ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதற்கட்டமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தியதற்காக விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணையை இன்று தமிழக முதல்வர் வழங்கினார்.

இலவச மின் இணைப்புகளுக்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின், “விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே திட்டத்தை முடிக்க மின்சாரத்துறை திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்புகள்தான் விவசாயிகளுக்கு தரப்பட்டன. ஆனால் 4 மாதத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது” என தெரிவித்தார்.

ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் – யார் யாருக்கு கிடைக்கும்?

அரசின் விவசாய மின் திட்டத்தினை பொறுத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 25 ஆயிரம் இணைப்புகளும், 2020-ல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன. இவர்களைத் தவிர கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி இன்னும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் மின் இணைப்புகளில், எந்தெந்த பிரிவில் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அரசாணையில், “ இத்திட்டத்தில் கீழ் சாதாரணப்பிரிவில் 1.4.2003 முதல் 31.3.2005 வரை விண்ணப்பித்த 32,274 விவசாயிகளுக்கும்,  சுயநிதிப்பிரிவில் 10 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் 1.4.2003 முதல் 31.3.2004 வரை விண்ணப்பித்த 2,808 விவசாயிகளுக்கும், 25 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் 31.3.2011 வரை விண்ணப்பித்த 31,961 விவசாயிகளுக்கும், 50 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் 31.3.2011 வரை விண்ணப்பித்த 19,150 விவசாயிகளுக்கும், தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ள 12,742 விவசாயிகளுக்கும், அரசு திட்டங்களின் மூலம் விண்ணப்பித்துள்ள 1,075 விவசாயிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி:

ஒரு லட்சம் இலவச  விவசாய மின் இணைப்புகளை வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறிய விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவரான சுந்தர.விமல்நாதன் பேசும்போது, “தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டதற்காகவும், இயற்கை வேளாண் பெரியார் நம்மாழ்வார் பெயரில் சிறப்பு மையம் அமைத்திட அறிவிப்பு செய்ததற்காவும் தமிழக முதல்வரை முதலில் பாராட்டுகிறோம். தமிழகத்தில் உள்ள சுமார் 4.23 லட்சம் உழவர்கள் வேளாண்மைக்குப் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்காக 2003 ஆம் ஆண்டிலிருந்து முன்பதிவு செய்து காத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எவரும் முன் எப்போதும் அறிவித்திடாத, ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்த கையோடு உடனடியாக அரசாணை வெளியிட்டு அந்த திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளது மிகவும் வரவேற்புக்குரியது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா நெருக்கடி என விவசாயிகள் திக்கித்திணறிக்கொண்டிருக்கும் சூழலில் ஒரு இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் என்பது அவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டமாக உள்ளது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு  50 ஆயிரம் மின் இணைப்புகள் அறிவிக்கப்பட்டபோது அதில் 25 ஆயிரம் இணைப்புகளை தட்கல் திட்டத்திற்கே ஒதுக்கினார்கள், தட்கல் திட்டத்தில் பணம் கட்டும் அளவுக்கு விவசாயிகள் நல்ல நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே, எனவே தட்கல் திட்டத்தில் பணக்காரர்கள்தான் பலனடைந்தனர். ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் சாதாரண மற்றும் சுயநிதி பிரிவுகளுக்கே பெரும்பான்மை மின் இணைப்புகள் அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

அரசினால் ரூ.19,200 மின் மானியமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் இலவச மின் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது, தற்போது உள்ள நிதி நெருக்கடியிலும் விவசாயிகள் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு  நன்றிகள். 25 ஆயிரம் விவசாயிகளுக்கு முதற்கட்டமாக மின் இணைப்புகளை விரைவாக வழங்கியது போலவே மீதமுள்ள 75 ஆயிரம் விவசாயிகளுக்கும் விரைவில் இணைப்புகளை வழங்குவார்கள் எனவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக மீதமுள்ள விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்புகளை வழங்குவார்கள் நம்புகிறோம்.  மேலும் தமிழகத்தில் சிறுகுறு விவசாயிகள், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறி, மலர்கள், பழங்கள் சாகுபடி செய்வதற்கென சுமார் 12,000 மின்இணைப் புகளை மின் விகிதம் iii  A1ல் பெற்று பயிர்சாகுபடி செய்துவருகின்றனர். இத்திட்டத்தின் விவசாயிகளிடமிருந்து மின் கட்டணம் ஆண்டிற்கு சராசரியாக  ரூபாய் 20,000 /-வசூலிக்கப் படுகிறது. காய்கறி, பழங்கள், மலர்கள் சாகுபடி செய்துவரும் மேற்கண்ட சிறுகுறு  விவசாயிகளின் நலன்கருதி அவர்களனைவருக்கும்  மற்ற விவசாயிகள் போன்று வேளான் மின் மான்யத்தின் கீழ் கட்டணமில்லா மின்சாரம் வழங்கிட ஆணையிட்டு மேலும் ஒரு புதிய வரலாறு  பதிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்” என தெரிவித்தார்

இந்த திட்டத்திற்கு மகிழ்ச்சியை தெரிவித்த விவசாயி மதன்பாபு, “ தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் குறுவை தொகுப்புதிட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். தற்போது ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்துள்ளது உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு, வெறும் அறிவிப்போடு நிற்காமல் உடனடியாக அத்திட்டத்தை செயல்படுத்தவும் தொடங்கிய தமிழக முதல்வருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com