பார்சல் உணவுக்கு பாத்திரம் ! நடைமுறை சிக்கலில் ஹோட்டல்கள்

பார்சல் உணவுக்கு பாத்திரம் ! நடைமுறை சிக்கலில் ஹோட்டல்கள்

பார்சல் உணவுக்கு பாத்திரம் ! நடைமுறை சிக்கலில் ஹோட்டல்கள்
Published on

பார்சல் உணவுகளை வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்தால், தள்ளுபடி விலையில் உணவுகளை வழங்கப்படும் என பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக ஹோட்டல் உரிமையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர். 

தமிழக அரசு வரும் ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு எதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. அதேபோல, வேறு எந்தப் பொருட்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உணவு பொருட்களை வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் அதற்கு விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது. கோவையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கோவையை அடுத்த பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாத்திரம் கொண்டு வந்து பார்சல் வாங்கி சென்றால் பத்து சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே பார்சல் உணவுகள் வழங்கப்படுகிறது. தங்களது வியாபாரம் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தில், பாத்திரம் இல்லாதவர்களுக்கு பார்சல் உணவு வழங்காமல் தவிர்த்து வருகின்றனர். இதன் மூலமாவது ஒரு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் கூறுகிறார் ஹோட்டல் உரிமையாளர் பிரேமாவதி.

இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. ஆரம்பத்தில் பார்சல் வாங்க வந்த மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் இருந்தாலும், அடுத்த முறை பார்சல் வாங்க வரும் பொதுமக்கள் தாமாகவே பாத்திரம் கொண்டு வந்து, பார்சல் வாங்கி செல்கின்றனர். இதனால் தங்களுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள். இந்த நடைமுறை இருந்த போதிலும், உணவு விடுதிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அரசாங்கம்மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து உள்ளனர். மேலும் பாத்திரங்களில் பார்சல்களை வாங்கி செல்லும் போது, சில சமயங்களில் உணவுகள் கொட்டுவதால் , இதனை கையாள்வது கடினமாக உள்ளதாகவும் கூறுகின்றனர். 

மக்கும் பிளாஸ்டிக் பைகள், மக்காத பிளாஸ்டிக் பைகள் என தற்போது கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மக்கும் பிளாஸ்டிக் பைகள் அதாவது 50 மைக்ரோன் தடிமம், அதற்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகளை வாங்கும் போது அதற்கான விலை அதிகரிக்கிறது. மீண்டும் அது மக்களிடையே தான் பெறப்படுவதாக கூறுகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பலதரப்பட்ட மக்களும் பல்வேறு யுத்திகளை பின்பற்ற துவங்கி உள்ள சூழலில், இவை அனைத்திற்கும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com