நடிகர் பிருத்வி ராஜ் பற்றவைத்த பிரசாரத் தீ.. மீண்டும் கிளம்பும் முல்லைப் பெரியாறு விவகாரம்

நடிகர் பிருத்வி ராஜ் பற்றவைத்த பிரசாரத் தீ.. மீண்டும் கிளம்பும் முல்லைப் பெரியாறு விவகாரம்

நடிகர் பிருத்வி ராஜ் பற்றவைத்த பிரசாரத் தீ.. மீண்டும் கிளம்பும் முல்லைப் பெரியாறு விவகாரம்
Published on

'முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும்' என்று மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆன்லைனில் பிரசாரம் மேற்கொண்டுவருவது கவனத்துக்குரிய விஷயமாக மாறிவருகிறது. நடிகர் பிருத்வி ராஜ் தொடங்கிவைத்த இந்த விவகாரத்தின் பின்னணியைப் பார்ப்போம்.

தமிழகம் - கேரளம் இடையே பிரச்னைக்குரிய அணைப் பகுதியாக இருந்து வருகிறது முல்லைப் பெரியாறு. நீதிமன்ற உத்தரவான 152 அடியை எட்ட தமிழகம் வற்புறுத்தி வரும் நிலையில், தற்போது இடுக்கி பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 5,000 கன அடிக்கும் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டிவிட்டது. இதனையடுத்து கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து சிலர் அச்சத்தை எழுப்பி வருகின்றனர்.

மறுபுறம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தொடர் மழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 136 அடியை தாண்டியுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையிலிருந்து, வைகை அணைக்கு நீர் திறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இப்போது நடிகர்கள் சுற்றுபோல. மலையாள நடிகர்கள் பலர் முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்துள்ளதாகக் கூறி, அதனை அகற்றுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். இதற்கு வித்திட்டவர் மலையாள நடிகர் பிருத்வி ராஜ்.

தனது சமூக வலைதள பக்கத்தில் Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக் உடன், ``உண்மைகளும் கண்டறிதல்களும் என்னவாக இருந்தாலும், 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை இன்னும் செயல்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது. நாம் அரசு அமைப்புகளை மட்டுமே நம்ப முடியும். அரசு அமைப்புகள் இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்" என்றுள்ளார்.

பிருத்வி ராஜ் தொடங்கிய இந்த பிரசாரத்தில் மலையாளத்தின் மற்ற முன்னணி நடிகர்கள் பெரிதாக குரல் கொடுக்காவிட்டாலும், இரண்டாம் கட்ட நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் அணையை அகற்ற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு மலையாள நடிகர் உன்னி முகுந்தன், “ ஒட்டுமொத்த தேசத்திற்கும் எங்கள் கவலையை தெரிவிக்கும் இந்த பிரசாரத்தில் பங்கெடுங்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர எங்கள் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளதுடன் Decommission Mullaperiyar Dam, Save Kerala என்ற ஹேஷ்டேகுகளையும் பதிவிட்டுள்ளார்.

என்றாலும் தமிழகத்தில் இந்தப் பிரசாரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணையின் நீரை நம்பியுள்ள ஐந்து மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை பிருத்வி ராஜின் உருவப்படத்தை எரித்து அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் மலையாள நடிகர்கள், நெட்டிசன்கள் அணைக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து வருகின்றனர்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com