”சென்னையை போல வடிகால் அமைப்பு இந்தியாவில் இல்லை; ஆனால்...”-பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

”சென்னையை போல வடிகால் அமைப்பு இந்தியாவில் இல்லை; ஆனால்...”-பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்
”சென்னையை போல வடிகால் அமைப்பு இந்தியாவில் இல்லை; ஆனால்...”-பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

ஒரே இரவில் பெய்த பெருமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. அது குறித்து ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 6ஆம் தேதி இரவு 10 மணி வரை 3 செ.மீ. மழையும், 1 முதல் 1.45 மணி வரை 6 செ.மீ. மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு வங்கக் கடலில் உள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் அரபிக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. நுங்கம்பாக்கம், ராயபுரம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வேளச்சேரி, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், வீடுகளிலும் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்ததையும் காண முடிந்தது. மழைநீர் சூழ்ந்ததால் சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன.

கொளத்தூர், வில்லிவாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், ஜி.என்.செட்டி சாலை, கே.கே.நகர், சூளைமேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், அசோக்நகர், அண்ணாநகர், பெரம்பூர், நங்கநல்லூர், ஆழ்வார்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி ஆறுபோல ஓடியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனையடுத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்பு படை வீரர்கள் ஃபைபர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். மேலும், தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மழை பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னையில் மழை சற்று ஓய்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் பேசுகையில், ''கடந்த காலங்களிலும் புயல், மழைகள் இருந்துள்ளன. ஆனால், ஒரு பேரிடருக்கும் மற்றொரு பேரிடருக்கும் இடையேயான இடைவெளிகள் குறைந்துகொண்டே வருவதை நாம் உணர வேண்டியிருக்கிறது. இதைத்தான் கால நிலை மாற்றங்கள் என்கிறோம். மழைப்பொழிவு தான் வெள்ளப்பெருக்குக்கு காரணமா என்றால் நிச்சயம் கிடையாது. சதுப்பு நிலங்களையும், நீர்வழித்தடங்களையும், நீர்நிலையங்களையும் முழுவதுமாக ஆக்கிரமித்து நீர் வடியாமல் தடுத்த நம்முடைய தவறு தான் வெள்ளத்துக்கு காரணம். சென்னை போல அற்புதமான இயற்கை வடிகால் கொண்ட நகரம் இந்தியாவிலேயே இல்லை.

இன்றும் நம்மால் இதை செய்துவிட முடியும். 4 நதிகள், 50 பெரிய ஓடைகள், 542 சிறிய ஓடைகள் என பெரிய கால்வாய் அமைப்புகள் இருந்தன. மழை பெய்தால் நீரை சின்ன ஓடை கொண்டு போய் பெரிய ஓடையில் சேர்க்கும். பெரிய ஓடை நதிக்கு கொண்டு செல்லும்; நதி கடலுக்கு எடுத்துச்செல்லும். இந்த வடிகால் அமைப்பு முறையை நாம் சீர்குலைத்துவிட்டோம். மற்றொரு புறம் செயற்கையாக நாம் அமைத்த மழைநீர் வடிகால் மோசமான பொறியியலுக்கான உதாரணம். தண்ணீர் நிற்பது பிரச்னையில்லை. அதனை எவ்வளவு வேகமாக வடிக்க வைக்கிறோம் என்பது தான் நம் முன்னிருக்கும் சவால்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com