விண்வெளி அறிவியல் மீது தீராத வேட்கையாலும், கடின உழைப்பாலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராய் உயர்ந்திருக்கும் கே.சிவன் புதிய தலைமுறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் தமிழன் விருதைப் பெற்றுள்ளார்.
நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் கே.சிவன். குடும்பத்தின் முதல் தலைமுறையாய் கல்வியின் வாசம் முகர்ந்தவர். கணினி அறிவியலில் இளங்கலை படித்தபிறகு, விண்ணில் செல்லும் கனவை மனதில் விதைத்து, 1980-ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிகல் பொறியியலில் முத்திரை பதித்தார். 1982-ல் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் பட்டமும், 2006-இல் மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து விண்வெளிக் கனவுப் பயணத்தை தொடங்கினார். அயராத உழைப்பால் தற்போது இந்திய விண்வெளித் துறையில் தவிர்க்க முடியாத தூணாய் உயர்ந்திருக்கிறார். 33 ஆண்டுகளாக இந்தியா சார்பில் விண்ணிற்கு சென்ற ஏவுகணைகள் அனைத்திலும், இவர் முத்திரைப் பதித்து வருவது தமிழர்களான நமக்குக் கிடைத்த பெருமை.
இஸ்ரோவின் குழு இயக்குநர், எம்.எஸ்.எஸ்.ஜி, திட்ட இயக்குநர், ஏரோநாடிக்ஸ் என்டைட்டி, ஜி.எஸ்.எல்.வி கட்டுப்பாட்டாளர், என ஏராளமான பதவிகளை வகித்து வருகிறார் கே.சிவன்.
சந்திராயன், மங்கள்யான் ஆகிய இந்திய சரித்திர ஏவுகணையின் வெற்றிகளில் கே. சிவனின் அற்பணிப்பு அபரிமிதமானது. ஏவுகணை அமைப்பு தொடர்பாக ”சித்தாரா” என்னும் மென்பொருளையும் இவர் உருவாக்கியுள்ளார். அதிநவீன மார்க் 3 ஏவுகணை ஆய்வுப் பணியிலும் இவரின் பங்களிப்பு பிரம்மிக்க வைக்கிறது. இவரின் சாதனைகளைப் பாராட்டி ஸ்ரீஹரி ஓம் ஆஷ்ரம் ப்ரெரிட் டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மெரிட் விருது, டாக்டர் பிரன்ராய் விண்வெளி அறிவியல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். எம்.ஐ.டி அலும்னஸ் கழகம் வழங்கும் மதிப்புமிகு அலும்னஸ் விருது, சத்தியபாமா பல்கலைக்கழக அறிவியல் முனைவர் விருது என்று பல விருதுகளைப் பெற்ற சரித்திர நாயகன் திரு.கே.சிவன்.