நவீன தீண்டாமையா..?..கிரண் பேடியின் உத்தரவு

நவீன தீண்டாமையா..?..கிரண் பேடியின் உத்தரவு

நவீன தீண்டாமையா..?..கிரண் பேடியின் உத்தரவு
Published on

சுத்தமாக வைத்திருக்கும் கிராமங்களுக்குத்தான் மாதாந்திர இலவச அரிசி என்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவு புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி மக்களை மட்டும் அல்லாமல் ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மாநிலத்தின் மிகப்பெரிய அதிகாரப் பதவியில் இருக்கும் கிரெண் பேடியால் எப்படி இப்படியொரு பொறுப்பற்ற உத்தரவை பிறப்பிக்க முடிகிறது என பலரும் விமர்சித்துள்ளனர்.

புதுச்சேரியின் மண்ணடிப்பட்டு சட்டமன்‌ற தொகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி, ஆய்வுக்கு பின்னர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “நான் கிராமங்களை ஆய்வு செய்ததில், பல கிராமப்புறங்கள் சுத்தமாக இல்லை. பல இடங்களில் குப்பை போடுகிறார்கள். திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். ஆகையால், சுத்தமாக இருக்கும் கிராமங்களுக்கு மட்டுமே இலவசர அரிசி வழங்கப்படும். சம்பந்தப்பட்ட எம்எல்ஏ கிராமம் சுத்தமாக இருக்கிறதென்று சான்றிதழ் வழங்க வேண்டும். அவ்வாறு சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால் மட்டுமே அப்பகுதி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். சான்றிதழ் பெறாத கிராமங்களுக்கு ஜூன் 1ம் தேதிமுதல் இலவச அரிசி நிறுத்தப்படும். தூய்மை சான்றிதழ் பெறும் வரை அரிசி சேமிக்கப்பட்டு பின்னர் மொத்தமாக வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

கிரண்பேடியின் இந்த கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு கிராமத்தினை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும், இலவச அரசி திட்டத்திற்கும் என்ன சம்மந்தம் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இலவச அரிசி திட்டம் என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டம். அப்படி இருக்கையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி இப்படியொரு உத்தரவை கிரண்பேடியால் எப்படி பிறப்பிக்க முடியும் என்று பலர் விமர்சித்துள்ளனர். #SwachhBharatMission அல்லது #HungryMission இரண்டில் எது முக்கியம் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் இல்லை என்று உறுதி செய்யப்படும் வரை கிரண்பேடியும், ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் சம்பளம் வாங்காமல் இருக்க முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

கிரண்பேடியின் கருத்து நவீன தீண்டாமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. கிரண்பேடியின் உத்தரவு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “நீ இன்ன சாதியில் பிறந்ததால் சட்டை, செருப்பு அணியக் கூடாது. நீ காலனியில் இருப்பதால் ஊருக்குள் நுழையக் கூடாது. நீ கருப்பாய் இருப்பதால் இந்த நிகழ்வுக்கு வரக் கூடாது போன்ற தன் அப்பட்டமான ஆதிக்க வரலாற்றுத் தொடர்ச்சிதான் ‘உங்கள் கிராமம் சுத்தமாக இல்லையென்றால் அரசின் இலவச அரிசி கிடையாது’ என்னும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் அறிவிப்பு !” என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல், கிரெண் பேடியின் உத்தரவு சர்வாதிகார தொணியில் உள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர்.

மேலும் கிரண்பேடியின் உத்தரவால் மக்கள் பட்டினியில் வாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஏனெனில் வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் இலவச அரிசியைத் தான் நம்பி இருக்கின்றனர். எம்.எல்.ஏ சான்றிதழ் அளித்தால்தான் அரிசி வழங்கப்படும் என்றால் அது லஞ்சத்திற்கு வழிவகுக்க வாய்ப்பு ஏற்படாதா?. ஒரு கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது கிராம மக்கள் கைகளில் மட்டும் இல்லை. அதிகாரிகள் கைகளிலும் தான் உள்ளது. கிராம மக்களுக்கு தண்டனை அளிக்கும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு எந்த வகையான தண்டனை அளிக்க முடியும்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி விமர்சனங்களில் சிக்குவது கிரண்பேடிக்கு இது புதிதல்ல. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரான பதவியேற்ற சில மாதங்களிலே கிரண் பேடி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குற்றப் பரம்பரையினர் கொடூரமானவர்கள், தொழில்முறைக் குற்றவாளிகள் அவர்கள். அரிதாகத்தான் அவர்கள் கைது செய்யப்பட்டும், தண்டனை அளிக்கப்பட்டும் உள்ளது’ என்று கிரெண்பேடி தெரிவித்து இருந்தார்.

கிரண்பேடியின் கருத்து பிறப்பின் ரீதியில் மக்களை கீழ்மைப்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும், ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் பொறுப்புள்ளவர் இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com