பிரதமர் மோடியின் பஞ்சாப் பயண ரத்து முதல் உச்சநீதிமன்ற வழக்கு வரை - முழு தொகுப்பு!

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயண ரத்து முதல் உச்சநீதிமன்ற வழக்கு வரை - முழு தொகுப்பு!
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயண ரத்து முதல் உச்சநீதிமன்ற வழக்கு வரை - முழு தொகுப்பு!

பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடக்கம் முதல் தற்போது வரையிலான அப்டேட்டை பார்ப்போம்.

ரூ.42,750 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். அதன்படி, கடந்த 5ம் தேதி காலை விமானம் மூலமாக பதிண்டாவுக்கு வந்திருங்கிய அவர், ஹெலிகாப்டர் மூலமாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அங்கேயே சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருந்தார்.
வானிலை சீரடையாத காரணத்தால், ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் சாலை மார்க்கமாக பிரதமரின் கார் பயணிக்க தொடங்கியது. அப்போது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலத்தை அடைந்தபோது, அங்கே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருவது தெரியவந்தது. இதனால், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு கருதி பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் காரை சுற்றி நின்றனர். கடைசி வரை அங்கு போராட்டம் முடிவிற்கு வரவில்லை. கடைசியில் பாதுகாப்பை காரணம் காட்டி பிரதமரின் பயணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார் பிரதமர் மோடி. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, பாதிவழியிலேயே பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பிச்சென்ற மோடி, ``நான் பதிண்டா விமானம் நிலையம் வரை உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வரிடம் நன்றி சொன்னேன் என்று கூறுங்கள்" என ஆத்திரமாக கூறிவிட்டு புறப்பட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார். ஆனாலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் மோடி வருவதற்கு 5 நாள்கள் முன்னரே அவரது பயண பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் சென்று விட்ட நிலையில் மாநில அரசு மீது குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் பேசும் போது கவலை தெரிவித்திருந்தார். பிரதமரை நேரில் வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற மோடி, பஞ்சாப் மாநிலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், பஞ்சாப் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரித்தது. அப்போது பஞ்சாப் அரசு சார்பில், '' இந்த வழக்கை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். மத்திய அரசு கூட ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்'' என மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில். '' பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் அரிதிலும் அரிதானது. இது சர்வதேச அளவில் நமக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்கும், உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது. இதில் வாதப்பிரதிவாதங்களை கேட்டதற்கு பிறகு உத்தரவுகளை பிறப்பித்த தலைமை நீதிபதி, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பான விவகாரத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளர், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பத்திரப்படுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு பஞ்சாப் மாநில காவல்துறை உள்ளிட்ட அனைத்து மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த சில அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதுவரை மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைத்துள்ள குழுக்கள் எந்தவிதமான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com