பொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது என்ன?- சந்தேகம் உங்களின் தற்காப்பு

பொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது என்ன?- சந்தேகம் உங்களின் தற்காப்பு
பொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது என்ன?- சந்தேகம் உங்களின் தற்காப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஈரக்குலை பதறவைக்கும் அளவுக்கு வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் மட்டுமின்றி உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. யார் பெற்ற பெண்ணோ நம்பிக்கை காட்டி இப்படி மோச வலையில் சிக்கி கதறுகிறதே என அந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மனம் கிடந்து அழும்.

சமூக வலைதளங்களுள் முக்கிய பங்குவகிக்கும் ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்களை குறிவைத்துஆசை வார்த்தைகள் கூறி, 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும் ஒரு கும்பலே பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டி, பணம் கேட்டு மிரட்டுவதும் பணம் தர இயலவில்லை என்றால் அவர்களின் ஆசைக்கிணங்க வைப்பதும் அந்த கும்பலின் வாடிக்கை. கிட்டத்தட்ட 7 வருடங்களாக இந்த கொடூரம் பொள்ளாச்சியில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. நினைத்தாலே தொண்டை அடைக்கும் அளவிற்கு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 5 ஆண்டுகளாகதான் சமூக வலைதளங்கள் பரவலாக எல்லோராலுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கையில் இந்த சம்பவம் ஃபேஸ்புக் மூலம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சி. 

கடந்த மாதம் 24ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வரூபம் எடுத்தது பொள்ளாச்சி வழக்கு. இந்த வழக்கில் முதற்கட்டமாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடப்பட்டது. 

நடந்தது என்ன?

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் தோண்ட தோண்ட அதிரவைக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சி அருகே சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் திருநாவுக்கரசுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில்தான் இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில பிரச்னைகள் காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன் இந்த பண்ணை வீட்டை காலி செய்துவிட்டு பொள்ளாச்சிக்கு தனது குடும்பம் குடியேறியது. இது திருநாவுக்கரசுக்கு தனது பண்ணை வீட்டில் குற்றச்செயல்களை அரங்கேற்ற வசதியாக அமைந்தது. 

திருநாவுக்கரசு கைதாகும் முந்தைய நாள், ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், என் உயிர்போனாலும் இதை நான் கூறுவேன் என கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாளே தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு காவல்துறையால் கைதானார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இச்சம்பவத்தில் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டனர். மேலும், இதில் ஆளுங்கட்சியின் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பூதாகரமானவுடன் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவம் அடங்குவதற்குள் இதே போன்று ஒரு பயங்கரம் நாகையிலும் நடந்துள்ளது. கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சென்னையில் கார் ஓட்டுநராக பணியாற்றும் நாகையை சேர்ந்த சுந்தர் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பல பெண்களுடன் சுந்தர் எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவின. இவர் நாகையை சேர்ந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இருவரும் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பி தனது இச்சைக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் சுந்தர் பல்வேறு வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் எவ்வாறு இதில் விழிப்புணர்வுடன் இருப்பது என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சென்னை மனநல மருத்துவமனையின் டீன் பூர்ணசந்திரிகா பதில்கள் பகிர்ந்துகொண்டார்.

பெண்கள்  எவ்வாறான விழிப்புணர்வுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்?

தற்போது உள்ள சூழலில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதோர் அரிது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் இருந்து விலகுவது கடினம், விளக்கவும் தேவையில்லை. ஆனால் பயன்படுத்தும் விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

முதலில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அதை முதலில் தவிர்க்க வேண்டும். யாரையும் எளிதில் நம்புவதும் அபாயம்; முகம் தெரியாதவர்கள், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதும் குற்றசெயல்களுக்கு வழிவகுக்கும்.

‘சந்தேகம் உங்களின் தற்காப்பு’ 

யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். சந்தேகம் கொள்வது உங்களை தற்காத்து கொள்ள உதவும்.எனவே முகம் தெரிந்த உங்களின் நம்பக வட்டத்தை  மட்டும் சமூக வலைத்தளங்களில் வைத்துகொள்ளுங்கள். அந்த வரம்பை  தாண்டும்போதுதான் பிரச்னைக்கு தூண்டுகோளாகிறது. ஏதேனும் பிரச்னையில் பாதிக்கப்பட்டால் யாரேனும் மிரட்டும் பட்சத்தில் பயப்படாமல் இருக்கவேண்டும். அது அந்த கொடூரர்களை பலவீனமனமடைய செய்யும் முதல் உக்தி ஆகும்.  

பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன? 

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், முதலில் அவர்கள் செல்போனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். எதை அதிகம் பார்க்கிறார்கள், நட்பு வட்டாரம் குறித்து அறிந்துகொள்வது அவசியம். கூடா நட்பும் கேடாய் விளையும் என்பதை இளம்பெண்கள் உணரவேண்டும். எனவே, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் கவனிக்கப்பட வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சரிசமமாக உட்கார்ந்து எதார்த்தங்களையும் உண்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எது அபாயம், எதில் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்தும் அறிவுரைக்கவேண்டும். தெரியாத நபர் அணுகினால் என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…

முக்கியமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களால் அதிலிருந்து மீண்டுவர இயலும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டியது மிகமிக அவசியம். அப்பெண்கள் மனநல மருத்துவரை அணுகுவதும் சரியாக இருக்கும்.

இந்த சம்பவம் வெளிவர காரணமாக இருந்த பெண்ணைதான் முதலில் பாராட்ட வேண்டும். துணிச்சலாக முன்வந்து வழக்கு தொடுத்தது பெரிதும் பாராட்டுக்குரியது. இதற்கு மேலான முழுமுதற் செயல், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் அத்தனையும் வெளிவராமல் ரகசியம் காக்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் குறித்த பாடங்களும் அவசியமாக்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சட்டம் சொல்வது என்ன ?

எவ்வளவுதான் விழிப்புணர்வை மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தற்காப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் பெண்கள் தெரிந்துகொள்வது அவசியமாகியுள்ளது. 

இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன. இதில் ஐபிசி (IPC)பிரிவு 100ல் எதிர்தரப்பினர் நம் உடன்பாடு இன்றி பாலியல் ரீதியாக தாக்கும் போதும், இயற்கைக்கு மாறான முறையில் நம்மிடம் இச்சையை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் சீண்டும் போதும், நம்மை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் போதும், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படும் போதும், சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையிலும், தற்காப்பு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், நம்மை தற்காத்துக் கொள்ளும் போது, எதிரிக்கு எவ்விதமான அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் அவை, குற்றமாக கருதப்படாது என்பன உள்ளிட்ட சில வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை முக்கியத்துவமாக கருதவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com