கொரோனா கால மாணவர் நலன் 13: குழந்தை திருமணம் - டீன் ஏஜ் இன்னல்களும், உயிர் ஆபத்துகளும்
கொரோனா காலத்தின்போது குழந்தை திருமணங்கள் குறித்து தேசிய குடும்ப நல ஆய்வுகள் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணங்கள் காரணமாக டீன் ஏஜ் வயதில் குழந்தைப் பெற்றெடுக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதை நம்மால் காணமுடிகிறது. இதன் பின்னணி குறித்து செய்த அலசல்தான், இந்த அத்தியாயம்!
அந்த ஆய்வு சொல்லும் தகவல்களில் மிக முக்கியமானவற்றில் ஒரு தகவல்: தமிழக அளவில் கொரோனா நேரத்தில் (2019-21) 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொண்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 12.8%. இதில், கிராம அளவில் 15.2% என்றும்; நகர அளவில் 10.4% என்றும் இருந்துள்ளது. இதேபோல 2019-21 காலகட்டத்தில், தமிழகத்தில் டீன் ஏஜ் வயதில் கருத்தரித்தரித்தல் விகிதம் 6.3% என்றிருந்ததுள்ளது. இதில், கிராம அளவில் 8.2% என்றும்; நகர அளவில் 4.2% என்றும் இருந்துள்ளது. இவை இரண்டையும் ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் குழந்தை திருமணம் செய்வோர் விகிதமும், இளம்வயதில் கருத்தரிப்போர் விகிதமும் அதிகரித்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது.
இதுகுறித்து குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினேன். "கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை சில:
* கொரோனா காலத்துல ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் எல்லாத்துக்கும் முதல்படி.
* அடுத்தது, வரதட்சணை கொடுமை. நம் ஊர்களில் பெண் குழந்தைகள் வளர வளர, குறிப்பாக அவர்களின் படிப்பு உயரும்போது, 'வரதட்சணையாக கொடுக்கும் பணமும் பொருளும்' உயர்கிறது. டீன் ஏஜ் வயதிலேயே பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால், அதாவது பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே திருமணம் செய்து வைத்தால், வரதட்சணையை குறைக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். அப்படியானவர்கள், இதுபோன்ற குழந்தை திருமணங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம்.
* பெண் குழந்தை என்றாலே பெற்றோரின் உச்சபட்ச கடமை, திருமணம் செய்து வைப்பதாகத்தான் இருக்கிறது. சிறுவயதிலேயே அந்தக் கடமையை முடிப்பது மூலம் பின்னாள்களில் அவர்களுக்கு செய்யும் பணத்தை சேமிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். 'பெண் பிள்ளையா கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள போகிறது?' என்ற எண்ணத்தின் பிரதிபலன்தான் இது. இதனால் 'கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் கடமை முடிஞ்சுடபோகுது' என்று நினைத்து, அப்படியே செய்கின்றார்கள்.
இந்த இடத்தில், பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி ஆண் குழந்தைகளுக்கும் அவர்களின் திருமண வயதுக்கு முன்பே அவர்களை திருமணம் செய்துவைக்கும் சூழல் நிலவுவதையும் நாம் காண வேண்டும். பெண் குழந்தைகளில் 12.8% பேர் குழந்தை திருமணத்துக்கு உள்ளாகின்றனர் என்றால், ஆண் குழந்தைகளில் 4.5% பேர் உள்ளாகின்றனர். ஒப்பீட்டளவில் குறைவென்றாலும், அவர்களும் நாம் கவனிக்க வேண்டியவர்கள்தாம். இந்த இரு தரப்பையுமே நாம் மீட்க வேண்டியுள்ளது. இதற்கு முதற்படியாக, 'திருமணம் மட்டுமே குழந்தையுடைய வாழ்வின் நோக்கமில்லை. கடைசிவரை கல்விதான் அவர்களை காப்பாற்றும்' என்ற புரிதலை நாம் பெற்றோருக்கு முதலில் கொடுக்க வேண்டும்.
இதற்கு அரசுத் தரப்பிலிருந்து 18 வயதுக்குட்பட்ட எல்லா குடும்பங்களும் அங்குள்ள குழந்தைகளும் கூடுதல் விழிப்புணர்வுடன் கண்காணிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளின் உதவியுடனும், கிராம அலுவலகங்களின் உதவியுடனும் அரசால் இதை சாத்தியப்படுத்த முடியும். ஏனெனில், ஒரு குழந்தை திருமணம் நடக்கிறது என்றால் சம்மந்தப்பட்ட குழந்தையை பள்ளி / (ஆண் எனில்) கல்லூரிக்கு வருவதுதான் முதலில் தடைபடும். ஆக, பள்ளி - கல்லூரி அளவில் அந்தப் படிப்பிலிருந்து பின்வாங்கும் பிள்ளைகளை கண்காணிப்பதன் மூலம் நம்மால் இப்படியான திருமணங்களை முழுவீச்சில் தடுக்கவும், அந்தக் குழந்தையை மீட்க முடியும். இவையன்றி ஒவ்வொரு கிராமத்திலும், பேரூராட்சியிலும், நகர வார்டுகளில் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் போன்றவர்களை வைத்து குழுவொன்றை அரசு அமைக்க வேண்டும். அவர்களின் மூலம் அப்பகுதியில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க முடியுமென்பதால், அதற்கு அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் சரியாக பல ஆசிரியர்களால் கண்காணிக்க முடியாத சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பலர், குழந்தைகளின் உரிமையை பறித்துள்ளனர். தற்போதும் கொரோனா முடிவடையவில்லை. பல இடங்களில் அடுத்த அலை கொரோனா அச்சம் நிலவுகிறது. பள்ளி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தே உள்ளது. இது, குழந்தை திருமணங்கள் மீதான அச்சம் முழுமையாக மீளவில்லை என்பதையே நமக்கு காட்டுகிறது. கடந்த கொரோனா முதல் அலையின்போது குழந்தைகள் விஷயத்தில் அரசுத் தரப்பு தவறவிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த முறை சரியாக பின்பற்ற வேண்டும்.
தற்போது 'இல்லம் தேடி கல்வி' முறை நம்மிடையே உள்ளது. அதன்மூலம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை நீக்குவது ஆரோக்கியமான விஷயம். அத்துடன் பள்ளிப் படிப்பை கைவிட்ட குழந்தைகளை கண்டறியும் பணியையும் அரசு செய்ய வேண்டும். அவர்களை பள்ளியை நோக்கி அழைத்து வர வேண்டும். குழந்தை திருமணத்துக்கு உள்ளானவர்கள், குழந்தை தொழிலாளியாக மாறியவர்கள் ஆகியோரை அவர்களின் இன்னல்களிலிருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.
குழந்தை திருமணத்தால் ஏற்படும் மிக முக்கியமான சிக்கல், வளரிளம் பருவத்தில் கருத்தரித்தல். இப்படி வளரிளம் பருவத்தில் கருத்தரிக்கும்போது, அந்தப் பெண்ணுக்கு நேரும் உடல் சார்ந்த சிக்கல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் சிலவற்றை 2020-ல் பட்டியலிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். அதில் முக்கியமாக, "15 - 19 வயதிலுள்ள பெண் குழந்தைகளின் இறப்புக்கு இளவயது கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு முக்கிய காரணமாக உள்ளது. இருப்பினும் அதன் ஆபத்தை உணராமல், உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 12 மில்லியன் 15 - 19 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் மற்றும் குறைந்தபட்சம் 7.70 லட்சம் 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் அந்த வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இவையன்றி ஒவ்வொரு வருடமும் உலகளவில் 15 - 19 வயதிலுள்ள பெண்களில் 10 மில்லியன் பேர், திட்டமிடாத எதிர்பாராத கருவுறுதலை சந்திக்கின்றனர்.
இப்படி இளவயதில் (10 - 19 வயதில்) குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண் குழந்தைகள் எக்லாம்ப்சியா (எ) கர்ப்ப காலத்தில் அதிக ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் வலிப்புநோய், பின் அதன் தொடர்ச்சியாய் ஏற்படும் கோமா நிலைக்கு செல்லும் ஆபத்து; பிரசவ வலி - கர்ப்ப கால உடல் மாற்றங்களை தாங்கமுடியாமல் ஏற்படும் கர்ப்பப்பை சோர்வு மற்றும் தொற்றுகள்; தொற்றுகள் போன்றவை ஏற்படும்.
இவை பிற வயதினருக்கும் ஏற்படக்கூடும் என்றாலும், வளரிளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படும். இவையன்றி, வளரிளம் பருவத்தில் குழந்தை பிரசவிக்கையில், பிறக்கும் குழந்தைக்கும் ஆபத்து அதிகம். குறைப்பிரசவமாகவோ, எடை குறைவாகவோ, பச்சிளம் குழந்தைக்கான உடல் உபாதைகளோ அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்" போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளது.
[முழு விவரங்களுக்கு: WHO]
இந்தப் பட்டியலில், முழுக்க முழுக்க உடல் சார்ந்த உபாதைகள் மட்டுமே உள்ளது. இவற்றுடன் மனரீதியான சிக்கல்கள், பொருளாதார சிக்கல்கள், குழந்தை வளர்ப்பிலான சிக்கல்கள் உள்ளிட்ட பல வேதனைகள் உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்படுகிறது.
செயற்பாட்டாளர் தேவநேயன் இதுகுறித்து நம்மிடையே கூறுகையில், "வளரிளம் பருவத்தில் கருவுறுதலால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிய தெளிவை, குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே நாம் கொடுப்பது எளிது. ஆனால் அதுமட்டும் போதாது. சமூக மாற்றம் வேண்டும். ஏனெனில் வளரிளம் பருவத்தில் எந்தக் குழந்தையும் இன்னொரு குழந்தைக்கு தாயாக சுயமாக ஆசைப்பட்டு விருப்பம் தெரிவிக்காது. அப்படியே தெரிவித்தாலும், குழந்தையை அப்படி ஒப்புக்கொள்ள / சம்மதிக்க வைக்கத் தூண்டும் நபர் சட்டப்படிப்படி தண்டனைக்குரியவர். இதுவொரு பக்கமென்றால், சமூக அவலங்கள் மற்றொரு பக்கம். 'அந்தக் காலத்துல எங்க பாட்டிக்கு 10 குழந்தை இருந்துச்சு. அவங்களாம் 15 வயசுல கல்யாணம் பண்ணி, நல்லபடியா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா' என்று பல பெரியவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அந்தப் பாட்டிகளெல்லாம் உடல்சார்ந்த என்ன பிரச்னையை எதிர்கொண்டனர் என்று, இவர்களுக்கு தெரியவே தெரியாது. அந்தக் காலத்தில் பெண்களுக்கான விருப்பு வெறுப்பு - பேச்சுரிமை என்று எல்லாமே இன்றைவிட மிக மிக அதிகமாக மறுக்கப்பட்டிருந்தது. இவ்விஷயத்தில் அவர்களின் குரலை கேட்காமல் - பேசவிடாமல், பெண்ணை வெறுமனே குழந்தை பெற்றுக்கொள்ளும் பொருள்போல நடத்தியது அக்காலம். அன்று அப்படி அவர்கள் செய்ததே தவறு... அதை அப்படியே இன்றும் உதாரணம் காட்டுவது இன்னும் தவறு. பெண்களும் சக உயிர்தான். அவர்களுக்கும் கல்வி முக்கியம். எந்தவொரு உறவிலும் அவர்களின் விருப்பு வெறுப்பும் முக்கியம். ஆகவே இன்னும் பழங்காலத்து கதைகளை பேசக்கூடாது.
இதற்கு முதல்படியாக பள்ளிக்கூடங்களில் பாலின சமத்துவம் சார்ந்த விஷயங்களை அரசு கொண்டுவரவேண்டும். பாலியல் கல்வியின் தேவை அதிகரித்திருப்பதை போலவே, பாலின சமத்துவ கல்வியின் தேவையும் உயர்ந்துள்ளது.
இவற்றுடன் இன்று அதிகரித்துள்ள சைபர் புல்லியிங், இளம் குழந்தைகளின் ஆசை வார்த்தைகள் பேசி அவர்களை காதல் வலையில் சிக்கவைப்போர் பற்றிய எச்சரிக்கைகள், பாலியல் உறவு பற்றிய விழிப்புணர்வு, பாதுகாப்பற்ற உறவால் ஏற்படும் விளைவுகள், வளரிளம் பருவ கருத்தரித்தல் - கரு கலைத்தலால் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்டவற்றையும் இளம் சிறார் மத்தியில் அரசு அதிகரிக்க வேண்டும். எப்போதுமே, பிரச்னை வந்த பின்னர்தான் நாம் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், பிரச்னையை தடுப்பதற்கான நடவடிக்கை, இங்கு அவசியம். அதை இந்த அரசு செய்ய வேண்டும்" என்றார் அவர்.
இந்தக் கொரோனா காலத்தில், பிற வயதினரை விடவும் அதிக பாலியல் வன்முறைகள் - துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருப்பது வளரிளம் பருவ குழந்தைகள்தான் என்பதை தரவுகள் வழியாக நம்மால் உணரமுடிகிறது. ஆகவே, அரசு அவர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியுள்ளது. விரைவில் அரசு அதை செய்யுமா என்பதைப் பார்ப்போம்!
முந்தைய அத்தியாயம் > கொரோனா கால மாணவர் நலன் 12: ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள்... வெளிவராதது ஏன்?