்"
"ஜோக்கர்கள்தான் அநீதிக்கு எதிராகப் போர் செய்து கொண்டே இருக்கின்றனர்"
Published on

இப்படிச் சொன்னவர் ஜோக்கர் படத்தின் கதையை எழுதிய ராஜூமுருகன். குக்கூ மூலம் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். தற்போது தமிழ் இயக்குநர்களில், தனக்கென்று ஒரு களத்தை அமைத்து, அதில் சமூக சிந்தனையை விதைத்து வரும் ராஜூமுருகன் புதிய தலைமுறை வழங்கிய கலைப்பிரிவுக்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதைப் பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அபிவிருத்தீஸ்வர கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜூ முருகன். இவரின் தந்தை கால்நடை மருத்துவர். சமூக அக்கறைகொண்ட ராஜூ முருகன் பத்திரிகையாளராய் தனது பயணத்தைத் தொடங்கினார். ராஜூமுருகன் தன் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களைத் தொகுத்து எழுதிய வட்டியும் முதலும் என்ற நூல் வெகு பிரபலம்.

இயக்குநர் லிங்குசாமியிடம் பீமா, பையா போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய அவர் அதன் மூலம் சினிமாவை திறம்பட கையாளத் தெரிந்துகொண்டார். பின்னர் பார்வையற்ற இருவருக்கு இடையே ஏற்படும் அழகிய காதலைச் சொன்ன குக்கூ படத்தை இயக்கினார்.

”சமூகத்திற்காக தன்னால் முடிந்த சிறு சிறு முன்னகர்வை செய்யும் ஆணையோ பெண்ணையோ நான் மிகவும் நேசிக்கிறேன். செயல்பாட்டையும், செயல்பாட்டாளர்களையும் நேசிக்கிறேன். சமூகம் தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டே இருப்பதற்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் சிலருக்கு தொந்தரவாகவும், ஜோக்கர்களாகவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த ஜோக்கர்கள்தான் அநீதிக்கு எதிராகப் போர் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறுபவர் ராஜுமுருகன்.

அப்படிப் போர் செய்த கதாபாத்திரத்தைத்தான் அவர் ஜோக்கர் திரைப்படத்தில் படைத்தார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைக் களமாகக் கொண்ட இந்தக் கதையை எழுதுவதற்காக அங்குசென்று தங்கியிருந்து இந்தக் கதையை எழுதினார் ராஜூமுருகன். அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த கௌரவமாக 64-வது தேசிய திரைப்பட விருதில் ஜோக்கர் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com