’புஷ்பா’ திரை விமர்சனம் : பார்த்துச் சலித்த அதே மசாலாப் படம்!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் புஷ்பா திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்த சினிமாவை இயக்கி இருக்கிறார் சுகுமார்.
செம்மரக் கடத்தலை மையமாக வைத்து ஒரு கமர்ஷியல் சினிமாவை உருவாக்கியிருக்கிறார்கள். சித்தூர் பகுதி, சேஷாசலம் வனப் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது. மரம் வெட்டும் சாதாரணக் கூலியாக அறிமுகமாகும் புஷ்பா (அல்லு அர்ஜூன்) எப்படி செம்மரக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் மன்னனாக விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதே புஷ்பாவின் திரைக்கதை.
ஒன்லைனாகப் பார்த்தால் பெரிய மாஸ் கதையாக இது தோன்றலாம். ஆனால் கதைக்கான கச்சாப் பொருள் சரியாக இருந்தால் போதுமா? அதேபோல அதன் உருவாக்கமும் இருந்தால்தானே படம் எதிர்பார்த்த தாக்கத்தை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அந்த வகையில் புஷ்பாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு புஸ்வானம் கிடைத்ததே சோகம்.
அல்லு அர்ஜூனின் பிறப்பு குறித்த ப்ளாஷ்பேக் காட்சி சலிப்பூட்டுகிறது. ஹீரோவின் இந்த பின்னணிக் கதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை அனைத்து மொழி சினிமாவிலும் பார்த்துச் சலித்த ஒன்றுதான். ராஷ்மிகாவிற்கும் அல்லு அர்ஜூனுக்கும் இடையில் காதலை உருவாக்க இயக்குநர் வைத்திருக்கும் காட்சிகள் அபத்தம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நாயகி சிரிப்பார் என்பதும் 5000 ரூபாய் கொடுத்தால் நாயகி முத்தம் கொடுப்பார் என்பது என்ன மாதிரியான ஐடியா என்று தெரியவில்லை.
படத்தின் இன்னொரு ஹீரோ என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ ப்ரசாத்தை சொல்லலாம். ஓ சொல்றியா மாமா, சாமி பாடல்களுக்கு தியேட்டரில் ரசிகர்கள் எழுந்து குத்தாட்டம் போடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் மிரோஸ்லா குபா ப்ரோசெக் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பசுமையான வனத்தை மிகச் சரியாக நமக்கு காட்சிப் படுத்தியிருக்கிறார். அணைக்கட்டில் செம்மரக் கட்டைகள் வந்துசேரும் காட்சி கொஞ்சம் ஓவர் கற்பனைதான் என்றாலும் விஷுவலாக அருமையான ட்ரீட். இந்த சினிமா பல இடங்களில் அப்ளாஸ் அள்ள ஒளிப்பதிவாளரும் கிராபிக்ஸ் குழுவும் முக்கியக் காரணங்கள். செம்மரக் கட்டைகள் மேலே அல்லு அர்ஜூன் ஏறி ஓடும் காட்சி உள்ளிட்ட காட்சிகளில் ஸ்டண்ட் குழு நன்றாகவே வேலை செய்திருக்கிறார்கள். கே.ஜி.எப் படத்தின் தாக்கம் வேறு இந்த சினிமாவில் நிறைய உள்ளது.
சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஓ சொல்லிவிட்டுப் போகிறார். படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாஸில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது. அவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை இரண்டாம் பாகம் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அல்லு அர்ஜூனின் நடிப்பு புதுமையான உடல்மொழி என எல்லாமே ரசிக்க வைக்கிறது. பெரிய நடிகர்கள், நல்ல தொழில்நுட்பக்குழு என எல்லாம் இருந்தும் இந்த சினிமா எதிர்பார்த்த வெற்றியினை பெறாமல் போனதற்கு இப்படத்தின் கதையில் அடர்த்தி இல்லை என்பதே காரணம். சினிமா என்பது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நல்ல கதை சொல்லும் கலை. கதை இல்லாமல் நல்ல தொழில்நுட்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது.
புஷ்பா நண்பர்களுடன் சென்று ஜாலியா நேரம் கழிக்க ஏதுவான ஒரு பொழுதுபோக்கு சினிமா. சுமாரான மசாலா படம். ஒருமுறை பார்க்கலாம்.