ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 18 | நல்ல மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
A MAN WHO STOPS ADVERTISING TO SAVE MONEY IS LIKE A MAN WHO STOPS THE CLOCK TO SAVE THE TIME
HENRY FORD
மருத்துவர்கள் விளம்பரம் தரலாமா?
மருத்துவமனைகள் விளம்பரம் தரலாம் என்றது தான் தாமதம், சில நண்பர்கள் அதிர்வுக்கு உள்ளாகிவிட்டனர். மருத்துவர்கள் எதற்காக விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கேள்விகளை முன் வைத்தனர். இதில் வாசகர்களின் பார்வையில் ஒரு சிலர் கேட்ட கேள்விகள் நியாயமானதாக இருந்தன.
அவற்றில் சில:
1) மருத்துவர்கள் அவர்களது துறையின் கட்டுப்பாட்டின்படி விளம்பரங்கள் செய்வதற்குத் தடை இருக்காதா?
2) இப்படி எல்லா மருத்துவமனைகளும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தால், எதை நம்புவது, மக்களை ஏமாற்றும் வேலையாக மாறிவிடாதா?
முதல் கேள்வி கேட்ட நண்பர்களுக்காக:
மருத்துவத் துறையில் அவ்வப்போது சில ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் வரைமுறைகளையும் மாற்றிக்கொண்டே வருவார்கள். அதன்படி மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் பங்களிப்பும் கண்காணிப்புக்கு உட்படுகின்றன. தவறான தகவல்களைப் பரப்பினாலோ, உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டாலும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு மருத்துவர்கள் உள்ளாவார்கள் என்பது மருத்துவர்களுக்கும் தெரியும்.
இரண்டாவது கேள்வி கேட்ட நண்பர்களுக்காக:
எல்லா மருத்துவமனைகளும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தால் மக்கள் எதை நம்புவார்கள் என்பது தான் ஓர் உணர்வுப்பூர்வமான கேள்வி.
தீபாவளி நேரம், டிவியைத் திறந்தால் ஒரு பனியன் ஜட்டிக்கு ஏழெட்டு நிறுவனங்கள் விளம்பரங்கள் தருகின்றன. எந்த உள்ளாடையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
உள்ளாடையும், உயிரும் ஒன்றா? என்ற கேள்வி நம் முன் எழும்.
உணவுப்பொருளை எடுங்கள், க்ளோப்ஜாமூன் மாவிற்கு நான்கைந்து நிறுவனங்கள் விளம்பரங்கள் தருகின்றன. 'அழகான உறுதியான ஒரு எவர்சில்வர் ஸ்பூன் இலவசம்' என்பார்கள். க்ளோப்ஜாமூன் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சினை வருமா? அதில் மைதா இருக்கிறதா? உடலுக்குக் கேடு விளைவிக்குமா? என்றெல்லாம் தெரியாது, "அழகான, உறுதியான எவர் சில்வர் ஸ்பூன் "மட்டும் தான் கண்ணில் படும்.
யாருமே, க்ளோப்ஜாமூன் மென்மையாகத்தானே இருக்கும் அதற்கு எதற்கு உறுதியான ஸ்பூன் என்று கேட்கமாட்டோம்? 'அழகான உறுதியான' என்பதைத் தாண்டி 'ஒரு ஸ்பூன் இலவசம்' என்பது தான் ஈர்ப்பு. க்ளோப்ஜாமூன் உயிர் பிரச்சினை தராதா என்ன? எப்படி அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கிறோம்?
காப்பீடு திட்டங்களின் விளம்பரங்களைப் பார்த்தால், 'நாளைக்கே நாம் செத்து நம் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது' போன்ற ஒரு கற்பனையைக் காண்பிப்பார்கள். எந்தக் காப்பீட்டுத் திட்டத்தை நம்பி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்போம்? க்ளோப் ஜாமூனையாவது சாப்பிட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். காப்பீடு திட்டங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? வாழ்வதற்காகச் சாகவா முடியும்?
விளம்பரங்கள் எல்லாமே ஒரு வகையான கண்காட்சி போன்றவை தான். நீங்கள் தினமும் ஆயிரம் மனிதர்களைப் பார்க்கிறீர்கள், அத்தனை மனிதர்களுடனும் நாம் உறவு பாராட்டுவது கிடையாது. அதைப் போலத்தான் விளம்பரங்களின் வழி மருத்துவமனைகளைக் கண்டடைவதும்.
எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மருத்துவமனை?
கல்லூரி படித்துக்கொண்டிருந்த நேரத்தில் பகுதி நேர வேலையாக ஓர் அரசு அலுவலகத்தில் தட்டச்சு வேலைக்காகச் சென்றிருக்கிறேன். அங்கு இருந்த ஓர் அரசு அதிகாரி தினமும் எனக்குச் சில வேலைகளை ஒதுக்கித் தருவார். படிப்பு முடிந்து நான் வேலைக்கு வரும்பொழுது இன்னொரு நபரை நியமித்துவிட்டுப் பிரிந்துவிட்டேன். சில நாட்கள் கழித்துத் தற்செயலாக அந்த அதிகாரியை வழியில் பார்த்தேன், என் வேலைகளைப் பற்றிக் கேட்டதும், எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று அவருக்குச் சொல்லித்தரமுடியுமா? என்று கேட்டார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த உரையாடலில் அவர் ஒரு முக்கியமான இடத்திற்கு வந்திருந்ததை உணர்ந்திருந்தேன். " தம்பி , நாளைக்கே எனக்கு ஏதாவது ஒன்றுனா, என் வீடு இருக்குற ஏரியால எந்த மருத்துவமனைக்குப் போகலாம் ?" என்று கேட்டார். வேலைக்குச் சேர்ந்து மூன்று மாத அனுபவத்தில் அப்படியான கேள்வியை அதற்கு முன்பு நான் எதிர்கொண்டதில்லை. சில சீனியர்களிடம் விசாரித்து அவருக்கானப் பதிலைக் கூறிவிட்டேன் என்றாலும், அந்தக் கேள்வி எனக்கு மனதில் நின்றுவிட்டது.
என்னுடன் படித்த சில நண்பர்கள் வேலை நிமித்தம் வெளியூரில் இருக்கிறார்கள், அவர்களது பெற்றோர் மதுரைக்குள் தான் இருப்பார்கள், அவ்வப்போது அவர்களது உடல்நிலை சார்ந்து நண்பர்கள் அழைப்பார்கள், அருகில் உள்ள மருத்துவமனையைப் பரிந்துரைப்பது வழக்கம்.
இது போதாது என்று, காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய குழப்பஙகள் வந்தன. கல்லூரி முடிந்து வேலைக்குப் போகும் யாவருமே சந்திக்கும் ஒரு பழக்கம் உண்டு. அது, இன்ஷ்யூரன்ஸ் முகவர்களைச் சந்திப்பது. எந்தக் காப்பீடுத் திட்டத்தில் பணத்தைச் செலுத்திப் பாதுகாப்பது என்று அவர்கள் வழிகாட்டுவார்கள்.
மருத்துவமனைக்காகக் காப்பீடு திட்டம்:
எனக்கும் சிலர் அறிவுரை கூற, சில இன்ஷ்யூரன்ஸ் நிறுவன முகவர்களைச் சந்தித்து, எந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என்று தரவுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைத் தான் சில நண்பர்கள் தொடர்ந்து பரிந்துரைத்தார்கள், காரணம், விளம்பரங்கள். எங்குச் சென்றாலும், அந்த நிறுவனத்தின் விளம்பரம் தான் கண்ணில் பட்டது. அது குறித்த தரவுகள் தான் அதிகமாகக் கிடைத்தன. இருந்தாலும் குழப்பத்துடன் முடிவு எடுக்க முடியாமல், அத்துறை சார்ந்த நண்பன் ஒருவனிடம் போய் நின்றேன். அவன் ஒரு யோசனை சொன்னான்.
எதிர்காலத்தில் எனக்கு ஏதாவது ஒரு பெரிய அவசரமான உடல்நலம் சார்ந்து பிரச்சினை வந்தால் எந்த மருத்துவமனைக்குப் போகலாம் என்று தோன்றுகிறதோ, அந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து, அந்த மருத்துவமனை எந்தெந்த காப்பீட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டு அந்தக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கச்சொன்னான். அவன் சொன்னது போல் எந்த மருத்துவமனையில் எனக்கு வசதிகள் கிடைக்கும் என்று தோன்றியதோ, அந்த மருத்துவமனைக்குச் சென்று விசாரிக்க, எந்தக் காப்பீட்டு நிறுவனத்தில் பாலிஸி எடுக்க நினைத்தேனோ, அந்த நிறுவன அட்மிஷன் களை அந்த மருத்துவமனை நிறுத்திவைத்திருந்தது. 'ஏகப்பட்ட பணம் பாக்கி தம்பி, அதனால், அந்த இன்ஷீயூரன்ஸ் வச்சிருந்தா, நீங்க பணம் கட்டிட்டு நீங்களே அவங்கட்ட க்ளைம் பண்ணிக்கோங்க' என்றார்கள். 2005 வருடவாக்கில் கையில் பணம் வைத்துச் செலவளித்துப் பிறகு நிறுவனத்திடம் வாங்குமளவில் என் பொருளாதாரமும் இல்லை, மன தைரியமும் இல்லை.
பிறகு எந்த நிறுவனம் 'பணமில்லா சிகிச்சை' தருகிறது என்று மருத்துவமனையில் விசாரித்து, அந்த நிறுவனத்தின் பாலிஸியை எடுத்துக்கொண்டேன்.
(இது ஓர் அனுபவப்பூர்வ பதிவு என்பதால், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்களின் வழி வாய்ப்புகள் கிடைக்கும். அவரவர் அனுபவங்கள் வழியே அல்லது துறை சார் வல்லுனர்கள் வழி பயனடையலாம்).
ஒரு பனியன் தேர்ந்தெடுப்பதைப் போல , ஒரு க்ளோப்ஜாமூன் தேர்ந்தெடுப்பது போல, ஒரு காப்பீடு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது போல நமக்கான மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கவும் சில அளவுகோல்கள் உள்ளன.
'எந்த மருத்துவமனை நமக்கு அருகில் உள்ளது, '
'யார் நம் குடும்ப மருத்துவர்,'
'நம் குடும்ப மருத்துவர் எந்த மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறார்,'
'அவர் அந்த மருத்துவமனையைப் பரிந்துரைக்கக் காரணம் எதுவும் தெரிவிக்கிறாரா?'
'நம் உடல் நலம் சார்ந்து நமக்கு ஏதேனும் காப்பீடு திட்டங்கள் இருக்கின்றனவா?'
'அந்தக் காப்பீடு திட்டம் நமக்கு வந்திருக்கும் உடல் நலப் பிரச்சினையைப் பொருளாதார ரீதியில் காக்கத் தகுந்ததா?'
'எந்தப் பிரச்சினைக்காக ஒரு மருத்துவமனையை அணுகுகிறோமோ அந்த மருத்துவமனையில் அதற்கான உள்ளடக்கக் கட்டுமானங்கள் ( மருத்துவ உபகரணங்கள், அறுவைச்சிகிச்சை அறை, I C U ) போன்றவை இருக்கின்றனவா?' ?
'எந்த நோய்க்காகச் செல்கிறோமோ, அந்த நோய் சார் துறையில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் தலைமை இருக்கிறதா? '
இவையும் இவை சார்ந்து மற்றவையும் தான் ஒரு சாமான்யன் ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க உதவும் காரணிகள். மற்றபடி போக்குவரத்து, கட்டணங்கள், வசதி இவையெல்லாம் அவரவர் பார்வை பொருத்தது.
பெரிய முதலீடுகளைப் போட்டு வரும் எந்த முதலாளியும் தன் விற்பனைக்காக நுகர்வோரை ஈர்க்கும்விதம் பல வழிகளில் விளம்பரங்கள் தருவார்கள். அவற்றிற்கு மருத்துவமனைகளும் விலக்கு அல்ல. அவற்றில் நல்லவனவற்றைத் தேர்ந்தெடுப்பது சாமான்யனின் கடமையே.
எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரது குடும்பத்தில் அவர் தான் " பெரிய உத்தி"- அதாவது என்ன நல்லது கெட்டது என்றாலும் அவரைத்தான் கேட்பார்கள். உறவினர் ஒருவருக்கு ஏதோ நோய் என்று சொல்ல , அவரது கிராமத்தின் அருகில் உள்ள பெரிய நகரத்தின் பெரிய மருத்துவமனையைச் சொல்லியிருக்கிறார். நோயாளியும் அட்மிட் ஆகியிருக்கிறார். மூன்று நாட்கள் கழித்து விசயம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த உறவினரை நேரில் பார்க்கச் சென்றபோது தான் ஏன் அந்த மருத்துவமனையை அவர் பரிந்துரைத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கிறது. அவர் வீட்டு கேபிள் லோக்கல் சேனலில் அந்த மருத்துவமனை விளம்பரம் தந்திருக்கிறது, இரண்டாவது மாடியிலும் நான்காவது மாடியிலும் " FOOD COURT " வசதி உள்ளதைப் பார்த்திருக்கிறார். விளம்பரத்தில் FOOD COURT-ஐயே மிகைப்படுத்திக் காண்பித்தார்களாம். கிட்டத்தட்ட "ஓர் அழகான உறுதியான ஸ்பூன் இலவசம் " வகையறா தான் இதுவும்.
ஆஸ்பத்திரி நல்ல பெரிய ஆஸ்பத்திரிப்பா, உள்ளுக்குள்ளேயே ஹோட்டல்லாம் வச்சிருக்காங்க பாரு அதாஞ்சொன்னேன் இங்கே என்று பிரம்மிச்சாராம்.
FOOD COURT-க்காக ஒரு நோயாளியை ஐ சி யூக்குள் படுக்கவைத்திருக்கிறது ஒரு குடும்பம்.
நீங்கள் மருத்துவமனையில் FOOD COURT போவதுண்டா?
தொடரும்..

