PTExclusive 'நமது அம்மா அதிமுகவின் நாளிதழே இல்லை' - OPS ஆதரவு மருது அழகுராஜ் கூறியது என்ன?

PTExclusive 'நமது அம்மா அதிமுகவின் நாளிதழே இல்லை' - OPS ஆதரவு மருது அழகுராஜ் கூறியது என்ன?
PTExclusive 'நமது அம்மா அதிமுகவின் நாளிதழே இல்லை' - OPS ஆதரவு மருது அழகுராஜ் கூறியது என்ன?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுகவின் ஒற்றை தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்ற சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் அண்மை நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றமும் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் நமது அம்மா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான மருது அழகுராஜிடம் புதிய தலைமுறை சிறப்பு நேர்காணல் நடத்தியிருந்தது.

அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது மருது அழகுராஜ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார். அதில் குறிப்பாக எப்பொழுதெல்லாம் அதிமுக பிளவை சந்திக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அரசியலிலும், தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கிறது எனக் கூறியிருக்கிறார் மருது அழகுராஜ்.

அவர் அளித்த நேர்காணலின் விவரங்களை பார்க்கலாம்:

கேள்வி: எடப்பாடி பழனிசாமி மீதான திடீர் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் என்ன?

பதில்: என்னுடைய கோபங்கள், வருத்தங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு அங்கிருந்தபடியே உள் யுத்தம் செய்வது நன்றாக இருக்காது என்பதாலேயே நமது அம்மா நாளிதழிலிருந்து வெளியே வந்த பிறகுதான் என்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தினேன்.

இந்த ஒற்றை தலைமை பிரச்னை இப்போது தொடங்கியது இல்லை. தேர்தல் முடிந்த பிறகே இந்த ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கிவிட்டது. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருமே நடத்த வேண்டும்.

நமது அம்மா நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்று சொல்லப்பட்டாலும், அதன் உரிமையாளர் எஸ்.பி. வேலுமணியின் உறவினரும், பினாமியான சந்திரசேகர்தான். இது அதிமுவின் தலைமைக்கான பத்திரிகை அல்ல.

கேள்வி: நமது அம்மா நாளிதழை போன்று நமது எம்.ஜி.ஆரும் அதிமுகவின் நாளேடு இல்லையா?

பதில்: நமது எம்.ஜி.ஆர் ஒரு அறக்கட்டளை. நிர்வாகம் யாராக இருந்தாலும் அதன் நிறுவனர் ஜெ.ஜெயலலிதான் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் நமது அம்மா அப்படியில்லை. அதிகாராப்பூர்வ பத்திரிகை என மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

கேள்வி : ஓ.பி.எஸ் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டாரா?

பதில்: நமது அம்மா நாளிதழில் ஒருங்கிணைப்பாளர் அடுத்து இணை ஒருங்கிணைப்பாளர் செய்தி என்றே வரும். ஆனால் தேர்தலுக்கு பிறகு ஓ.பி.எஸ் செய்தியை முதல் பக்கத்துக்கு பதில் உள்பக்கத்தில் போடச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வரும். அப்படியே படிப்படியாக பத்தியாக ஓ.பி.எஸின் செய்திகள் பின்னர் குப்பைக்கு சென்றது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டுதான் செய்தார்கள்.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நமது அம்மா நாளிதழிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆசிரியரான உங்களிடம் எதும் ஆலோசிக்கவில்லையா?

பதில்: ஒரு நாள் கூட இது தொடர்பான எந்த கருத்தும் என்னிடம் பேசியதில்லை. நானாக பேச முயற்சித்து, சந்திரசேகரை பார்க்க கோவைக்கே 23 முறை சென்றிருந்தேன். ஆனால் அத்தனை முறையும் பார்க்காமலேயே திருப்பி அனுப்பப்பட்டேன்.

கேள்வி: கூலிக்காக இருக்கும் நீங்கள் ஓ.பி.எஸ். பக்கம் இருக்கிறீர்கள் என ஜெயக்குமார் கூறியது பற்றி..?

பதில்: பதில் சொல்ல முடியாத அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அவதூறுதான். நான் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் முறைகேடு என சொல்கிறார் ஜெயக்குமார். என்ன முறைகேடு செய்தேன் என ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.

அப்படி நான் நிதி முறைகேடு செய்திருந்தால் அவர்களாகவேத்தான் என்னை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், நானாகவேதான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பிருந்து ராஜினாமா செய்தேன்.

11 வருடங்களாக ஜெயலலிதாவின் உரையாசிரியராக இருந்த என்னை பார்த்து கட்சிக்கு சம்மந்தமில்லாதவர் என்கிறார் ஜெயக்குமார். அந்த ஜெயக்குமார் எப்படி ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டார் தெரியுமா?

அப்படிப்பட்ட ஜெயக்குமார் சபாநாயகரா தேர்ந்தெடுக்கப்பட்ட போது எழுத்துரை வழங்க என்னிடம் வந்து “மருது அத எழுதிக்கொடுங்க, மருது அத எழுதிக்கொண்டுங்க” என துரத்தியவருக்கு மொத்த உரையையும் எழுதி கொடுத்தேன்.

கேள்வி: பொருளாளராக கட்சி நிதியை விடுவிக்காமல், கட்சியை அவமதிக்க நீதிமன்றத்துக்கு செல்கிறார், ஓ.பி.எஸ். அதிமுகவை முடக்க பார்க்கிறார் என இ.பி.எஸ். தரப்பு குற்றச்சாட்டப்படுவது குறித்து?

பதில்: பொதுச்செயலாளர் இருக்கை ஜெயலலிதாவுக்கானது. என்றைக்கும் அவர்தான் நிரந்தர பொதுச்செயலாளர் எனக் கூறிய அதே எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் அனைத்து அதிகாரமும் படைத்த பொதுச்செயலாளராக வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் சொல்வதை எதை நம்புவது, எதை ஏற்பது, எதை விடுவது?

கேள்வி: கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஓ.பி.எஸ். என்றாவது பேசியிருக்காரா?

பதில்: இது பற்றி கேட்டபோது, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்படாத துணை முதல்வராக நான் இருக்கேன். இப்படி இருக்கையில் நடவடிக்கை குறித்து பேசினால் அவர் மீது சந்தேகத்தை பரப்புவது போல் குற்றச்சாட்டு எழும். ஆனால் என் கருத்தை வலிமையாக கூறிவிட்டேன் என்றவர் ஓ.பி.எஸ்.

அதிமுகவின் மருது அழகுராஜின் முழு நேர்காணலை புதிய தலைமுறை யூடியூப் தளத்தில் காண:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com