தன்னை துயரத்திற்கு ஆளாக்கிய நடத்துனருக்காக பரிந்துபேசிய மாற்றுத்திறனாளி மாணவர் - வீடியோ

தன்னை துயரத்திற்கு ஆளாக்கிய நடத்துனருக்காக பரிந்துபேசிய மாற்றுத்திறனாளி மாணவர் - வீடியோ
தன்னை துயரத்திற்கு ஆளாக்கிய நடத்துனருக்காக பரிந்துபேசிய மாற்றுத்திறனாளி மாணவர் - வீடியோ

மன்னிக்க தெரிந்தவன் மனுஷன், மன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன் என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தன்னை துயரத்திற்கு உள்ளாக்கிய அரசு பேருந்து நடத்துனர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம் எனவும் அவரை மன்னித்து விடுமாறும் வேண்டுகோள் விடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து பார்க்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் முகமது பாசில் (20). இவருக்கு பிறவியிலேயே இரண்டு கண்களும் தெரியாத பார்வை மாற்றுத்திறனாளி. முகமது பாசில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. 3 -ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தினமும் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை கல்லூரிக்கு அரசு பேருந்தில் சென்றுவருவது வழக்கம்.

இன்றும் வழக்கம்போல் காலை கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் மதியம் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை சென்ற அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் மாணவர் முகமது பாசில் தனக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அரசு பஸ் நடத்துனர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது; டிக்கெட் வாங்க வேண்டும்; இல்லையென்றால் கீழே இறக்கி விடுவேன் என கூறியதாக தெரிகிறது. (ஓரிஜினல் பாஸ்க்கு பதிலாக ஜெராக்ஸ் வைத்திருந்ததாக கூறப்படுகிறது) இதுகுறித்து மாணவன் அவரது உறவினர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடத்துனரிடம் கொடுத்துள்ளார். அவரிடம் டிக்கெட் எடுத்தாக வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாணவன் முகமது பாசில் பணம் கொடுத்து டிக்கெட் பெற்று காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கியுள்ளார்.

பல பயணிகள் அந்த பேருந்தில் இருந்தும் பார்வை மாற்றுத்திறனாளியான தனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கமும் அந்த மாணவனுக்கு இருந்துள்ளது. இதன்பின் வீட்டுக்கு வந்த அந்த மாணவன் தனது வேதனையை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதில், “நான் காலேஜ் 3ஆம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு பிறவியிலேயே கண் தெரியாது. நான் தனியாகத்தான் காலேஜுக்கு சென்றுவருகிறேன். இன்று மணப்பாறை அரசுப்பேருந்தில் வந்தபோது, எனது மாற்றுத்திறனாளி புத்தகத்தை கண்டக்டரிடம் காட்டினேன்.

அவர் இது செல்லாது; நாங்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். நீ டிக்கெட் தான் எடுக்கவேண்டும். டிக்கெட் எடுக்காவிட்டால் பாதி வழியிலேயே இறக்கி விட்டுவிடுவேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பைப்போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகவே சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினரும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தான் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் அவர் கேட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவரிடம் தேவையில்லாமல் மனிதாபிமானமின்றி அந்த நடத்துனர் டிக்கெட் எடுக்க சொல்லி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பேருந்தின் நடத்துனரை பணியிடை நீக்கம் செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.

இந்தத் தகவலை அறிந்த சம்பந்தப்பட்ட மாணவர் முகமது பாசில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு, தான் ஒருவன் பாதிக்கப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட நடத்துனரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம் என்றும், இதனால் அவரது குடும்பம் பாதிக்கப்படும் என்றும், இனி மேல் தன்னைப்போல மாற்றுத்திறனாளிகளை இதுபோல் அரசு பேருந்து நடத்துனர்கள் அவமதிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரனிடம் போனில் தெரிவித்ததோடு அவரை மன்னித்து விட்டு விடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளான தங்களைப் போன்றவர்கள் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனதளவில் தாங்கள் அனைவரும் முழு தைரியத்தோடு தான் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும், அப்படிப்பட்ட சூழலில் தங்களை இழிவாக யாரும் நடத்த வேண்டாம் என்றும் மீண்டும் அவர் சமூக வலைதளங்களில் வீடியோவையும் பதிவிட்டு இருந்தார்.

இரு கண்களும் தெரியாத மாற்று திறனாளியான தான் பாதிக்கப்பட்டாலும் தன்னால் ஒரு நடத்துனரின் குடும்பம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து சம்பந்தப்பட்ட நடத்துனரை மன்னித்து விடுமாறு மாற்றுத்திறனாளி மாணவரான முகமது பாசில் மன நெகிழ்வோடு கூறியுள்ளது மனிதநேயத்தின் உச்சம் என்பதோடு மட்டுமல்லாமல் யார் மாற்றுத்திறனாளி என்ற கேள்வியையும் இந்த சமூகத்தின் முன் எழுப்பி உள்ளது.

மனிதநேயமிக்க மாற்றுத்திறனாளி மாணவரின்  கோரிக்கை அதிகாரிகளை நெகிழ வைத்தாலும்,விதிமுறைகளின் அடிப்படையில் தற்போது சம்பந்தப்பட்ட நடத்துனரை பணியிடை நீக்கம் செய்துள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் அவருக்கு பணி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாணவர் பேசிய வீடியோ இந்த ட்விட்டர் பதிவில்..

தகவல் - முத்து பழம்பதி, தொகுப்பு - சினேகதாரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com