அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என தமிழ் சினிமா உலகில் பின்னணிப் பாடகராக அடி எடுத்து வைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏறத்தாழ 40 வருடங்களாக 38,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். அதிலும் 30 வருடங்கள் அனைத்துப் படங்களிலும் அனைத்துப் பாடல்களிலும் அவரே என்னும் அளவுக்கு கோலோச்சி முடிசூடா மன்னாகத் திகழ்ந்தவர் அவர் . தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிப் பாடகராகத் திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு புதிய தலைமுறை கலைத்துறைப் பிரிவிற்கான தமிழன் விருதை வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் கொனெட்டம்மப்பேட்டாவில் பிறந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் இசைத்துறைக்கு வந்ததற்குக் காரணம் அவருக்கு வந்த டைபாய்டு காய்ச்சல்தான். தனது தந்தையின் விருப்பத்திற்கிணங்க பொறியியல் படிப்பில் சேர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், டைபாய்டு காய்ச்சலால்தான் படிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்து, இசைக் கனவை நோக்கி பயணித்தார். 1964-இல், சென்னையை சார்ந்த தெலுங்கு பண்பாட்டு அமைப்பில், இசை வாழ்வைத் துவங்கினார். பின் இசையமைப்பாளர் எஸ்.பி கோதண்டபாணி பாலசுப்பிரமணியத்தை தனது குழுவில் சேர்த்துக்கொண்டார். அதன்பிறகுதான் அவர் ஆயிரம் நிலவே வா என பின்னணிப்பாடகரானது.
பாலசுப்பிரமணியத்தின் இசைப் பயணத்தில் பல்வேறு சாதனைகள் உண்டு. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்காத எஸ்.பி.பாலசுப்ரமணியம், ’சங்கராபரணம்’ திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலைப் பாடி தேசிய விருதைப் பெற்றார்.
1981-ஆம் ஆண்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி, காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை, 21 பாடல்களை கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமார் இசையில் வெற்றிகரமாக பாடி முடித்தவர்.
ஒரு நாளில் 19 தமிழ் பாடல்களையும், ஒரு நாளில் 16 ஹிந்திப் பாடல்களையும் வெற்றிகரமாகப் பாடி முடித்து சாதனை படைத்தவர். இந்தியாவில், காண்ட் மொழியில் (மத்தியப் பிரதேச பழங்குடியின மொழி) பாடிய ஒரே பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். அவர் பாடகர் மட்டுமல்ல. சிறந்த பின்னணிக் குரல் நிபுணரும் கூட. ரஜினிகாந்த், கமலஹாசன், சல்மான்கான், பாக்யராஜ், மோஹன், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேஷ், நாகேஷ், கார்த்திக், ரகுவரன், வினோத்குமார், ஆனந்த்பாபு ஆகிய நடிகர்களுக்கு பல படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.
2001-ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருதையும், 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதையும் வழங்கி பாலசுப்ரமணியத்தைச் சிறப்பித்துள்ளது மத்திய அரசு.