குரங்கு அம்மை தொற்று வராமல் தடுப்பது எப்படி? தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

குரங்கு அம்மை தொற்று வராமல் தடுப்பது எப்படி? தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?
குரங்கு அம்மை தொற்று வராமல் தடுப்பது எப்படி? தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

குரங்கு அம்மை வைரஸ் தொற்று என்பது மிகவும் அரிதான ஒரு நோய். Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது குரங்கு அம்மை வைரஸ். விலங்கியல் நோயான இது தொடக்கத்தில் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் பரவியதாகவும், மிகவும் அரிதாகவே மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடியது எனவும் தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

குரங்கு அம்மை அறிகுறிகள்

காய்ச்சல், தீவிர தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு மற்றும் கணுக்கால் வீக்கம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகக் கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கட்டிகள் போன்ற கொப்புளங்கள் ஏற்படுவதாகவும் WHO தெரிவித்திருக்கிறது. மேலும் தடிப்புகள் முகம், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் அதிகமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

மேலும் வாய்வழி, கண்கள் மற்றும் பிறப்புறுப்புகள் வழியாக அடர்த்தியான சளி போன்ற திரவம் வெளிப்படுவதாகவும் கூறியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 6 - 13 நாட்கள் வரையும், சிலருக்கு 5-21 நாட்கள் வரையும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் WHO தெரிவித்திருக்கிறது.

மனிதனுக்கு எப்படி பரவுகிறது?

குரங்கு அம்மை வைரஸ் தொற்று எளிதில் மனிதனுக்கு மனிதன் பரவாது என்கிறது UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம். 1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக குரங்குகள் வைக்கப்பட்டிருந்த காலனிகளில் இந்த வைரஸ் தொற்று இரண்டுமுறை அதிகளவில் பரவியதால் ’மன்ங்கிபாக்ஸ்’ என பெயர் கொடுக்கப்பட்டதாக CDC தெரிவித்திருக்கிறது.

காங்கோ நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே 1970ஆம் ஆண்டு, மனிதனுக்கு இந்த வைரஸ்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட மிருகத்தின் ரத்தம், உடல் நீர் அல்லது சளி போன்றவற்றுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே இந்த தொற்று பரவும் என்று கூறியுள்ளது WHO. மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட விலங்கின் மாமிசத்தை நன்றாக சமைக்காமல் உட்கொள்ளும்போது தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறது.

தற்போது குரங்கு அம்மை உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவரும் நிலையில், நாடுவிட்டு நாடு பயணம் மேற்கொள்ளுதல், விலங்குகள் வேறு நாடுகளுக்கு கொண்டுவரப்படுதல், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல் அல்லது குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருத்தல் போன்றவற்றாலும் தொற்று எளிதில் பரவுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

குரங்கு அம்மை தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 • குரங்கு அம்மை தொற்று போன்று உடலில் தடிப்புகள் இருப்போரிடம் நெருங்கிய தொடர்பில் இருத்தல் கூடாது.
 • குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதர்கள் பயன்படுத்திய அல்லது தொடர்பில் இருந்த துணிகள், போர்வைகள் மற்றும் பிற பொருட்களை தொடுதல் கூடாது.
 • குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
 • தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதர்களை தொட நேர்ந்தால் உடனடியாக சோப்பு கொண்டு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
 • குரங்கு அம்மை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள விலங்குகளை நெருங்காமலும் நெருங்கவிடாலும் இருத்தல் நலம்.
 • உணவுகளை நன்றாக சமைத்து உண்ணவேண்டும். குறிப்பாக மாமிச உணவுகளை நன்றாக வேகவைத்த பிறகே சாப்பிடவேண்டும்.
 • அடிக்கடி கைகளை சோப்புகொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
 • பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளவேண்டும்.
 • மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் செல்லும்போது மூக்கு மற்றும் வாய் நன்றாக மூடியிருக்கும்படி மாஸ்க் அணிந்து செல்லவேண்டும்.
 • தரைப்பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
 • தொற்றால் பாதிக்கப்பட்டோரை பார்த்துக்கொள்ள நேர்ந்தால் பிபிஇ கிட் அணிந்துகொள்வது தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது?

 • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒருவேளை குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டால் சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.
 • Advil®, Motrin® போன்ற ஐப்யூபுரூஃபன் (ibuprofen) மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் Tylenol® போன்ற அசிடமினோஃபென் (acetaminophen)மருந்தும் தொற்றிலிருந்து விடுபட உதவும்.
 • சரும தடிப்பு உள்ளவர்கள் சூடான தண்ணீரில் ஓட்மீல் கலந்து குளிக்க, உலர்ந்த சருமம் மற்றும் தடிப்பிலிருந்து சிறிது ரிலாக்ஸ் கிடைக்கும்.
 • தொற்று உறுதிசெய்யப்பட்டால் உடலிலுள்ள புண்கள் மற்றும் தடிப்புகள் முழுவதுமாக குணமடையும்வரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
 • மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பரவுவதைக் கட்டுப்படுத்த  பேண்டேஜ்களை(மருத்துவர் பரிந்துரைப்படி) பயன்படுத்தவும்.
 • தொற்று உறுதிசெய்யப்பட்டால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே போதுமான ஓய்வெடுக்க வேண்டும். மேலும் மாஸ்க் அணிதல் அவசியம். இதுதவிர நிறைய பானங்களை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com