சேவையை வாழ்வாக கொண்டு, மனிதம் போற்றும் மகத்தான பணிகளில் ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் பிரபா கல்விமணி. இவருக்கு புதிய தலைமுறை, சமூக சேவைப் பிரிவில் தமிழன் விருதை வழங்கியுள்ளது.
கல்விமணி திண்டிவனத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற பேராசிரியர். மனித உரிமை செயற்பாட்டாளர். தற்போது தமிழ் வழிப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் சமுதாய குழந்தைகளுக்கு கல்வி அளித்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். இருளர் சமூகத்து மக்களால் நடத்தப்படும் இந்தப் பள்ளி வெளிப்படைத்தன்மையும், ஜனநாயகமும் நிறைந்து காணப்படுகிறது. பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுப்பதுடன் அவர்களது உரிமை காக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார். ஒரு கல்வியாளராக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும், அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய வழிகள் குறித்தும் பல கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் பேராசிரியர் கல்விமணி.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு பொது வழக்குகளில் பங்கேற்றவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கிராமத்தில் 4 இருளர் இனப் பெண்கள் போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்து சென்றவர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 4 இருளர் பெண்கள் போலீசாரால் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்திற்கு நீதி விசாரணை நடத்தப்பட்டது. 1989, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி, வழக்குகள் பதியப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் மற்றும் இரு காவலர்கள் ஆகியோரை இடைநீக்கம் செய்ய காரணமாய் இருந்தவர் கல்விமணி. 2000-ஆம் ஆண்டு வீரப்பன் பிடியிலிருந்த கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரை மீட்க அமைக்கப்பட்ட மீட்பு குழுவில் ஒருவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர்.
கல்வி மேம்பாடு, இருளர் இனமக்களின் நலம், மேம்பாடு சார்ந்து இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார் பேராசிரியர் கல்விமணி.