ஐபிஎல் எதிர்ப்பு: காவிரிக்கா? விளம்பரத்துக்கா?
1999 ஆம் ஆண்டு சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். ஏன் ? தனது பரம எதிரியான பாகிஸ்தானை, இந்தியா அபாரமாக வென்றதா ? இல்லை. அந்தப் போட்டியில் இந்தியாவை 12 ரன்களில் தோற்கடித்தது, பாகிஸ்தான். பின்பு ஏன் மறக்க முடியாதது ? இதோ ஒரு சின்ன 'பிளாஷ் பேக்', 271 ரன் எடுத்தால் இந்தியா வெற்றிப் பெற்றுவிடும் என்ற நிலை. முக்கிய பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்கு நடையை கட்ட, தனி ஒருவனாக சச்சின் விடாப்பிடியாக போராட ஆரம்பித்தார். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்கும் சச்சினுக்கும் இடையே கடைசி நாள் ஆடுகளத்தில் ஒரு யுத்தமே நடந்தது என்றே சொல்லலாம். மோங்கியாவுடன் இணைந்து சச்சின் போராடிய ஆட்டம், ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. இந்தப் போட்டியில்தான் சச்சினுக்கு முதல்முறையாக முதுகு வலி பிரச்னை தொடங்கியது. வெறும் 18 ரன் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் 136 ரன்களில் சச்சின் அவுட்டாக, அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் மீதியிருந்த விக்கெட்டுகள் வீழ்ந்து இந்தியா பரிதாபமாக தோற்றது. 12 ரன் வித்தியாசத்தில் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால், இந்திய ரசிகர்கள் பெரும் கோபத்துடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் 1999 என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய ஆண்டாகும். இதனால் ரசிகர்கள் நிச்சயம் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எழுந்து நின்று மைதானம் முழுவதும் பலத்த கரகோஷம் எழுப்பினர் தமிழக ரசிகர்கள். இதைச் சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் வீரர்கள் நெகிழ்ந்து போயினர். சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் இந்த நிகழ்வு, கிரிக்கெட் உலகத்தின் பேசுபொருளானாது. போட்டியை போட்டியாகவே ரசிக்க வேண்டும், என்பதனை நம் ரசிகர்கள் அன்றே உணர்த்திவிட்டனர். நல்லவேளை அப்போது மூன்று நான்கு நாள்களுக்கு முன்பு தோன்றிய அமைப்புகளும் இல்லை. அப்போதிருந்த 50 ஆயிரம் ரசிகர்களும் கிரிக்கெட்டை விளையாட்டுப் போட்டியாகவே ரசித்தனர்.
இதுதான் சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் மாண்பு என பல ஆண்டுகாலமாக மார்தட்டிக் கொண்டிருந்தோம். சர்வதேச போட்டிகளை கூட சர்வ சாதாரணமாக அமைதியாக பார்த்த வாலாஜா சாலையும், பெல்ஸ் சாலையும் நேற்று போர்க்களமாக காட்சியளித்தது. சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகளும் நடத்திய போராட்டம் தான் அதற்கு காரணமாக அமைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்கும் வரை ஐ.பி.எல். டி20 போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன்வைத்தனர். மைதானத்துக்கு சென்று போட்டியை பார்க்காமல் ரசிகர்கள் இருந்தால் ஒட்டுமொத்த நாடும் காவிரி விவகாரத்தை கவனிக்கும் என்பது போராளிகளின் நியாயமான கோரிக்கையாக முதலில் இருந்தது.
ஆனால், முதலில் இதற்கு ஒரு அரசியல் கட்சித் தலைவர் தூபம் போட்டார் (பால் தாக்கரே பாணியில்) "சி.எஸ்.கே. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே செல்லும்போது, குடும்பத்துடன் வெளியே செல்லும்போது, அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல", இதற்கடுத்து" வீரர்கள் விளையாடும்போது மைதானத்தில் பாம்புகளை விடுவோம்" என்று சூளுரைத்தார். இதற்கிடையே நேற்று போட்டியை காண சென்ற ரசிகர்களை ஏதேதோ அமைப்பினர் தாக்கினர். மேலும் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலையில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டது. சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போதெல்லாம் சில நூறு ஏழை வியாபாரிகள் பயன்பெறுவார்கள். அந்த ஏழை வியாபாரிகளின் வியாபாரத்திலும் மண் விழுந்தது. போராட்டக்காரர்கள் எல்லை மீறியதால் காவல் துறையும் தடியடி நடத்தினர். அதில் ஒருகட்சியை சேர்ந்த தொண்டர் பாக்ஸிங் பழகியவர் போல, ஒரு காவலரை சரமாரியாக அடித்தார். இத்தனை களேபரங்கள் நடுவிலும் போட்டி தொடங்கியது. ஒரு கட்சியின் தொண்டர்கள் மைதானத்தில் காலணி வீசினர், இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் ஐ.பி.எல். எனும் உள்ளூர் போட்டியில் நடப்பது இதுவே முதல் முறை. காவிரி ஒரு வாழ்வாதார பிரச்னைதான், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதுதான், அதற்காக சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளை புறக்கணிப்போம் என கூறுவதும் சரிதான். ஆனால், சில திடீர் கட்சிகளாலும், அமைப்புகளாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை, ஐ.பி.எல். புறக்கணிப்பாக திசை மாறுகிறதோ என தோன்றுகிறது என ரசிகர்கள் பலரும், விமர்சகர்களும் குற்றம் சாட்டினர்.
இப்போது, சி.எஸ்.கே. அணியின் அடுத்தடுத்த போட்டிகளை கொச்சின் அல்லது திருவனந்தபுரத்தில் நடத்தலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் யோசித்து வருவதாக தெரிகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட சில கட்சித் தலைவர் போராட்டம் வென்றதாக தெரிவிக்கின்றனர், மகிழ்ச்சியை பகிர்கின்றனர். அடுத்ததாக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட விமானம் நிலையம் செல்ல உள்ளதாக அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஐ.பி.எல் போட்டி எதிர்காலத்தில் சேப்பாக்கத்தில் நடக்காதது, போராட்டக்காரர்களின் வெற்றி ! பின்பு, காவிரி எப்போது வரும் ? ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு சென்னையில் வசூல் நடக்கவில்லை என்றால், சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தை வைத்து மற்ற மாநிலங்கள் வசூலித்துவிடும். அவ்வளவுதான்.
விளம்பரம் தேடிய கட்சிகள் செய்தது என்ன என்பதை எழுதிச் சொல்ல தேவையில்லை. காணொளி காட்சிகளே அதற்கு ஆதாரம். தமிழுணர்வு யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை இந்தக் கட்சிகளும், அமைப்புகளும் பாடம் நடத்துகின்றன. ஆனால், மாநில உணர்வு எத்தனை அமைப்புகளுக்கும், பிரதான கட்சிகளுக்கும் இருக்கிறது ? எல்லாமே சுயநல விளம்பரம்தானே என பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். யாருடைய போராட்டம் சிறந்த போராட்டம் ? எந்தக் கட்சியினால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டது என்ற விவாதம்தான் பிரதானமாக்கப்படுகிறது. காவிரி விவகாரத்தை ஐ.பி.எல். புறக்கணிப்பு குறித்து முறையான விழிப்புணர்வை இளைஞர்களிடம் கொண்டு சென்று இருந்தால், இளைஞர்கள் தானாகவே போட்டியின் போது கவனத்தை ஈர்த்து இருப்பார்கள், ஆனால் வன்முறைப் பேச்சும், செயலும் இளைஞர்களை மைதானத்துக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு தடைகளை விதித்து முடக்கியது அரசு. விளையாட்டுப் போட்டிகளை, விளையாட்டை பார்ப்பது எப்படி என்பதை பண்பட்ட தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே உணர்ந்துள்ளனர், ஆனால் உணர்வுகளை தூண்டி காவிரி எனும் அரசியல் விளையாட்டை இப்போதும் விளையாடாதீர்கள் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கை.