“அரசு உதவினால் நிச்சயம் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்” - விருதுநகர் மாற்றுத்திறனாளி
அருப்புக்கோட்டை அருகே கத்தாளம்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளியொருவர், பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று தான் பிறந்த கிராமத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்ற முயற்சியில் தன்னம்பிக்கையுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தனக்கு அரசின் உதவிகள் கிடைத்தால், தன்னால் இன்னும் கூடுதலாக உழைக்க முடியும், நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்ல முடியுமென நம்பிக்கையுடன் கூறுகிறார் அவர்.
விருதுநகர் மாவட்டம் M.ரெட்டியபட்டி அருகே கத்தாளம்பட்டி குக்கிராமத்தை சேர்ந்தவ 21 வயது இளைஞர் தினேஷ். தனது பெரியப்பா பெரியம்மாவுடன் வசித்துவரும் இவர், பிறவியிலிருந்தே கண் பார்வை குறைபாடு உடையவர். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட தினேஷ், கல்லூரி படிக்கும் பொழுது பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
அந்தவகையில் தனது கல்லூரிப் பேராசிரியர் செல்லப்பாண்டி துணையுடன் மதுரையைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் சரவண ராம் மூலம் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்துள்ளார். அப்படி அவர் கலந்துக்கொண்ட போட்டிகளில் பெரும்பாலானவற்றில் பல்வேறு பதக்கங்களை பெற்று வீட்டில் குவித்து வைத்திருகிறார் தினேஷ்.
கல்லுரியில் படிக்கும் போதே பல தேசிய மற்றும் மாநில அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார் என்றபோதிலும் அவற்றில் முக்கியமானவையாக இருப்பவை, தென்னிந்திய அளவிலான 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், 200 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம், 100 மீட்டர் ஓட்டத்தில் 3ம் இடம் பெற்று வாங்கிய பதக்கங்கள்தாம் என்கிறார் அவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பாரா ஒலிம்பிக்கிற்கான, தகுதிச் சுற்றுப் போட்டியில் (2019ல் இப்போட்டி நடந்தது) அவர் கலந்துக்கொண்டிருந்தார். அப்போட்டி காரைக்குடியில் நடைபெற்ற அப்போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 13 வினாடிகளில் கடந்து பாரா ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார் அவர். ஆனால் எதிர்பாராவிதமாக அந்த ஆண்டு கொரோனோ காரணமாக பாரா ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 2020 ல் அவருடைய ஒலிம்பிக்ஸ் கனவு நினைவாகவில்லை.
2021 ஆம் ஆண்டு கலந்துக்கொள்ளலாம் என நினைத்தபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியாமல் தவித்துள்ளார் தினேஷ். இதுபற்றி தற்போது நம்மிடையே பேசிய அவர், இனி வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு தடகள போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்று கூறினார். இதற்காக தனது கிராமத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அவர்.
ஆனால் 2019-ல் பாரா ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றும் தனக்கு எந்த ஒரு அங்கீகாரமும் தமிழக அரசு சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்தும் தனக்கு கிடைக்கவில்லை எனக்கூறிகிறார் அவர். இம்முறை இனிதான் தகுதி பெறும் போட்டிகள் நடைபெறும் என்பதால், உரிய முறையில் இப்போதிருந்தே அங்கீகாரம் கிடைத்தால் விரைவில் இலக்கை அடைய முடியுமென்கிறார் அவர். அரசு அவ்வுதவிகளை தனக்கு செய்யவேண்டுமென கோரிக்கையும் வைக்கிறார். மாற்றுத்திறனாளியாளியான அவரின் விடாமுயற்சியையும், தகுதியையும் அரசு அங்கீகரித்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக்கிற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நிச்சயம் உருவாவார் என்றே தெரிகிறது.
- T. நவநீதகணேஷ்