பிளாஸ்மா தானம் உண்மையில் மனநிறைவைத் தந்தது - அமெரிக்கை நாராயணன் நேர்காணல்

பிளாஸ்மா தானம் உண்மையில் மனநிறைவைத் தந்தது - அமெரிக்கை நாராயணன் நேர்காணல்
பிளாஸ்மா தானம் உண்மையில் மனநிறைவைத் தந்தது - அமெரிக்கை நாராயணன் நேர்காணல்

பிளாஸ்மா தானம் செய்தது தனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற கொரோனா தடுப்பு முன்கள வீரர்கள் போராடிக் கொண்டிருந்தாலும் மக்களாகிய நாமும் அவர்களின் அறிவுரைகளுக்கு ஒத்திசைவு கொள்வது மிக அவசியமாகிறது.

ஆனால் அவர்களின் அறிவுரைகள் சில இடங்களில் முறையாக கடைப்பிடிக்கப்பட்டாலும் சில இடங்களில் மக்களின் அலட்சியப்போக்கினால் காற்றில் பறக்கவிடப்படுகிறது என்பதே இங்கு கசப்பான உண்மையாக இருக்கிறது.  கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வராததும் கவலைகொள்ளும் விஷயமாக பார்க்கபடுகிறது. இதற்கு அரசு சார்பில் இருந்து முறையான விழிப்புணர்வு இல்லை என ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மக்களிடையே பிளாஸ்மா தானம் வழங்குவதில் பெருத்த அச்சம் நிலவுவதே இதற்கு முதன்மையான காரணியாக இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து 16 நாட்களில் கொரோனாவிலிருந்து மீண்டு கடந்த வாரம் சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்துள்ள காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

கொரோனாத் தொற்று அனுபவம் எப்படி இருந்தது?

உண்மையில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கடந்த ஜூன் முதல் வாரத்தில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோம். இதனை தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றோம். நான் கொரோனாவிலிருந்து மீள 16 நாட்கள் பிடித்தது.

பிளாஸ்மா தானம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? அதற்கான காரணம் என்ன?

அடுத்தவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான். நான் கொரோனாவிலிருந்து மீண்ட சில நாட்களிலேயே அரசிடம் நான் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவதாகக் கூறினேன். ஆனால் அப்போது அரசு தயாராக இல்லை. இதனையடுத்து அரசு சார்பில் பிளாஸ்மா தானம் வழங்க கொரோனா வெற்றியாளர்கள் முன் வரலாம் என்ற அறிவிப்பு வந்ததையடுத்து கடந்த சனிக்கிழமை பிளாஸ்மா தானம் செய்தேன்.

பிளாஸ்மா தானம் எப்படி நடந்தது?

பிளாஸ்மா தானம் செய்வதற்கு நீங்கள் அதற்கு தகுதியான நபர்தானா என்பதற்கு பரிசோதனை நடத்தப்படும். அதன் மூலம் மீண்டும் உங்கள் உடல் நலம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். நமது இரத்ததில் உள்ள பிளாஸ்மாவை எடுப்பதற்கென்றே ஒரு கருவி வைத்திருக்கிறார்கள். எனது உடலில் 500 மிலி இரத்தமானது எடுக்கப்பட்டு அந்த கருவியினுள் செலுத்தப்பட்டது.

அந்தக் கருவி எனது ரத்தத்தை மோர் கடைவது போல் நன்றாக கடைந்தது. அதன் பின்னர் எனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட 500 மிலி இரத்தமானது மீண்டும் எனது உடலுக்குள் செலுத்தப்பட்டது. இதற்கு சரியாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை பிடித்தது. அவ்வள்வுதான் பிளாஸ்மா தானம் வழங்கியாயிற்று.

பிளாஸ்மா தானம் வழங்கிய பின்னர் உங்கள் உடலிலும் மனதளவிலும் ஏதேனும் மாற்றங்கள் இருந்ததா?

உடலளவில் எனக்கு எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. நன்றாக இருக்கிறேன். ஆனால் மனதளவில் ஒரு வித மன நிம்மதியும், சந்தோஷமும் இருக்கிறது.

உங்களது வீட்டில் உள்ளவர்களை பிளாஸ்மா தானம் செய்ய அறிவுறுத்தினீர்களா?

எனது மகள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வந்தாள். ஆனால் அரசு சார்பில் தற்போது பெண்கள் உடலிலிருந்து பிளாஸ்மா எடுக்கப்படுவதில்லை என்று கூறிவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com