உரிமைக்காக போராடிய புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் நினைவு நாள் இன்று

உரிமைக்காக போராடிய புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் நினைவு நாள் இன்று
உரிமைக்காக போராடிய புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் நினைவு நாள் இன்று

உரிமைக்காக போராடிய புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் நினைவு நாள் இன்று 

ஆசிய கண்டத்திலேயே முதன்முதலாக எட்டு மணி நேர வேலை உரிமையை பெற்ற புதுச்சேரி தொழிலாளர்கள் 

ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் வரலாறு பெரும்பாலும் வலிகள் நிறைந்ததாகவே இருக்கும். இந்திய சுதந்திர போராட்டம் துவங்கி அறவழியில் அரங்கேறிய பல்வேறு போராட்டங்களே அதற்கு சான்று. புதுச்சேரியில் இயங்கி வந்த பஞ்சாலைகளில் நேரம் காலம் பார்க்காமல் பணி செய்த தொழிலாளர்கள் பிரெஞ்சு முதலாளிகளையும், அரசையும் எதிர்த்து ஓராணியாக திரண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடியுள்ளனர். 

உரிமை கேட்டு போராடிய தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய அந்த போராட்டமே பிரெஞ்சு காலணியாக இருந்த புதுச்சேரியின் விடுதலை போராட்டத்திற்கும் வித்திட்டுள்ளது. அந்த போராட்டத்தில் என்ன நடந்தது?

இது குறித்து விவரிக்கிறார் புதுச்சேரியை சேர்ந்த தமிழ் பேராசிரியர் -  முனைவர் நா.இளங்கோ...

பிரெஞ்சிந்தியாவில் தொழிலாளர்கள்

“அன்றைய  காலகட்டத்தில் புதுச்சேரியில் பிரெஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன. சவானா மில் (இன்றைய சுதேசி மில்), ரோடியர் மில் (இன்றைய AFT) மற்றும் கப்ளே மில் (இன்றைய பாரதி மில்). இந்த மூன்று ஆலைகளிலும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிபுரிந்து வந்தனர். அதை நம்பியே அப்போது புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரமும் இருந்துள்ளது. 

ஓய்வுக்கு எட்டுமணி நேரம், உறங்குவதற்கு எட்டுமணி நேரம், உழைப்பதற்கு எட்டுமணி நேரம் என்ற மேதினக் கோரிக்கை, புதுவைத் தொழிலாளர்களின் விஷயத்தில் தவிடுபொடியாகி கொண்டிருந்தது. தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு மணிநேரம் கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. அப்படி  வேலை  செய்தும் தொழிலாளர்களுக்கு ஒருவேளை உணவிற்கும் எட்டாத ஊதியம் தரப்பட்டது.

எத்தனைக் காலம் தொழிலாளி வர்க்கம் இந்தச் சூழலில் அடிமை வாழ்க்கையை, அதன் துயரங்களைத் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? 1934ஆம் ஆண்டிலிருந்து புதுவையின் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் தங்கள் வாழ்க்கையின் அவலங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். புதுச்சேரியில் அரிஜனசேவா சங்கம் அமைத்து அரிஜன மக்களின் நலனுகாக பணியாற்றி வந்த தோழர் வ.சுப்பையா பஞ்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் நலனுக்காக களம் இறங்கினார். 

தொழிலாளர்களை அணி திரட்டி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போராட முனைந்தார். அதன் விளைவாக 1935இன் துவக்கத்தில் சவானா மில் தொழிலாளர்கள் அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். கிட்டத்தட்ட 84 நாட்கள் நீடித்த தொடர் போராட்டத்திற்கு பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்த விழிப்புணவை கண்ட மற்ற இரண்டு பஞ்சாலைகளின் உரிமையாளர்கள் சம்பள உயர்வை அறிவித்தது. அதன் மூலம் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் 1935இல் மூன்று பஞ்சாலை தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட்டது. அதற்கு பிரெஞ்சு அரசாங்கம் தடை போட்டதால் தமிழக எல்லையான பெரம்பையில் அந்த மாநாடு நடந்தது. எட்டு மணி நேர வேலை உட்பட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளே அதில் தீர்மானமாக போடப்பட்டிருந்தன. 

அதற்கடுத்து மீண்டும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் ஜூலை 24, 1936இல் பஞ்சாலை தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் மில்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கினர். அதை தடுக்க பிரெஞ்சு அரசாங்கம் இராணுவத்தை களம் இறக்கியது. கடலூர் சாலையில் படையெடுத்த பீரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கியோடு வந்த பிரெஞ்சு இராணுவ வீரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். நிமிடத்திற்கு நூறு தோட்டாக்களை கக்கிய அந்த இயந்திர துப்பாக்கிகளின் தோட்டாவிற்கு அமலோற்பவ நாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள் , வீராசாமி, ஏழுமலை, மதுரை, குப்புசாமி, ராஜகோபால் என பன்னிரண்டு தொழிலாளர்கள் இரையாகினர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயம்பட்டனர். உலகில் நடைபெற்ற கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று. 

உலகெங்கும் புதுச்சேரி தொழிலாளர்கள் படுகொலை சம்பவம் பிரெஞ்சு அரசுக்கு பெருத்த இழுக்கை ஏற்படுத்தியதை  தொடர்ந்து ஏப்ரல் 6, 1937இல் பிரெஞ்சிந்திய தொழிலாளர் சட்டம் அமலாக்கப்ட்டது. இந்த சட்டத்தின் விளைவாக ஆசிய கண்டத்திலேயே முதன்முதலாக எட்டு மணி நேர வேலை உரிமை புதுச்சேரி தொழிலாளர்கள் பெற்றனர். அதோடு தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. கால ஓட்டத்தில் பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து புதுச்சேரியின் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியதும் இந்த தொழிலாளர்களின் போராட்டம் தான்” என்கிறார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com