'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்?

'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்?

'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்?
Published on

உத்தரப் பிரதேசத்தில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக 40 சதவீத பெண்கள் இருப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்திருக்கிறார். இதன் பின்னணியில் உள்ள வியூகம் குறித்து பார்ப்போம்.

உத்தப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், "உத்தரப் பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் அளவுக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும். முதல்வர் வேட்பாளர் ஒரு பெண்ணாக இருக்கலாம். ஏன் இருக்க கூடாது. என்னால் பெண்களுக்கு 50 சதவீத டிக்கெட்டுகள் கூட தேர்தலில் கொடுக்க முடியும். உத்தரப் பிரதேசத்தின் முடிவுகளை என்னால் எடுக்க முடியும். இது மற்ற மாநிலங்களில் நடக்குமா இல்லையா என்பதை என்னால் கூறமுடியாது. அடுத்த மாதத்திற்குள் பெண் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். உத்தப் பிரதேச மாநிலத்தின் சீதாபூரில் பெண் போலீஸ்காரர்கள் பணிபுரிவதை பார்த்தபோது இந்த முடிவை எடுக்க தோன்றியது" என்று பேசியிருக்கிறார் பிரியாங்கா காந்தி.

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. இதில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 38 மட்டுமே. இது மிக மிக குறைவு. 2019 மக்களவைத் தேர்தல் தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் 6.61 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது உத்தரப் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களில் 46 சதவீதமாக ஆகும். இதனைக் கணக்கில் கொண்டுதான் பெண்களுக்கு 40 சதவீத போட்டி என்பதை அறிவித்துள்ளார் பிரியங்கா. 40 சதவீதம் என்றால் 160-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம். இந்த கணக்கில்தான் உத்தரப் பிரதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெண்களைக் கவர முயன்று வருகிறார்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெண்களை சந்தித்து நேற்று உரையாற்றியவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாரதிஉய ஜனதா கட்சியைக் கண்டித்து பேசினார். ``எல்பிஜி சிலிண்டர் அல்லது ரூ.2,000 கொடுத்து பெண்களை சமாதானப்படுத்த முடியும் என்று கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், ஒரு பெண்ணின் போராட்டம் நீண்டது. அது ஆழமானது" என்றவர், உன்னாவ் பாலியல் வன்கொடுமை உட்பட உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசினார்.

இதனிடையே, உத்தரப் பிரதேச தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் பிரியங்கா காந்தியின் அறிவிப்பு சமீபத்தில் முடிந்த அம்மாநில பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள் காட்டிய பலத்தின் பின்னணியில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள் அம்மாநில அரசியல் ஆய்வாளர்கள். கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் 54 சதவீத இடங்களை பெண்களே வென்றனர். மொத்தம் உள்ள 58,176 பதவிகளில் 31,212 இடங்களை பெண்களே வென்றனர். இதேபோல் 75 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளில், 42 இடங்களை பெண்களே பெற்றனர்.

இதேபோல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றிலும் பெண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2007-ல் மாயாவதி முதல்வரானபோது, அந்தத் தேர்தலில் பெண்களே அதிகளவு வாக்குச் செலுத்தி இருந்தனர். கடந்த 2017 தேர்தலின்போதும் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, பெண்கள் ஆண் வாக்காளர்களை விட நான்கு சதவீதம் வாக்குகள் அதிகமாக செலுத்தி இருந்தனர். அந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 59.5 சதவிகிதம் வாக்களித்திருந்தனர் என்றால், பெண்கள் 63.25 சதவிகிதத்திற்கும் மேல் வாக்களித்திருந்தனர்.

பெண்களின் இந்த தாக்கத்தை புரிந்துகொண்டே பிரியங்கா இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிற அரசியல் ஆய்வாளர்கள் விரைவில் மாயாவதி, அகிலேஷ் போன்றவர்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா அல்லது வேறு ஏதேனும் கட்சியுடன் கூட்டணி வைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி கட்சி (SP) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) ஆகியவை தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com