“இனிய தமிழில் அர்ச்சனையை கேட்டு மகிழ்கிறார்கள்” - பணியை தொடங்கிய அர்ச்சகர்களும் வரவேற்பும்

“இனிய தமிழில் அர்ச்சனையை கேட்டு மகிழ்கிறார்கள்” - பணியை தொடங்கிய அர்ச்சகர்களும் வரவேற்பும்
“இனிய தமிழில் அர்ச்சனையை கேட்டு மகிழ்கிறார்கள்” - பணியை தொடங்கிய அர்ச்சகர்களும் வரவேற்பும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின்கீழ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள அர்ச்சகர்கள் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1970-ல் சட்டம் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதேபோல இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களில் ஆறு பாடசாலைகள் அமைக்கப்பட்டு அனைத்து சமூகப் பிரிவினரையும் கொண்ட 240 மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் முறைப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் 240 பேர் ஒன்றரை வருட பயிற்சியை முடித்தனர். இவர்களில் 207 பேர் தேர்ச்சி பெற்றனர். ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 202 பேர் பணிக்காக காத்திருந்தனர். இதில் 2 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டு, 200 பேர் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர்.

நடந்துமுடிந்த தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 கோயில்களில் ’அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அமைச்சர் சேகர் பாபுவால் தொடக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸ்ட் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 பேருக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் வெவ்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமன ஆணையைப் பெற்ற அர்ச்சகர்கள் பலரும் இதற்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

மதுரை ஆனையூரிலிருந்து அருண்குமார்:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உப கோவிலான அருள்மிகு தேரடி கருப்பசாமி திருக்கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் அருண்குமார். கடந்த 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற அருண்குமார் 15 ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தில் தரகு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்ததாகவும் அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் இருந்த நிலையிலும் தனியார் கோவில்களில் அர்ச்சனை பூஜைகள் செய்து அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும் கூறுகிறார்.

தற்போது தமிழக முதல்வரிடம் பணி ஆணையைப் பெற்ற மறுநாளே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான உப கோவிலான தேரடி கருப்பசாமி கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இன்று முதல் அர்ச்சனை செய்யத் தொடங்கியது தனக்கு மிகுந்த பாக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அருண்குமார். தமிழக முதல்வருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது தந்தையும் இதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

விருதுநகர் வத்திராயிருப்பிலிருந்து கண்ணபிரான்:

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பகுதியில் காசி விஸ்வநாதர் கோவிலில் கண்ணபிரான் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பணி ஆணை வழங்கிய தமிழக அரசுக்கு கண்ணபிரான் நன்றி தெரிவித்துள்ளார். 14 வருடங்களாக காத்திருந்ததாகவும், இந்த சேவையை முழுமனதோடு ஏற்று செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை திருப்புனவாசலிலிருந்து இளவழகன்:

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை சேர்ந்தவர் இளவழகன். மதுரை வேத பாட பள்ளியில் வேதம் பயின்ற இவருக்கு, அர்ச்சகர் பணி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். படித்துவிட்டு நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்த இவருக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூவாயி அம்மன் கோவிலில், அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இளவழகன் தனக்கு திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் அர்ச்சகராக பணி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் வேதம் படித்து வரும் அனைத்து சமுதாயத்தினரின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி உள்ளார் முதல்வர் என்று புகழ்ந்து கூறிய அவர், இனி அனைவரும் வேதம் படிக்க தங்களை தயார் செய்துகொள்ள இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். இளவழகன் தமிழில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் காட்சி, கோயிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுவரை சமஸ்கிருதத்தில் புரியாமல் கேட்ட வேதத்தை இனிய தமிழில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் ராஜபாளையத்திலிருந்து வண்ண முத்து:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் ராஜபாளையம் அடுத்துள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலின் குழு கோயில்களின் அர்ச்சகராக வண்ண முத்து என்பவர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த கோயிலின் குழு கோயில்களாக நாகமலை முருகன், விநாயகர், பெருமாள் மற்றும் மாடசாமி உள்ளிட்ட 5 கோயில்கள் உள்ளது. இந்த உப கோயில்களுக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், யாதவ சமுதாயத்தை சேர்ந்த வண்ண முத்து என்பவர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வண்ண முத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற அர்ச்சகர் பயிற்சி நிலையத்தில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றவர். கடந்த 2 தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் கையால் பணி நியமன ஆணையை பெற்ற இவர் இன்று காலை நாகமலை முருகன் திருக்கோயிலில் தனது பணியை தொடங்கினார். மூலவர் முருகன் சன்னதியில் அர்ச்சனை செய்த இவர், தீப ஆராதனை காட்டினார்.

விழுப்புரம் குறிஞ்சிப்பாடியிலிருந்து மகாதேவன்:

விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்கிற மகாதேவன் என்பவரை குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயிலில் அர்ச்சகராக நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. அவர் நேற்றிலிருந்து புத்துமாரியம்மன் கோயிலில் அர்ச்சகராக பூஜை செய்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஆகம விதிப்படி படித்து பட்டம் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் அரசு தங்களுக்கு பணி வழங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார். பக்தர்கள் கேட்கும் மொழியில் அர்ச்சனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் இவர் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாடம்பாக்கத்தில் இருந்து சுஹாஞ்சனா:

சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனா, தேவாரம் பாடி தன்னுடைய பணியைத் தொடங்கினார். பணி உறுதி கிடைத்தால் இன்னும் பல பெண்கள் ஓதுவார் ஆவார்கள் என்றும் இன்னும் பல பெண்களுக்கு ஓதுவார் பணி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, சுஹாஞ்சனா தமிழில் இறைப் பாடல் பாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com