ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 17 | மருத்துவமனைகள் விளம்பரங்கள் தரலாமா?
THE GREATEST MEDICINE OF ALL IS TEACHING PEOPLE HOW NOT TO NEED IT
HIPPOCRATES
மனதிலிருந்துப் பேசமுடிகிறதா?
கடைசியாக வந்த மூன்று கட்டுரைகளைக் குறிப்பிட்டு ஒரு மருத்துவர் பேசினார். மருத்துவமனையை வெளியிலிருந்துப் பார்த்துத்தான் நிறைய பேர் எழுதுவார்கள், நான் உள்ளிருந்துகொண்டு எழுதுவது போலிருக்கிறது என்று கூறினார். குறிப்பாக 15வது வாரத்தில் நான் குறிப்பிட்ட ஒரு மருத்துவரது உழைப்பையும் அந்த நோயாளியின் உறவினர்கள் நடந்துகொண்டதையும் பற்றிப் பேசியவர் அவருக்கு நிகழ்ந்த அனுபவங்களை விவரித்தார். ( உடனே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம், அதைப் பற்றி இப்பொழுது எழுதவில்லை) .
கடந்த வாரம் தீபாவளி பற்றி எழுதிய பதிவுகளுக்கு இன்னொரு மருத்துவ நண்பர் அழைத்தார். அவர் தன் பண்டிகைக் காலங்களிலெல்லாம் எப்படி மருத்துவமனையோடு ஒன்றிணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று பகிர்ந்தார்.
கூடுதலாக, ஒரு மருத்துவர் , இவையெல்லாம் என் மனசுல இருக்குற விசயங்கள், எழுதமுடியாம, இன்னொருத்தர்ட்ட பகிர முடியாம இருக்குற விசயங்கள், இதை நீங்க எழுதுறீங்க, ஆனால் எத்தனை மருத்துவர்களும், எத்தனை பொதுமக்களும் இதைப் படிப்பாங்களோ தெரியலயே " என்று சொன்னார்.
சில விசயங்களை நாம் வெளிப்படையாகச் சொல்லும்பொழுது தான் அது பற்றிய மற்ற உணர்வுகளும், கருத்துகளும் வெளிவரும்.
எதைப் பேசுகிறோமோ அதுவே செயல்பாட்டுக்கு வரும்:
"ஹார்ட் அட்டாக்" வந்த ஒரு நோயாளியைக் காப்பாற்றிய ஒரு மருத்துவரைப் பற்றி எழுதியவுடன், பாம்பு கடித்து வந்த நோயாளியைக் காப்பாற்றிய இன்னொரு மருத்துவரை இன்னொரு நண்பர் கூறுகிறார்.
மார்க்கெட்டிங்கில் நாங்கள் ஒரு விசயத்தைச் சொல்வோம், எந்தப் பொருளை விற்க விரும்புகிறோமோ, அந்தப் பொருளைப் பற்றிப் பேச வேண்டும் என்போம்.
எதைப் பற்றிப் பேசுகிறோமோ அது குறித்துச் சிந்திக்க ஆரம்பிப்போம், எது குறித்து சிந்திக்க ஆரம்பிக்கிறோமோ அது குறித்துச் செயல்பாடுகளை ஆரம்பிப்போம். எது குறித்துச் செயல்படுகிறோமோ, அதை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
அதனால் தான் பெரியவர்கள், நல்லவற்றைப் பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறாரகள்.
மருத்துவர்கள் பொதுவாக தன் சாதனைகளைச் சதா சொல்லிக்கொண்டே இருக்கமாட்டார்கள், அவர்களுக்கு நேரமில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவரைக் குணப்படுத்துவது அவர்களுக்குத் தொழில் ரீதியான சாதனை என்றாலும், அவர்களுக்கு அது தான் தினந்தோறும் உள்ள வேலை. அதனால் அதை அவர்கள் ஒரு சாதாரண வேலையாகக் கருதி நகர்ந்துவிடுகிறார்கள்.
தோல்வியில் தேங்கிப்போவோர்கள் எப்படி அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருக்கிறார்களோ, அதே போல் வெற்றியில் தேங்கி அடுத்தகட்ட உயர்விற்கு நகராதவர்களும் உண்டு.
அதனாலேயே மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியும் குணமடைவதை அன்றாட வழக்கமான விசயங்களாக நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்த விசயத்தில் மருத்துவர்கள் கொஞ்சம் மாறிக்கொள்வது தான் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
விளம்பரங்களும் மருத்துவர்களும்:
ஒரு காலத்தில் முக்கியமாக 90களில் சில மருத்துவர்கள் குறிப்பாக மாற்றுமருத்துவத்தைச் சார்ந்தவர்கள், ஒரு நோயாளியை அருகில் அமரவைத்துக்கொண்டு இவர் வரும்பொழுது இப்படி வந்தார், இப்போது பாருங்கள், என்று அந்த நோயாளியைப் பேச வைத்து, செயல்படவைத்துக் காண்பிப்பார்கள். அந்த நோயாளியும், வரும்போது அப்படி இருந்தேன், இப்போது என்று சொல்ல சொல்ல அவரது உதவியாளர் கண்ணீர் சிந்துவார். இப்படியான நிகழ்ச்சியை அரை மணி நேரம் டிவியில் காட்டிக்கொண்டிருப்பார்கள். இடையிடையே விளம்பரம் வரும். எனக்குத் தெரிந்து அந்த மருத்துவ நேரமே ஒரு விளம்பர நிகழ்ச்சி தான், அதற்குள்ளும் விளம்பரம் போட்டு காசு பார்த்தது டிவி நிலையங்கள்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்பொழுது இந்தமாதிரியான மருத்துவ நிகழ்ச்சியை ஒரு மேடை நிகழ்ச்சிக்காகப் பகடி செய்ய முயற்சி செய்தோம் . குடி போதையில் உள்ள ஒரு நோயாளியை அவர் வீட்டார், நோயாளியைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறும்படியாயும், அந்தப் பிரச்சினையைத் தீர்த்த மருத்துவர் ஒரு கேமரா முன்பு அமர்ந்துகொண்டு பாருங்க, வரப்ப இவர சமாளிக்க முடியலனு இவரோட குடும்பத்தார் சொன்னாங்க, இப்ப பாருங்க, எல்லாரும் சந்தோசமா இருக்காங்க, காரணம், வீட்ல எல்லோரையும் குடிக்க வச்சுட்டோம் "னு அந்த நிகழ்ச்சி முடியும். ஆனால் அந்த விழாவிற்குத் தலைமையேற்றது ஒரு மருத்துவர் என்பதால், அதை நாங்கள் செய்யமுடியாமல் போனது.
அந்தளவிற்குத் தான் மருத்துவ நிகழ்ச்சிகள் 90களில் இருந்தன. அப்படியான விளம்பரங்கள் மீது மக்களுக்கு ஒவ்வாமை இருந்தது.
ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இப்போதைய தலைமுறை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், ரீல்ஸ்களை நம்பும் காலம். ரீல்ஸ் களில் அதிக லைக் வாங்கும் ஒரு நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி என்று பெயர் வாங்குகிறது.
தரம் அல்லது அதிக அளவு:
QUALITY VS QUANTITY என்று தரம் பிரித்துப்பார்த்தால், QUANTITY அதிகம் காண்பித்தால் போதும், தரம் அதாவது QUALITY பற்றிக் கவலைப்படாத சமூகமாக மாறிக்கொண்டு வருகிறது .
எப்படியும் " தரம்" தான் வெல்லும் என்ற நிலையை அடைய குறைந்தபட்சம் பத்து வருடங்கள் ஆகிவிடும், அதற்குள் சந்தையில் பொருளாதார ரீதியாகக் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
இப்படி பின் நவீனத்துவ மொழியில் எழுதிக்கொண்டே போனால் போய்ச்சேர்பவர்களுக்குச் சென்று சேராது.
SECOND OPINION என்னும் இரண்டாவது மருத்துவ கருத்துக்கேட்பு:
உதாரணம் காணலாம், ஒரு மருத்துவர் இருக்கிறார், அவரிடம் நான் ஒரு நோயாளியை அனுப்பியிருந்தேன். தீராத வலியென்றும், ஓர் அறுவைச்சிகிச்சை தேவைப்படும் என்றும் அந்த நோயாளிக்கு இன்னொரு மருத்துவர் கூறியிருந்தார். அதனால் இரண்டாம் முறையாகக் கருத்து கேட்க வேண்டும் என்று அந்த நோயாளி கேட்டதற்காக எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அனுப்பியிருந்தேன்.
அந்த நண்பர் மருத்துவர், பரிசோதித்துவிட்டு, இப்போதைக்கு மாத்திரை போதும், தேவைப்பட்டால், அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளலாம், எதற்கும் மாத்திரையில் குணமாகிறதா என்று பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். சரியாக, ஏழு வருடங்கள் தாண்டிவிட்டன, நோயாளி இதுவரை அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளவில்லை, சரியாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். என்னைப் பொருத்தவரை, அந்த நண்பர் மருத்துவர் செய்தது சாதனை தான், " டாக்டர், இதெல்லாம் நீங்க விளம்பரப்படுத்தலாம்ல, " என்றேன்.
இதப்போயி என்னத்த சொல்வீங்க, இதுலாம் நீங்கள் எழுதுன " தொழில் அறம் " என்றார்.
எதற்காக விளம்பரம் தேவை:
அந்த மருத்துவரை எந்த டிவியிலும் நிகழ்ச்சியில் அருகில் ஒரு நோயாளியை வைத்துக்கொண்டு, " பாருங்க நேயர்களே, இவர் வரப்ப, ஆப் ரேஷன் பண்ணுவீர்களா னு கேட்டு வந்தார், இப்ப பாருங்க ஏழு வருஷமாச்சு, ஆப் ரேஷனே இல்லாம சரி பண்ணிட்டோம், இந்தாங்க வாய திறந்து சொல்லுங்க என்று நோயாளியிடம் மைக்கை நீட்ட மாட்டார்" ஒரு நாளைக்கு 200 நோயாளி என்று பெரிய கூட்டம்லாம் இல்லை. அவர் ஒரு சாதாரண மருத்துவமனை வைத்திருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் இல்லை, ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதில்லை. அவர் ஒரு போஸ்ட் போட்டால் யாருக்காகவாவது பிறந்த நாள் வாழ்த்துகள்னு போட்டால் தான் உண்டு. சமயத்தில் அவர் யாருக்கு வாழ்த்து சொல்வாரோ, அவரே அந்தப் பதிவிற்கு லைக் போடாமல் " அனாமத்தாக' இருக்கும். லைக் வைத்து, இன்ஸ்டாகிராம் ரீல் வைத்துப்பார்த்தால் இவர் யாரென்றே தெரியாது. அதற்காக இவர் நல்ல டாக்டர் இல்லை என்றாகிவிடுமா? ஆனால் சமுதாயமாகிய நாம் என்ன செய்கிறோம் என்றால், நவீன காலகட்டத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
நானே, அந்த மருத்துவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் என்று .
தரமான பொருள் எது என்று தேடிக் கண்டுபிடிக்க மக்கள் மாற வேண்டும், மக்களைப் பொருத்தவரை சமுதாயத்தின் மந்தை மனநிலைக்குள் நுழைந்துதான் வெளியே வருவார்கள். அதனால் இப்போதைய காலகட்டத்தில், தரமான பொருள் தான் மக்களை நோக்கி நகர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
80களில் ஒரு பொருள் விளம்பரத்திற்கு வந்துவிட்டால் அது விற்பனை ஆகவில்லை, அதனால் விளம்பரத்திற்கு வந்துவிட்டார்கள் என்பார்கள். இப்பொழுதைய காலகட்டம் வேறு.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், உலகமயமாக்கலுக்குப் பின் சந்தை நுகர்வோர்களின் கைகளுக்கு வந்துவிட்டது. எந்தப் பொருள் சந்தையில் நிலைக்கும் என்பதை நுகர்வோரின் வாங்குதிறனே முடிவு செய்கிறது. அதனால் தான் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் நுகர்வோரைத் தேடிவருகின்றன.
ஒரு காலத்தில் B TO B ( வினியோகஸ்தர்களுக்கு மட்டும் சப்ளை செய்யும் மொத்த விற்பனையாளர் ) BUSINESS TO BUSINESS ல் ஈடுபட்ட பெரிய நிறுவனங்கள் எல்லாம் நேரடியாக நுகர்வோரைத் தேடி வருகின்றன. டாட்டா நிறுவனத்திற்கு இல்லாத வருமானமா, அல்லது தொழிற்சாலைகளா, உற்பத்திக்கூடங்களா? இப்பொழுது பாருங்கள், சில்லறை விற்பனையில் வீட்டு எலக்ட்ரிக் பொருட்கள், துணிக்கடைகள், உணவுப்பொருட்கள் என்று கடையை நுகர்வோரைத் தேடி விரித்துவிட்டன. இன்னும் இது எங்கள் தாத்தா காலத்துக் கடை, தாத்தா பெரிய மருத்துவர் எங்க ஊர்லயே எங்க ஆஸ்பத்திரி தான் பெரிது என்று மார்தட்டும் மருத்துவர்களை " பூமர் அங்கிள்" என்று இப்போதைய ஜென் சீ குழந்தைகள் ஒதுக்கிவிடுவார்கள்.
ஆதலால், மருத்துவமனைகள் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கக்கூடாது. ஒரு மருத்துவர் தன் நிகரற்ற சாதனைகளைச் சாமான்யர்களுக்கும் புரியும்படியாக வெளிப்படுத்துவது நல்லது.
ஹிப்போகிரேடஸ் சொன்னது தான், நான் அதை விளம்பரமாகச் செய்யச் சொல்கிறேன்.
விளம்பரங்களை நம்பும் அப்பாவி மக்களுக்கு உழைப்பையும் உண்மையையும், விழிப்புணர்வையும் அவர்கள் விரும்பும் ஊடக வழியாகத் தருவதில் தவறில்லை.
தொடரும்..

