ராகுல் காந்தி Vs பிரியங்கா காந்தி... உ.பி. தேர்தல் கள அணுகுமுறையில் ஈர்ப்பது யார்?

ராகுல் காந்தி Vs பிரியங்கா காந்தி... உ.பி. தேர்தல் கள அணுகுமுறையில் ஈர்ப்பது யார்?

ராகுல் காந்தி Vs பிரியங்கா காந்தி... உ.பி. தேர்தல் கள அணுகுமுறையில் ஈர்ப்பது யார்?
Published on

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸை வழிநடத்தும் பிரியங்கா காந்தியின் அணுகுமுறை எப்படி இருக்கிறது, கடந்த முறை ராகுல் காந்தி வழிநடத்தியதில் இருந்து இவரின் அணுகுமுறை எப்படி வேறுபடுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி அப்போது தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொண்டது. வெற்றிக்காக பல யுக்திகளை அப்போது கையாண்டார் ராகுல். ஆனால், தோல்வியை மட்டுமே அவரால் எதிர்கொள்ள முடிந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி தலைமையில் இப்போது தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ். பிரியங்கா தனது பிரசார யுக்தியில் ராகுலை பின்பற்றி வருகிறார். பட்டியிலன மக்களை சந்திப்பதில் இருந்து வாக்குறுதிகள் வரை பல விஷயங்களில் இதற்கு உதாரணம் சொல்லலாம்.

2017 தேர்தலுக்கு முன்னதாக, ராகுல் காந்தி தன்னை பட்டியிலன மக்களின் நலன் விரும்பியாக காட்டுவதற்காக மாநிலத்தின் ஒவ்வொரு விசிட்டின்போதும் அம்மக்களை சந்திப்பது, அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் உணவு அருந்துவதை வழக்கமாக்கி கொண்டார். இதே பாணியை பிரியங்காவும் இப்போது செய்கிறார். லக்கிம்பூர் கெரி வன்முறைக்குப் பிறகு அங்குச் சென்ற பிரியங்கா, லக்னோவின் பட்டியிலன மக்களின் குடியிருப்பில் உள்ள வால்மீகி கோவிலின் தரையை சுத்தம் செய்து அந்த மக்களின் மனதில் தனி இடம்பிடித்தார்.

2013-ம் ஆண்டு மாயாவதி அரசின் நிலம் கையகப்படுத்தும் கொள்கைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு, அங்குச் சென்று தன்னை விவசாயிகளின் ஆதரவாளராக காட்டிக்கொண்டார் ராகுல். இதே செயலைதான் லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு பிறகு பிரியங்கா செய்தார். லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு விவசாயிகளை சந்தித்ததாக அதிகம் பேசப்பட்ட ஓர் அரசியல் தலைவராக இருந்தவர் பிரியங்கா காந்தி. வெறும் ஆதரவு என்பதோடு நிற்காமல், வன்முறையில் இறந்த விவசாயிகளின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட பிரியங்கா, வாரணாசியில் நடந்த விவசாயிகள் பேரணியிலும் பங்கேற்று வலுவான ஆதரவை தெரிவித்தார்.

இதேபோல் ராகுல் காந்தியின் மற்றொரு யுக்தி கோவில்களுக்கு அதிகமாக செல்வது. உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்துக்களை கவர்வதற்காக இந்த பாணியை கையாண்டார் ராகுல். இதற்கு சிறந்த உதாரணம், 2017-ல் தனது தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு சற்று முன்பாக தியோரியாவில் உள்ள துக்தேஷ்வர்நாத் கோயிலுக்குச் சென்று நெற்றியில் 'திலகம்' இட்டுக்கொண்டே பிரசாரத்தை தொடங்கினார். இப்போது, பிரியங்கா தனது வாரணாசி பேரணியின்போதும் இதே பாணியை பின்பற்றினார்.

விவசாயிகளின் பேரணிக்கு சற்று முன்பு கோயில்களுக்குச் சென்றதுடன், அங்கு அணிவித்த ருத்ராக்‌ஷ மாலையுடன் பேரணியில் பங்கேற்றவர், அங்கு தனது பேச்சை தொடங்கும் முன் 'ஜெய் மாதா தி' என்ற துர்க்கை தேவியின் கோஷமிட்டே பேசத் தொடங்கினார். இதுபோன்ற பல விஷயங்களில் தனது சகோதரர் ராகுலை அப்படியே பிரதிபலித்து வருகிறார் என்றாலும், ராகுல் செய்யாத பல காரியங்களையும் பிரியங்கா செய்யத் தொடங்கியுள்ளார்.

குறிப்பாக, ராகுலை விட வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டுள்ளார். லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு பிறகான சம்பவங்களை இதற்காக உதாரணமாக சொல்லலாம். இந்த சம்பவத்தின்போது பிரியங்காவை மாநில அரசு அனுமதிக்கவில்லை. காவல்துறை அடக்குமுறையின்போதும் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதில் உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில் மாநில அரசு அவரை நான்கு நாட்கள் சீதாபூர் விருந்தினர் மாளிகையில் சிறைவைத்தது. அதன்பிறகும் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்தே தீருவேன் என்று விடாப்பிடியாக இருந்து இறுதியாக தான் நினைத்ததை நடத்திக் காட்டினார்.

இறந்த விவசாயிகளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது மீண்டும் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போதும் போராடி வென்றார். போலீஸ் காவலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பட்டியிலன இளைஞரின் குடும்பத்தை சந்திக்க ஆக்ராவுக்குச் சென்றபோதும் இதே கதைதான். பிரியங்காவின் இந்த துணிச்சலான அணுகுமுறை உத்தரப் பிரதேசத்தின் மற்ற அரசியல்வாதிகளை விட அவரை மக்களிடம் தனித்து தெரியவைத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், பெண்கள் ஆதரவை பெறுவதிலும் பிரியங்காவின் அணுகுமுறை அவரை வேறுபடுத்தி காட்டியுள்ளது. மாநிலத்தின் வாக்காளர்களின் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் சமீபத்தில் வரும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தில் இதுவரை இல்லாத அறிவிப்பு இது. கூடவே யாரும் எதிர்பாராத ஒன்று.

இதோடு நிற்காமல், பெண்களை மையப்படுத்தும் வகையில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து பெண்களுக்கும் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் அனைத்து பட்டதாரி பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டு அசரவைத்தார்.

கடந்த முறை ராகுல் காந்தி இதுபோன்ற அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. ஏன் உத்தரப் பிரதேசத்தில் பெண் முதல்வராக இருந்த மாயாவதி முதல் இப்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் வரை யாரும் இதுவரை பெண்களை மையப்படுத்தும் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக ராகுல் காந்தியிடம் இருந்து மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச அரசியலிலும் தனி கவனத்துடன் வலம்வருகிறார் பிரியங்கா.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com